படக்குறிப்பு, கரூர் கூட்ட நெரிசலில் பலியான 2 வயது குழந்தை துருவிஷ்ணுகட்டுரை தகவல்
”கூட்டநெரிசலில் நமக்கு என்னவானாலும் பரவாயில்லை. குழந்தை பிழைத்தால் போதும் என்று நான்தான் இருட்டில் யாரோ ஒரு பெண்ணிடம் அவனைக் கொடுத்தேன். அவர் யாரென்றே தெரியாது. ஆனால் அந்தப் பெண்ணை அதன்பின் பார்க்கவே முடியவில்லை. குழந்தையும் பிணமாகத்தான் கிடைத்தான். நான்தான் அவனைத் துாக்கிக் கொண்டு போய் கொன்று விட்டேன்!”
இப்படிச் சொல்லிவிட்டு, கதறிக்கதறி அழுகிறார் லல்லி. தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்த 2 வயது குழந்தை துருவிஷ்ணுவின் அத்தை அவர்.
அசம்பாவித சம்பவம் நடந்த பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள வடிவேல் நகரில்தான் இந்த குழந்தையின் வீடும் அமைந்துள்ளது.
துருவிஷ்ணுவின் தந்தை விமல், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தாயார் மாதேஸ்வரி, காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். அவர்களின் 2 வயது குழந்தையான துருவிஷ்ணுவை, விஜய் பரப்புரை நிகழ்ச்சிக்கு விமலின் சகோதரியான லல்லி என்பவர்தான் துாக்கிச் சென்றுள்ளார். அந்த வடிவேல் நகர் வீதிக்கு அருகில் சாலையிலுள்ள கடையில் நின்றுள்ளார்.
படக்குறிப்பு, “குழந்தையை ஒரு பெண்ணிடம் கொடுத்தேன். அவர் யாரென்றே தெரியாது. ஆனால் அந்தப் பெண்ணை அதன்பின் பார்க்கவே முடியவில்லை.” – லல்லி
‘குழந்தையின் உடல் மருத்துவமனையில் இருந்தது’
”நான் நேற்று வேலைக்குச் சென்று விட்டேன். இங்கே என்ன நடந்தது என்றே தெரியாது. என் மனைவியும் வீட்டில்தான் இருந்திருக்கிறார். எனது மூத்த அக்காதான் என் குழந்தையை நிகழ்ச்சிக்குத் துாக்கிச் சென்றார். கூட்ட நெரிசலுக்குப் பின் குழந்தைக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அதன்பின் காந்தி கிராமம் மருத்துவமனையில் சிறு குழந்தையின் உடல் இருப்பதாகத் தெரிந்து பார்த்த போதுதான் அது என்னுடைய குழந்தை என்பது எங்களுக்குத் தெரியவந்தது!” என்று பிபிசியிடம் தெரிவித்தார், குழந்தையின் தந்தை விமல்.
இந்தச் சம்பவத்தில் குழந்தையை துாக்கிச் சென்ற லல்லியும் மயக்கமடைந்து, காயங்களுடன் கரூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருடன் இதே சம்பவத்தில் சிறுகாயங்களுடன் போலீசாரால் காப்பாற்றப்பட்ட அவருடைய மகன் பரத், மகள் மதுமிதா இருவரும் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
செப்டம்பர் 28-ஆம் தேதி காலையில் குழந்தையின் உடல், அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் குழந்தையின் இறுதிச் சடங்குகள் முடிந்த நிலையில், அப்பகுதியிலுள்ள மக்கள் பலரும் அவர்களுடைய வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்துச் சென்று கொண்டிருந்தனர். குழந்தையின் தந்தை விமலின் தாய்வழி உறவினரான வசந்தா அழுது கொண்டிருந்தார்.
படக்குறிப்பு, குழந்தையின் தந்தை விமலின் தாய்வழிப் பாட்டியான வசந்தா, விடாமல் கூக்குரலிட்டு அழுது கொண்டிருந்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய வசந்தா, ”எனது பேரனின் குழந்தைதான் துருவிஷ்ணு. எனது பேத்தி லல்லிதான் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் இவனையும் துாக்கிச் சென்றிருந்தாள். அவளுடைய குழந்தைகள் மதுமிதா, பரத் இருவருமே கூட்ட நெரிசலில் விழுந்துவிட்டனர். மதுமிதாவின் நெஞ்சில் நான்கைந்து கால்தடங்கள் இருந்தன. நல்லவேளையாக அங்கிருந்த போலீசார், அவளை கூட்டத்திலிருந்து காலைப்பிடித்து வெளியே இழுத்து, கடையோரத்தில் உட்காரவைத்து மருத்துவமனைக்கு அனுப்பினர். அதேபோன்று பரத்தையும் காப்பாற்றிவிட்டனர். ஆனால் குழந்தை எங்கே விழுந்ததென்றே தெரியவில்லை.” என்றார்.
மதுமிதா, பரத் ஆகிய இரு குழந்தைகளும் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, போலீசார் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சிலரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். மின்சாரம் இல்லாத காரணத்தால்தான், இருளில் யாருக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அறியவே முடியவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
‘யாரோ குழந்தையை கீழே போட்டிருக்கலாம்’
விமலின் மற்றொரு சகோதரி லலிதா, ”அடுத்த மாதம் பிறந்தநாள் வந்தால்தான் துருவிஷ்ணுவுக்கு இரண்டு வயதாகிறது. இருட்டில் கூட்ட நெரிசலான போது யாரோ என்னுடைய அக்காவிடமிருந்து குழந்தையை வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் யாரென்றே தெரியவில்லை.” என்றார்.
படக்குறிப்பு, லலிதா
குழந்தையை துாக்கிச் சென்ற விமலின் மூத்த சகோதரி லல்லியும் இந்த கூட்ட நெரிசலில் காயமடைந்து, கரூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குழந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, சிகிச்சையிலிருந்து விடுபட்டு வந்துவிட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார். குழந்தையின் இறப்புக்குக் காரணமாகிவிட்டதாக அவர் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தார்.
”விஜய் இந்தப் பகுதிக்கு வருகிறார் என்றதும் நானும் எனது கணவருடன் எங்களின் 2 குழந்தைகளையும் கூப்பிட்டுக்கொண்டு, எனது தம்பி குழந்தையையும் துாக்கிச் சென்றேன். இதே தெருவின் முனையிலுள்ள கடையில் நின்றுதான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென இருட்டாகி, கூட்ட நெரிசலானதில் நான் கீழே விழுந்துவிட்டேன். என் மீது இருசக்கர வாகனங்கள் விழுந்து, அதன்மீது 10, 15 பேர் ஏறிச் சென்றனர். என் கையிலிருந்த குழந்தையை அப்போது யாரோ ஒரு பெண் வாங்கினார்.” என்றார்.
தொடர்ந்த அவர், ”எப்படியாவது குழந்தையைக் காப்பாற்றினால் போதுமென்று அவரிடம் கொடுத்தேன். குழந்தை எங்கேயாவது இருக்குமென்று நினைத்தேன். ஆனால் அந்தப் பெண் எங்கே போனார், குழந்தை என்ன ஆனது என்றே தெரியவில்லை. இரண்டு மணி நேரம் குழந்தையைத் தேடினேன். அதன்பின் என் தம்பி போன் செய்து, குழந்தையின் உடல் காந்தி கிராமம் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறினான். அங்கே சென்றதும் நான் மயக்கமாகிவிட்டேன்.” என்றார்.
படக்குறிப்பு, குழந்தையின் தாய் மாதேஸ்வரி, காது கேளாத, வாய்பேச முடியாதவர்
சம்பவம் நடப்பதற்கு முன்பாக, அந்தப் பகுதியிலிருந்த கல்லுாரிப் பெண்கள் பலரும், குழந்தை துருவிஷ்ணுவைத் துாக்கி வைத்துக்கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டதாகக் கூறிய லல்லி, குழந்தையை நான் துாக்கிக் கொண்டு போயிருக்காவிட்டால் அவன் பிழைத்திருப்பான் என்று நினைக்கிறேன் என்று மீண்டும் கதறி அழத் துவங்கினார்.
துருவிஷ்ணுவின் தாயார் மாதேஸ்வரி மற்றவர்கள் சொல்வது எதையும் கேட்க முடியாமல், ஊடகங்கள் வந்து பேட்டி எடுப்பதை விரக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.