படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு உடல் நலம் குன்றவே கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த துரை வைகோ தமிழ்நாடு திரும்பினார்கட்டுரை தகவல்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க) முதன்மைச் செயலாளராக செயல்பட்டு வந்த, துரை வைகோ கட்சிப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 19 அன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதை சகித்துக் கொள்ள இயலாமல் கட்சிக்கும் தலைமைக்கும் தீராப் பழியை சுமத்தும் ஒருவர் மத்தியில் பணியாற்றிட இயலாது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் துரை வைகோ கூறியது என்ன?
2018-ஆம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு உடல் நலம் குன்றவே கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த துரை வைகோ தமிழ்நாடு திரும்பினார்.
தந்தையின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பொருட்டு, அவரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டதாக தன்னுடைய அறிக்கையில் துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர்’ என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
பட மூலாதாரம், @duraivaikooffl/x
யார் அந்த ‘ஒருவர்’?
கட்சிக்கும் தலைமைக்கும் அவப்பெயர் விளைவிப்பது போல் ஒருவர் செயல்பட்டு வருகிறார் என்று பெயர் குறிப்பிடாமல் அறிக்கையில் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
யார் அந்த ஒருவர் என்று பிபிசி தமிழ், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரனிடம் கேட்டது.
“நாளை (ஏப்ரல் 20) அன்று நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த அறிக்கை தொடர்பாக விசாரிக்கப்பட்டு அந்த ‘ஒருவர்’ மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று கூறினார் ராஜேந்திரன்.
மேற்கொண்டு பேசிய அவர், “கட்சியில் துரை வைகோவே முதன்மைச் செயலாளராக தொடர வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் கருத்தும் ஆசையும். எனவே நாளை நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் துரை வைகோ தன்னுடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிருப்தியை நிவர்த்தி செய்து, அவருடைய பணியைத் தொடர அவரிடம் வேண்டுகோள் வைக்கப்படும்,” என்று கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய, அக்கட்சியின் முன்னாள் மாணவரணி துணைச் செயலாளர் சத்தியகுமரன், அந்த ஒருவர் ‘மல்லை சத்யா’ என்று குறிப்பிட்டார்.
“மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளரான மல்லை சத்யா, துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்ட காலத்தில் இருந்தே கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்,” என்று குறிப்பிட்டார் சத்தியகுமரன்.
“துரை வைகோ, பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டவர். அவரின் தேர்வையும், பொதுக்குழுவின் முடிவையும் எதிர்த்து கடந்த நான்கு ஆண்டுகாலமாக அவர் செயல்பட்டு வருகிறார். துரை வைகோவின் வளர்ச்சி இங்குள்ள கட்சிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை எதிர்த்து கட்சிக்கு அவப்பெயர் பெற்றுத்தரும் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறார் மல்லை சத்யா,” என்றும் குறிப்பிட்டார் அவர்.
துரை வைகோ விலகியது மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி தமிழ் மல்லை சத்யாவிடம் பேசியபோது, “இந்த விவகாரம் தொடர்பாக எதுவாக இருந்தாலும் நிர்வாகக் குழு கூட்டம் முடிந்த பின்பு அறிவிப்பேன்,” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Mallai C E Sathya/Facebook
படக்குறிப்பு, மல்லை சத்யா, துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்ட காலத்தில் இருந்தே கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்று துரை வைகோ தரப்பினர் கூறுகின்றனர்
திருச்சி தீர்மானம்
துணைப் பொதுச்செயலாளரான மல்லை சத்யாவுக்கும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையேயான சர்ச்சை பலரும் அறிந்ததாக உள்ளது.
சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், ‘கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’ எனக் கூறி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதற்கு கண்டனம் தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, “கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிராக கூட்டங்கள் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றுவது கூடாது,” என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதன் பின்னணியில் தான் தற்போது தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகி உள்ளார் துரை வைகோ.
பட மூலாதாரம், Mallai C E Sathya/Facebook
படக்குறிப்பு, கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிராக கூட்டங்கள் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றுவது கூடாது என்று மல்லை சத்யாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து வைகோ குறிப்பிட்டிருந்தார்
‘வைகோவே தலைவரை முடிவு செய்ய வேண்டும்’
2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, துரை வைகோவிற்கு கட்சியில் முக்கியப் பொறுப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி உயர்நிலைக் குழு கூட்டத்தில் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டார். அதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 106 பேர் பங்கேற்றனர். இதில் 104 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர், கட்சியின் தலைமை நிலைய செயலாளராக பதவி ஏற்றார்.
அப்போது இருந்தே குடும்ப அரசியல் என்று சுட்டிக்காட்டி பலரும் கட்சியில் இருந்து வெளியேறினார்கள். மல்லை சத்யா ஆதரவாளர்களுக்கும், துரை வைகோ ஆதரவாளர்களுக்கும் இடையே அதிருப்தியான சூழல் நிலவியது.
தனிமனிதரைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட கட்சிகள் சந்திக்கும் பிரச்னையையே மதிமுகவும் சந்திக்கிறது என்று கூறுகிறார் அரசியல் விமர்சகரும் பேராசிரியருமான க்ளாட்சன் சேவியர்.
“வைகோ ஒருவரை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி இது. அதனால்தான் இது போன்ற தலைமை விவகாரங்கள் நீண்ட விவாதத்தை எழுப்பியுள்ளது. கட்சியின் கட்டமைப்பு சரியாக இருந்தாலும் கூட, தலைவர் போன்ற முக்கிய பொறுப்புகளை நிர்வகிக்க கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்ய ‘பொலிட் பீரோ’ போன்ற முறையான அமைப்பு கட்சியிடம் இல்லாமல் போய்விட்டது.
மதிமுகவில் தலைவர்களை சுழற்சி முறையில் நியமிக்கலாம். இல்லையென்றால் வரும் நாட்களில் திமுகவுடன் கட்சி இணைக்கப்படும் சூழல் ஏற்படலாம். அப்போது மதிமுகவில், வைகோவை நம்பி வந்தவர்களுக்கு திமுகவில் புதிய பொறுப்புகள் வழங்கப்படுமா என்பது கேள்விக் குறிதான்,” என்று அவர் தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசிய அவர், வைகோவே அடுத்து கட்சியை வழி நடத்தப் போவது யார் என்பதை தீர்மானித்து அவர் கையில் பொறுப்பை ஒப்படைத்தால் இது போன்ற சச்சரவுகளுக்கு இடம் அளிக்க வேண்டியதில்லை என குறிப்பிட்டார்.