படக்குறிப்பு, துபையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் கண்காட்சி நிகழ்வின்போது தேஜஸ் விமானம் (நவம்பர் 20ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்)
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
துபையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் இன்று (நவம்பர் 21) பிற்பகல் விபத்திற்குள்ளானது.
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:10 மணியளவில் பார்வையாளர்கள் முன்னிலையில் வான் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இந்திய விமானப் படை, இந்த விபத்தில் விமானி உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
“விமானியின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தத் துயரமான நேரத்தில் விமானியின் குடும்பத்தினருடன் துணை நிற்கிறோம்,” என்று விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,
அதோடு, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியில், ஏபி செய்தி முகமை, “துபையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. விபத்து நடந்தபோது, விமான நிலையத்தில் புகைமூட்டம் எழுந்தது, சைரன்கள் ஒலித்தன,” என்று குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “துபை ஏர் ஷோவில் விமான சாகசத்தின்போது ஒரு இந்திய தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்பு மற்றும் அவசரக்கால குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, அங்குள்ள சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.
தேஜஸ் போர் விமானத்தின் சிறப்பு
தேஜஸ் போர் விமானம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் முற்றிலுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.
இது எதிரி விமானங்களைத் தொலைவில் இருந்தே குறிவைத்து தாக்கும் மற்றும் எதிரி ரேடாரை தவிர்க்கும் திறன் கொண்டது.
அதோடு, சுகோய் விமானத்தைப் போலவே, அதே எண்ணிக்கையிலான ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் இது சுமந்து செல்லக்கூடியது.
தேஜஸ் விமானம் 2004ஆம் ஆண்டு முதல் மேம்படுத்தப்பட்ட F404-GE-IN20 எலக்ட்ரிக் எஞ்சினை பயன்படுத்தி வருகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள தேஜஸ் மார்க் 1 வகை விமானம் F404 IN20 எஞ்சினை பயன்படுத்துகிறது.
இதே எஞ்சின் மார்க் 1A பதிப்பிலும் தொடர்ந்து பயன்படுத்தப்படும். அதே நேரம் எதிர்கால தேஜஸ் மார்க் 2 விமானத்தில் அதிக சக்தி வாய்ந்த ஜெனரல் எலெக்ட்ரிக் F414 INS6 எஞ்சின் பொருத்தப்படும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
சுகோய் போர் விமானங்களைவிட இலகுவான, எடை குறைவான தேஜஸ் போர் விமானங்களால், எட்டு முதல் ஒன்பது டன் வரையிலான ஆயுதங்களை ஏற்றிச் செல்ல முடியும். மேலும், அவை ஒலியின் வேகமான, 1.6 முதல் 1.8 மாக் வரையிலான வேகத்தில், 52,000 அடி உயரம் வரை பறக்க முடியும்.
தேஜஸ் விமானத்தில், அதிமுக்கிய செயல்பாட்டுத் திறனுக்காக ஆக்டிவ் எலக்ட்ரானிக்கலி-ஸ்கேண்டு ரேடார் (Active Electronically-Scanned Radar), பார்வை வரம்புக்கு அப்பாற்பட்ட (BVR) ஏவுகணைகள், மின்னணுப் போர் கருவிகள் (electronic warfare suite) மற்றும் வானிலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் (air-to-air refuelling) ஆற்றல் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன.
இந்த ஆண்டு செப்டம்பரில், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 97 தேஜஸ் விமானங்களை வாங்குவதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அவை 2027இல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 2021ஆம் ஆண்டு, இந்திய அரசு 83 தேஜஸ் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் கையெழுத்திட்டது. கடந்த 2024ஆம் ஆண்டு அவை வழங்கப்படும் எனத் திட்டமிடப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் இருந்து என்ஜின்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இது தாமதமானது.
பட மூலாதாரம், Getty Images
ராகுல், கெஜ்ரிவால் இரங்கல்
இந்த விபத்து குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “துபை ஏர் ஷோவில் நடந்த தேஜஸ் விமான விபத்தில் நமது துணிச்சலான இந்திய விமானப்படை விமானியை இழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நாடு அவர்களின் தைரியம் மற்றும் சேவையை கெளரவித்து அவர்களுடன் நிற்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலும் இந்த விபத்து குறித்துத் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
“துணிச்சலான ஒரு வான் வீரரின் மறைவுக்காக நாடு துக்கம் அனுசரிக்கிறது. துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“விபத்துக்கான காரணத்தைத் தீர்மானிக்க உடனடியான மற்றும் முறையான விசாரணை அவசியம். நமது விமானிகளின் பாதுகாப்பும் உயிரும் மிக முக்கியமானவை” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.