பட மூலாதாரம், Getty Images
துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லின் மேயர் மற்றும் முக்கிய அதிபர் போட்டியாளரான எக்ரெம் இமாமோக்லு மீதான கைது நடவடிக்கைக்குப் பெரியளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதோடு துருக்கியில் ஜனநாயகத்தின் நிலை குறித்து உலகளாவிய கவலைகளும் எழுந்துள்ளன.
இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? இங்கு விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் (CHP) முக்கியமான தலைவர் மற்றும் இஸ்தான்புலின் மேயராக உள்ள இமாமோக்லு நீண்ட காலமாக அதிபர் ரெசெப் தையிப் எர்துவானின் மிகவும் வலிமையான போட்டியாளராகக் காணப்பட்டுள்ளார்.
மார்ச் 23 அன்று, ஊழல் மற்றும் ஒரு பயங்கரவாதக் குழுவுக்கு உதவியதாக இமாமோக்லு அதிகாரபூர்வமாகக் குற்றம்சாட்டப்பட்டார்.
அதையடுத்து, இமாமோக்லுவின் கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவே தெருக்களில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருதுகிறார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இமாமோக்லு, “இது மக்களின் விருப்பத்துக்கு எதிரானது” எனக் குறிப்பிட்டார்.
“நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் என் இல்லத்துக்கு வெளியே குவிந்துள்ளனர். நான் என்னை மக்களிடம் ஒப்படைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
கடந்த 1980களில் இருந்து துருக்கிய அரசை எதிர்த்துப் போராடி வரும் குர்திஷ் தேசியவாத அமைப்பான பிகேகே-வுக்கு உதவிய குற்றச்சாட்டில், அவருக்கு இரண்டாவது கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டாம் என்று நீதிபதிகள் தீர்மானித்தனர்.
துருக்கி, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் குர்திஷ் தேசியவாத அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதி தடை செய்துள்ளன.
பட மூலாதாரம், Reuters
பட மூலாதாரம், Getty Images
இமாமோக்லு கைது செய்யப்பட்டதிலிருந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள், ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான அரசின் தடையை மீறினர்.
திங்கள் கிழமையன்று, துருக்கிய உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா மொத்தம் 1,133 பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். அவர்கள் அதிபர் எர்துவானின் ஆட்சியை மட்டுமே அறிந்திருக்கிறார்கள்.
எர்துவான் பிரதமராகவும், அதிபராகவும் 22 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளார். கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் மற்றும் காவல்துறையினருடன் மோதல் ஏற்படலாம் என்பன போன்ற அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் அவர்கள் தொடர்ந்து சாலைகளில் இறங்கிப் போராடியுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
அரசியலமைப்பை மேற்கோள் காட்டி, கடந்த சில நாட்களில் நடைபெற்ற போராட்டங்கள், ஆர்ப்பாட்டம் செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையை “துஷ்பிரயோகம்” செய்துள்ளதாகக் கூறினார் யெர்லிகாயா.
மேலும், போராட்டக்காரர்கள் “பொது ஒழுங்கை சீர்குலைக்க முயல்வதாகவும், தெருவில் கலவரங்களைத் தூண்டிவிட்டு காவல்துறையைத் தாக்குவதாகவும்” அவர் குற்றம் சாட்டினார்.
பிரெஞ்சு செய்தி முகமையான ஏ.எஃப்.பி-யின் கணக்குப்படி, துருக்கியின் 81 மாகாணங்களில் குறைந்தது 55 மாகாணங்களில், அதாவது நாட்டின் மூன்றில் இரண்டு பகுதிகளுக்கு அதிகமான இடங்களில், போராட்டங்கள் நடைபெற்றுள்ளன என்று அறியப்படுகிறது.
“எங்களை ஆள்வதற்கு யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் இன்று அதிபர் எர்துவான் அந்த உரிமையை எங்களிடமிருந்து பறிக்கிறார்,” என்று ஓர் இளம்பெண் போராட்டக்காரர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
பிபிசியிடம் பேசிய மற்றோர் இளைஞர், “நாங்கள் ஜனநாயகத்தை விரும்புகிறோம், மக்களே தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படாமல் நாங்கள் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்.
போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்றன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபரை கேலி செய்யும் பதாகைகளை ஏந்தியதோடு, நீதி கோரி முழங்கினர்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவு, பல ஆண்டுகளுக்கும் மேலாக நாடு கண்டிராத போராட்டச் சூழல் துருக்கியில் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகை, மிளகுத் தூள், ரப்பர் தோட்டாக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினர்.
பல செயற்பாட்டாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகத்தில் என்-95 முகமூடிகள் அல்லது துணியை அணிந்திருந்தனர்.
பட மூலாதாரம், Reuters
எதிர்க்கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியை முன்னிட்டு அரசாங்கம் அவரைக் கைது செய்திருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
குடியரசு மக்கள் கட்சியின் தேர்தல் மார்ச் 23ஆம் தேதியன்று திட்டமிடப்பட்டது.
அவர் 2028இல் அதிபர் எர்துவானை எதிர்த்துப் போட்டியிட அவரது கட்சியின் எதிர்க்கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், வேட்பாளர் பட்டியலில் அவர் மட்டுமே வேட்பாளராக இருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வரை, 1.5 கோடி மக்கள் இமாமோக்லுவுக்கு ஆதரவாக அடையாள வாக்களிக்க வரிசையில் காத்திருந்தனர். அவர் விசாரணைக்கு முன்பாக காவலில் இருந்தபோதும், மக்களின் ஆதரவு குறையவில்லை.
இருப்பினும், அவரது அதிபர் வேட்புமனு அதிகாரப்பூர்வ செயல்முறையின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
பட மூலாதாரம், EPA
இஸ்தான்புலில் நடந்த பேரணியில் பேசிய குடியரசு மக்கள் கட்சித் தலைவர் ஒஸ்குர் ஒசெல், அந்த வாக்குகளில் 16 லட்சம் வாக்குகள் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து வந்ததாகவும், மீதமுள்ளவை மக்களிடம் இருந்து அவருக்கு ஆதரவாகக் கிடைத்துள்ள வாக்குகள் எனவும் தெரிவித்தார்.
பிபிசியால் இந்தப் புள்ளி விவரங்களை சுயாதீனமாகச் சரிபார்க்க இயலவில்லை.
பட மூலாதாரம், Getty Images
இமாமோக்லு கடந்த ஆண்டு நடந்த நகராட்சித் தேர்தலில் இஸ்தான்புல் மேயராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புலில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றார்.
குடியரசு மக்கள் கட்சித் தலைவர் பதவியை நோக்கி, இமாமோக்லு முன்னெடுக்கும் முயற்சியின் தொடக்கமாக சில ஆய்வாளர்கள் இதைக் கருதுகிறார்கள். இமாமோக்லு மீதான கைது நடவடிக்கையை “அடுத்த அதிபருக்கு எதிரான அரசியல் சூழ்ச்சி” என்று குடியரசு மக்கள் கட்சி விமர்சித்துள்ளது.
ஆனால், இமாமோக்லுவின் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற கருத்தை அதிபர் எர்துவானின் அரசாங்கம் மறுத்துள்ளது. மேலும், துருக்கியின் நீதிமன்றங்கள் சுதந்திரமானவை என்றும் வலியுறுத்துகிறது.
குற்றவியல் அமைப்பை வழிநடத்துதல், லஞ்சம் வாங்குதல், மிரட்டிப் பணம் பறித்தல், தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாகப் பதிவு செய்தல், ஏலத்தில் மோசடி செய்தல் போன்ற நீண்ட குற்றச்சாட்டுப் பட்டியலின் காரணமாக இமாமோக்லுவை காவலில் வைக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று, இஸ்தான்புல் நகராட்சியால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், இமாமோக்லு அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததாகவும், அவர் கைது செய்யப்பட்டது துருக்கியின் நற்பெயருக்கு பேரழிவாக அமைந்ததாக அவர் காவல்துறையிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Reuters
இமாமோக்லுவின் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவது மற்றும் அதிபராகத் தேர்வு செய்யப்படுவதை இந்தக் கைது நடவடிக்கை தடுக்காது.
ஆனால், அவர் மீதான ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது.
மார்ச் 18ஆம் தேதியன்று, இஸ்தான்புல் பல்கலைக்கழகம் அவரது பட்டத்தை ரத்து செய்தது. இது உறுதி செய்யப்பட்டால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தடுக்கப்படும்.
துருக்கியின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிபர் பதவி வகிக்க உயர் கல்வி முடித்திருக்க வேண்டும்.
பட மூலாதாரம், EPA
இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலையைத் தூண்டியுள்ளதாக பிபிசியின் துருக்கி நிபுணர் செலின் கிரிட் கூறுகிறார்.
அதிபர் வேட்பாளராக இமாமோக்லு தகுதியானவரா என்பதை துருக்கியின் உச்ச தேர்தல் கவுன்சில் முடிவு செய்யும். 2023இல் நடந்த அதிபர் தேர்தலில் எர்துவான் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 2028க்கு மேல் அவர் அதிபராக ஆட்சி செய்ய முடியாது.
ஆனால், அவர் இன்னும் ஒரு முறை அதிபராகப் பதவியேற்பதற்காக அரசியலமைப்பை மாற்றக்கூடும் என்று அவரது விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அடுத்த அதிபர் தேர்தல் 2028இல் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் முன்கூட்டியே தேர்தல்கள் நடக்கலாம்.
பட மூலாதாரம், EPA
எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்ப்புக் குரல்கள் மீதான ஒடுக்குமுறைகளின் வெளிப்பாடாகவே, சமீபகால கைது நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன.
திங்கள் கிழமை, இஸ்தான்புல் மற்றும் இஸ்மிர் நகரத்தில் விடியற்காலையில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஊடக கண்காணிப்பு அமைப்பான எம்எல்எஸ்ஏ-வின் தகவல்படி, விருது பெற்ற புகைப்படக் கலைஞர் புலன்ட் கிலிக் மற்றும் ஏ.எஃப்.பி புகைப்படக் கலைஞர் யாசின் அக்குல் உள்ளிட்ட போராட்டங்கள் குறித்து செய்தி வெளியிட்ட பத்து பத்திரிகையாளர்கள் சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
துருக்கியின் ஒளிபரப்பு ஆணையம், ஊடகங்கள் அதிகாரபூர்வ அறிக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, அவற்றின் உரிமங்களை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
வார இறுதியில், எக்ஸ் சமூக ஊடக தளம், 700க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்க வேண்டுமென்ற துருக்கி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்தது. மேலும் “இந்த நடவடிக்கையை சட்டவிரோதமானது” என்றும் தெரிவித்தது.
அதையடுத்து, “இன்று அவர்கள் சமூக ஊடகங்களை அடக்க முயல்கிறார்கள்” என்று திங்கள் கிழமையன்று குடியரசு மக்கள் கட்சியின் தலைவர் ஓஸ்குர் ஓசெல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
“இப்போதே ஏற்றுக் கொள்ளுங்கள் தையிப் (அதிபர் எர்துவான்), மக்களின் குரலை உங்களால் நசுக்க முடியாது” என்று ஓசெல் பதிவிட்டார்.
மேலும் மக்கள் போராட்டங்கள் குறித்து செய்தி வெளியிடத் தவறிய ஊடகங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
பொலிட்டிகோவின் கூற்றுப்படி, கடந்த வாரம் எதிர்ப்புத் தகவலைப் பகிர்ந்த பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ஆர்வலருடைய சமூக ஊடக கணக்குகளின் செயல்பாட்டை எக்ஸ் தளம் இடைநிறுத்தியது.
பட மூலாதாரம், Getty Images
இமாமோக்லு மர்மாரா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மோசமான சிலிவ்ரி சிறைச்சாலை என்று இந்தச் சிறை முன்பு அறியப்பட்டது. 11,000 கைதிகளை அடைக்க வடிவமைக்கப்பட்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலையாக இது குறிப்பிடப்படுகிறது.
ஆனால், துருக்கிய கிராண்ட் நேஷனல் அசெம்பிளியின் மனித உரிமைகள் புலனாய்வுக் குழு 2019ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், இதில் 22,781 கைதிகள் இருந்ததாகத் தெரிவித்தது.
துருக்கிய இளைஞர்களின் மத்தியில் மற்றும் சமூக ஊடகங்களில், “சிலிவ்ரி குளிர்ச்சியாக இருக்கிறது” என்ற சொற்றொடர் நகைச்சுவையாகக் கூறப்படுகிறது. இதன் உட்பொருள் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை என்பதாகும்.
கடந்த பத்து ஆண்டுகளில், துருக்கிய ராணுவ உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல நேரங்களில் அந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சிலிவ்ரி சிறையில் இருக்கும் கைதிகளின் வழக்கை வழக்கறிஞர் ஹுசெயின் எர்சோஸ் தொடர்ச்சியாகக் கையாண்டு வருகிறார்.
முக்கியமான வழக்குகளில் விசாரிக்கப்படுபவர்கள் சிறை எண் 9இல் வைக்கப்படுகிறார்கள், அங்கு கைதிகள் பொதுவாக மூன்று பேர் கொண்ட குழுக்களாக அடைக்கப்படுகிறார்கள் என்று பிபிசி துருக்கி சேவையிடம் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், EPA
திங்கள் கிழமை மாலை அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, அதிபர் எர்துவான் தொலைக்காட்சி மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
மேலும், ஆர்ப்பாட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர், “நாட்டுக்குத் தீமை செய்தது” என்று குடியரசு மக்கள் கட்சியை அவர் கடுமையாக விமர்சித்துக் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், இமாமோக்லுவை மட்டுமல்ல, கோடிக்கணக்கான துருக்கிய மக்களையும், எர்துவான் “அவமதித்துள்ளார்” என்று குடியரசு மக்கள் கட்சியின் தலைவர் ஒஸ்குர் ஒசெல் குற்றம் சாட்டினார். மேலும், அரசாங்கம் “சதி நடத்த முயன்றதாகவும்” அவரது கட்சி குற்றம் சாட்டியது.
துருக்கியின் மேற்கத்திய நட்பு நாடுகள் துருக்கியில் நிலவும் அமைதியற்ற சூழல் குறித்துப் பெரியளவில் குரல் கொடுக்கவில்லை.
ஜெர்மனியின் ஆட்சியில் இருந்து விலகவிருக்கும் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், சில நாட்களுக்கு முன்னர் இமாமோக்லுவின் கைது நடவடிக்கை குறித்துக் கவலை தெரிவித்தார். இது “துருக்கியில் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட கடுமையான பின்னடைவு” எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை இதை உள்விவகாரம் எனக் குறிப்பிட்டதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய கவுன்சில் உறுப்பினராகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பும் நாடாகவும் உள்ள துருக்கி, “ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்த” வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு