பட மூலாதாரம், Mallai C E Sathya
‘மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’ எனக் கூறி, அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
அந்த தீர்மானத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுடன் மோதல் போக்கைத் தொடர்வதால் சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ம.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, ‘மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும்’ என்ற குரல்கள் எழுந்தன.
ஆனால், ‘துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதை தான் ஏற்கவில்லை’ என செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக் குழு கூட்டத்தில் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் முதன்மைச் செயலாளராக உள்ளார்.
துரை வைகோவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு
பட மூலாதாரம், Mallai C E Sathya
இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 106 பேர் பங்கேற்றனர். இதில் 104 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டது. ‘இவ்வாறு தேர்வு செய்யப்பட்டது வாரிசு அரசியல் இல்லை’ என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளித்தார்.
‘ஒருவரை திணிப்பதுதான் வாரிசு அரசியல். தொண்டர்களின் விருப்பப்படி அவருக்குப் பதவி வழங்கப்பட்டது’ என்றும் அவர் தெரிவித்தார்.
வைகோவின் முடிவை எதிர்த்து மதிமுக இளைஞரணி செயலாளராக இருந்த கோவை ஈஸ்வரன் பதவி விலகினார்.
மதிமுக அவைத் தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி, தனது விலகலுக்கு துரை வைகோவின் வருகையை ஒரு காரணமாக முன்வைத்திருந்தார்.
மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம்
பட மூலாதாரம், Mallai C E Sathya
இதன் தொடர்ச்சியாக, தற்போது மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது.
கடந்த 12-ஆம் தேதி மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்ற மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில், நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சிலர் வாக்குவாதம் செய்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து துரை வைகோ வெளியேறினார்.
பொதுக்குழுவில் பேசிய வைகோ, “குடும்பத்துக்குள் சண்டை வருவது இயல்பு. ராமதாஸ் குடும்பத்துக்குள்ளேயே மோதல் வந்துவிட்டது. கண்ணாடியில் விரிசல் விழுந்தால் ஒட்ட வைக்க முடியாது. தண்ணீரில் விரிசல் விழுந்தால் தானாக சேர்ந்துவிடும்” எனக் கூறினார்.
“நானும் சத்யாவும் கண்ணாடியல்ல, ஓடும் தண்ணீர்” எனவும் வைகோ குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், ‘கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’ எனக் கூறி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
சர்ச்சையை கிளப்பிய பதிவு
இந்தநிலையில், மல்லை சத்யாவுக்கு எதிராக ம.தி.மு.க-வின் முன்னாள் மாணவரணி துணைச் செயலாளர் சத்தியகுமரனின் முகநூல் பதிவு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
‘ம.தி.மு.கவில் வைகோவுக்கு அடுத்தபடியாக துரை வைகோ மட்டுமே அடுத்த பரிணாமம். இதை ஏற்பவர்கள் கட்சியில் இருக்கலாம். இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்கள் உடனே வெளியேறலாம்’ எனக் கூறியிருந்தார்.
பட மூலாதாரம், Durai Vaiko
‘ம.தி.மு.க-வில் 30 ஆண்டுகள் அல்ல, 300 ஆண்டுகள் உழைத்திருந்தாலும் இதனை ஏற்க வேண்டும். இது துரை வைகோ காலம்’ எனவும் அவர் பதிவிட்டிருந்தார். மல்லை சத்யாவை மையமாக வைத்து இவ்வாறு கூறியுள்ளதாக ம.தி.மு.க வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்தநிலையில், தனது முகநூல் பக்கத்தில் ”ம.தி.மு.க-வில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு நம்பிக்கை துரோகி உள்பட பல விருதுகளை எனக்குத் தந்துள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார் மல்லை சத்யா.
‘வைகோவின் இதயத்தில் இருந்து நீக்க முடியாது’
திருச்சி ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்துப் பதில் அளித்துள்ள மல்லை சத்யா, ‘எனக்கு எதிராக சிலர் தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால், வைகோவின் இதயத்தில் இருந்து என்னை நீக்க முடியாது’ எனக் பதிவிட்டுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் சுவர் விளம்பரங்கள் மற்றும் அழைப்பிதழ்களில் மல்லை சத்யாவின் பெயர் புறக்கணிக்கப்படுவதாகவும் ம.தி.மு.க-வை விட்டு சீனியர்கள் சிலர் வெளியேறியது போல சத்யாவும் வெளியேற வேண்டும் என துரை வைகோ தரப்பினர் விரும்புவதாகவும் சத்யாவின் ஆதரவாளர் ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“கட்சியில் தகுதி அடிப்படையில் பொறுப்புக்கு வருவதை சிலர் விரும்பவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் மல்லை சத்யா சிரித்தால் கூட அதைக் குற்ற நிகழ்வாக கருதுகின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
வைகோவின் கண்டனம்
திருச்சியில் மல்லை சத்யாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
”சில மாவட்டக் கழகங்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிராக இத்தகைய கூட்டங்களை நடத்துவது, தீர்மானங்களை நிறைவேற்றுவது போன்றவை கூடாது” என அறிவுறுத்தப்படுவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
வரும் 20 ஆம் தேதியன்று ம.தி.மு.க நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் எனவும் வைகோ அறிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Mallai C E Sathya
“மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஏன்?” என அக்கட்சியின் மாநில மாணவரணி முன்னாள் துணை அமைப்பாளர் சத்தியகுமாரனிடம் பிபிசி தமிழ் பேசியது.
“மல்லை சத்யாவின் கட்சிப் பணியை யாரும் மறுக்கவில்லை. அதேநேரம், தொண்டர்கள் அறிவுறுத்தியதால்தான் கட்சிப் பணிக்கு துரை வைகோ வந்தார். கட்சிக்கு எதிராகவும் பொதுக்குழுவுக்கு எதிராகவும் மல்லை சத்யா தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்” எனக் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மறைவு தொடர்பான நிகழ்வில் கட்சிக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
“திராவிடர் கழகத் தலைவர் வீரமணியுடன் சென்று குமரி அனந்தனுக்கு வைகோ இறுதி மரியாதை செலுத்தினார். அப்போது வைகோவுடன் செல்லாமல் மல்லை சத்யா தனியாக சென்று அஞ்சலி செலுத்திவிட்டு ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார்” என சத்தியகுமாரன் தெரிவித்தார்.
“ஒரு நிகழ்வு தொடர்பாக பொதுச் செயலாளர் பேசிவிட்டால் வேறு யாரும் பேசக் கூடாது. ஆனால், கட்சியின் சட்டவிதிகளுக்கு மாறாக அவரது செயல் உள்ளது. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்” எனவும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Durai Vaiko
அதேநேரம், “கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் மல்லை சத்யா போதிய ஆர்வம் காட்டவில்லை” எனக் கூறுகிறார், ம.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், “வைகோ தொடர்பாக சத்யாவின் ஆதரவாளர் ஒருவர் முகநூலில் அவதூறான கருத்தை வெளியிட்டார். இதற்கு சத்யா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதுதான் பிரச்னைக்கு காரணம்” எனக் கூறினார்.
அடுத்ததாக, ஈ.வெ.ரா.பெரியார், அண்ணா, வைகோ வரிசையில் சத்யாவின் படத்தை ஒருவர் பகிர்ந்ததாகக் கூறிய அவர், “இதற்கும் சத்யா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவையெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்களாக இருந்தன”எனத் தெரிவித்தார்.
“வைகோவுக்கு உடல்நலம் குன்றிப் போன பிறகு கட்சியை வளர்ப்பதற்கு துரை வைகோ உழைத்து வருகிறார். இந்தநிலையில் சிலரின் தூண்டுதலில் சத்யா செயல்படுவதாக தோன்றுகிறது” எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மல்லை சத்யா முற்றிலும் மறுத்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். அதற்கு மேல் கூறுவதற்கு எதுவும் இல்லை” எனக் கூறினார்.
“இந்த விவகாரம் தொடர்பாக எந்தக் கருத்தையும் கூறக் கூடாது எனக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துவிட்டார். வரும் ஏப்ரல் 20 ஆம் தேதியன்று நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு பேசுகிறேன்” என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு