பட மூலாதாரம், Estudio Santa Rita
மத்திய இந்தியாவில் உள்ள துல்சி கிராமத்தில், சமூக ஊடகங்கள் ஒரு பொருளாதார சமூக புரட்சிக்கு வித்திட்டுள்ளன. இந்த உலகின் மீது யூடியூப் ஏற்படுத்திய தாக்கத்தின் ஒரு சிறிய மாதிரிதான் இந்த கிராமம்.
மத்திய இந்தியாவில் ராய்ப்பூருக்கு அருகே உள்ள துல்சி கிராமத்தில், செப்டம்பரில் ஒரு புழுக்கமான காலைப்பொழுதில் கிராமவாசிகள் வயல்களுக்கு செல்லும் நேரம், 32 வயதான யூடியூபர் ஜெய் வர்மா தனது புதிய வீடியோவில் பங்கேற்க சில பெண்களை அழைக்கிறார். அந்தப் பெண்கள் தங்களது சேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு, ஒன்றிரண்டு வார்த்தைகளை பகிர்ந்துகொண்டு அவரை சூழ்கின்றனர்.
வயதான பெண் ஒருவரை ஒரு பிளாஸ்டிக் சேரில் உட்கார வைத்த வர்மா, மற்றொரு பெண்ணை அந்த மூதாட்டியின் காலை தொட்டு வணங்கும் படியும், மூன்றாவது ஒரு பெண்ணை தண்ணீர் வழங்கவும் சொல்லி, ஒரு கிராமப்புற திருவிழா காட்சியை படம்பிடிக்கிறார்.
பல ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள நகரங்கள் மற்றும் நாடுகளில் உள்ள ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் இந்த காட்சி படம்பிடிக்கப்படுகிறது.
இதற்கு பழக்கப்பட்டு விட்ட அந்தப் பெண்கள் அவர் கேட்டபடி செய்து தருகின்றனர். வர்மா அந்த காட்சியை படம்பிடிகிறார். அதன் பின்னர் அந்த பெண்கள் வயல்வேளைக்கு திரும்புகின்றனர்.
சில நூறு மீட்டர்களுக்கு அப்பால் மற்றொரு குழு அவர்களது சொந்த தயாரிப்பிற்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது. 26 வயதான ராஜேஷ் திவார் ஒரு தேர்ந்த கலைஞராக ஒரு ஹிப்-ஹாப் பாடலுக்கு ஏற்ப நடனமாடிக் கொண்டிருக்க, ஒருவர் மொபைல் போனில் அதை படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
துல்சி மற்ற எந்த இந்திய கிராமத்தையும் போன்றதுதான். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இந்த சிறு கிராமம், ஓரடுக்கு மாடி வீடுகளையும், ஒரு பகுதியில் பாவப்பட்ட சாலைகளையும் கொண்டிருக்கின்றன. கட்டடங்களுக்கு மேலாக ஒரு தண்ணீர் தொட்டி காட்சி தருகிறது. அடியில் கான்கிரீட் திண்ணைகளுடன் இருக்கும் ஆலமரங்கள் மக்கள் கூடும் இடங்களாக செயல்படுகின்றன.
ஆனால் துல்சியை தனித்துவமாக காட்டுவது “யூடியூப் கிராமம்” என்ற பெருமைதான்.
துல்சியில் சுமார் 4,000 பேர் வசிக்கிறார்கள். அவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏதாவது ஒரு வகையில் யூடியூபில் செயல்படுகின்றனர். கிராமத்தை சுற்றி வந்தால், அங்கு படம்பிடிக்கப்படும் ஏராளமான வீடியோக்களில் ஏதோ ஒன்றில் தோன்றாத ஒருவரை காண்பது கடினம்.
யூடியூப் மூலம் கிடைக்கும் வருவாய் உள்ளூர் பொருளாதாரத்தை மாற்றியிருப்பதாக மக்கள் தெரிவித்தனர். பொருளாதார ஆதாயத்தை தாண்டி, சமத்துவம் மற்றும் சமுதாய மாற்றத்திற்கு ஒரு கருவியாக மாறியிருக்கிறது இந்த சமூக ஊடக தளம்.
வெற்றிகரமான யூடியூப் சானல்களை தொடங்கி, புதிய வருவாய் ஈட்டும் பலரில், முன்னேற வாய்ப்புகள் அதிகம் இல்லாத கிராமப்புற சூழலைச் சேர்ந்த பெண்களும் இருக்கின்றனர். ஆலமரத்தடி திண்ணைப் பேச்சுகள் தொழில்நுட்பம் மற்றும் இணையம் குறித்தவையாக மாறியுள்ளன.
2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் யூடியூப் 20ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. சில கணக்கீடுகளின்படி ஒவ்வொரு மாதமும் சுமார் 250 கோடி nபர் இந்த தளத்தை பயன்படுத்துகின்றனர். இந்தியா யூடியூபின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று. கடந்த 20 ஆண்டுகளில், யூடியூப் இணையத்தை மட்டும் மாற்றவில்லை, மனித பண்பாட்டை பற்றிய படைப்புகளை உருவாக்கி நுகர்வது குறித்த நமது மொத்த சிந்தனையையும் மாற்றியுள்ளது.
ஒரு வகையில், இவ்வுலகில் யூடியூப் ஏற்படுத்திய தாக்கத்தின் ஒரு சிறு மாதிரிதான் துல்சி கிராமம். இங்கு சிலரின் மொத்த வாழ்க்கையும் ஆன்லைன் வீடியோக்களை சுற்றி சுழல்கின்றன.
“அது குழந்தைகளை கெட்ட பழக்கங்கள் மற்றும் குற்றங்களிலிருந்து விலக்கி வைத்துள்ளது,” என்கிறார் துல்சி கிராமத்தை சேர்ந்த விவசாயியும், அந்த கிராமத்தின் சமூக ஊடக வளர்ச்சியின் ரசிகருமான 49 வயதான நேட்ரம் யாதவ்.
“இந்த கண்டெண்ட் கிரியேட்டர்ஸ் அவர்களது சாதனைகளின் மூலம் கிராமத்தில் இருக்கும் அனைவரையும் பெருமைகொள்ள செய்துள்ளனர்.” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Suhail Bhat
சமூக ஊடக புரட்சி
2018ஆம் ஆண்டில் வர்மாவும் அவரது நண்பர் ஞானேந்திர சுக்லாவும் இணைந்து ‘Being Chhattisgarhiya’ என்ற யூடியூப் சேனலை தொடங்கிய போதுதான் துல்சி கிராமத்தில் மாற்றம் தொடங்கியது.
“எங்களது வழக்கமான வாழ்க்கையோடு நாங்கள் திருப்தியடையாமல் எங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்த ஏதாவது செய்ய விரும்பினோம்,” என்கிறார் வர்மா.
ஒரு இளம் ஜோடி காதலர் தினத்தன்று வலதுசாரி இந்து தேசியவாத அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்களால் தொல்லைக்கு ஆளாவது பற்றிய அவர்களது மூன்றாவது காணொளிதான் முதல்முறையாக வைரலானது. நகைச்சுவையும், சமூகம் பற்றிய விமர்சனமும் சேர்ந்த கலவை மக்களின் மனதை கவர்ந்தது.
“அந்த காணொளி நகைச்சுவையாக இருந்ததோடு அதில் ஒரு செய்தியும் இருந்தது. அதை பார்வையாளர்களே புரிந்துகொள்ள விட்டுவிட்டோம்,” என்கிறார் வர்மா.
அந்த சேனல் சில மாதங்களில் பல ஆயிரம் ஃபாலோவர்களை பெற்றது. அந்த எண்ணிக்கை தற்போது 125,000-ஐ தாண்டியதுடன் 260 மில்லியனுக்கு மேற்பட்ட மொத்த பார்வைகளையும் பெற்றுள்ளது. சமூக ஊடகத்திற்கு அதிக நேரம் செலவிடுவது குறித்த அவர்கள் குடும்பத்தின் கவலைகள், பணம் வரத் தொடங்கியதும் அமைதியாயின.
“நாங்கள் ரூ.30,000-க்கும் மேல் சம்பாதித்தோம், எனவே எங்களுக்கு உதவியவர்களுக்கும் எங்களால் உதவ முடிந்தது,” என்கிறார் சுக்லா. அவரும், வர்மாவும் யூடியூபை முழுமையாக தொடர தங்களது வேலைகளை விட்டுவிட்டனர்.
அவர்களது வெற்றி துல்சியை சேர்ந்த மற்றவர்களுக்கு ஒரு ஊக்கமாக அமைந்துள்ளது. அவரது குழுவினர் நடிகர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், மற்றவர்களுக்கு எடிட்டிங் மற்றும் திரைக்கதை எழுதுவதற்கு இலவசமாக பயிற்சி அளித்ததாகவும் சுக்லா சொல்கிறார். கிராமத்தை சேர்ந்த சிலர் தங்களது சொந்த சேனலை தொடங்கினர். மற்றவர்கள் அவர்களுக்கு உதவுவதுடன் திருப்தியடைந்தனர்.
இதுவே உள்ளூர் அதிகாரிகளின் கவனத்தை கவர போதுமானதாக இருந்தது. அந்த கிராமத்தின் கன்டென்ட் கிரியேட்டர்களின் வெற்றியை வியந்த மாநில அரசு, 2023-ல் அந்த கிராமத்தில் ஒரு நவீன ஸ்டூடியோவை அமைத்தது. துல்சி கிராமத்தை உள்ளடக்கிய ராய்ப்பூர் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் சர்வேஸ்வர் புரே, அந்த கிராமத்தின் யூடியூப் தயாரிப்புகளை டிஜிட்டல் இடைவெளியை (Digital Divide) குறைப்பதற்கான ஒரு வாய்ப்பாக பார்த்ததாக கூறுகிறார்.
“கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாழ்க்கையில் இருக்கும் இடைவெளியை இந்த ஸ்டுடியோவை வழங்குவதன் மூலம் குறைக்க விரும்பினேன்,” என்கிறார் புரே.
“அவர்களது காணொளிகள் வலுவான கருப்பொருட்களுடன் அதிக தாக்கத்தை ஏற்படுத்துபவையாக லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ளன. ஸ்டூடியோவை அமைத்தது அவர்களை ஊக்கப்படுத்துவதற்கான ஒரு வழி.”
அந்த முயற்சி பலித்தது.
இந்த கிராமத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு யூடியூப் வாழ்வாதாரத்தை உருவாக்கியுள்ளது என்கிறார் புரே. அது பிராந்திய பொழுதுபோக்கு தொழிலை ஊக்கப்படுத்துவதுடன் சில யூடியூபர்களை அவர்களது சிறு நகர வாழ்க்கையிலிருந்து முன்னோக்கி உந்துகிறது.
பட மூலாதாரம், Suhail Bhat
செல்போனில் இருந்து பெரிய திரைக்கு
துல்சியில் யூடியூப் மோகத்தில் உருவான அனைத்து சமூக ஊடக நட்சத்திரங்களில் யாரும் 27 வயதான பிங்கி சாஹூவைவிட அதிக உயரத்தை தொட்டதில்லை. விவசாயத்தை சுற்றி கட்டமைக்கப்பட்ட ஒரு தொலைதூர கிராமத்தில் வளர்ந்த சாஹூவிற்கு, ஒரு நடன கலைஞராகவும், நடிகையாகவும் வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
அதை ஒரு அவமானமாக கருதிய பெற்றோர் மற்றும் அண்டை வீட்டாரின் எதிர்ப்புக்கு மத்தியில் அவரின் கனவு ஒரு தொலைதூர கனவாக தோன்றியது. அவர்களின் விமர்சனங்கள் இருந்தாலும், சாஹூ நடன காணொளிகளை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸில் பதிவேற்றம் செய்தார்.
அவருக்கான மாற்றம் Being Chhattisgarhiya யூடியூபின் நிறுவனர்கள் மூலம் வந்தது. அவரது காணொளியை பார்த்து அந்த சேனலில் பங்கேற்க சாஹூவை அழைத்த போது வந்தது. “அது கனவு மெய்ப்பட்ட நேரம்,” என நினைவுகூர்கிறார் சாஹூ.
“அவர்கள் எனது திறமையை அங்கீகரித்து எனது ஆற்றலை மெருகூட்டினர்.”
பீயிங் சத்தீஸ்கர்ஹியாவுடன் இணைந்து அவர் உருவாக்கிய காணொளிகள் சத்தீஸ்கரின் பிராந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்து, அவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அன்றிலிருந்து தற்போது வரை அவர் 7 திரைப்படங்களில் நடித்துள்ளார். அருகில் இருக்கும் பிலாஸ்பூரை சேர்ந்த ஆனந்த் மாணிக்புரி அவரது யூடியூப் வீடியோக்களால் ஈர்க்கப்பட்டார். “நடிக்கக் கூடிய ஒரு புதுமுகத்தை தேடிக் கொண்டிருந்தேன், சாஹூவிடம் அதெல்லாம் இருந்தது,” என்கிறார் அவர்.
துல்சியில் வசிக்கும் ஆதித்யா பாகல் கல்லூரியில் படிக்கு ம்போதே வர்மா மற்றும் சுக்லாவால் உத்வேகம் பெற்று அவரது சொந்த சேனலை தொடங்கினார். அவர்களுடைய நுட்பங்களை பயன்படுத்தி ஒரு வருடத்திற்குள் அவர் 20,000 பாலோவர்களை பெற்று யூடியூபிலிருந்து பணம் சம்பாதிக்க தொடங்கினார்.
படிப்படியாக அவரை எழுத்தாளராகவும், இயக்குநராகவும் பீயிங் சத்தீஸ்கர்ஹியா குழுவில் சேர்த்தார் வர்மா. வர்மா மற்றும் சுக்லாவுடான முதல் சந்திப்பை நினைவுகூரும் பாகல்”அது நட்சத்திரங்களை சந்திப்பது போன்று இருந்தது,” என்கிறார்.
இதைத் தொடர்ந்து, யூடியூப் சேனலுக்காக அவர் செய்த பணிகளின் அடிப்படையில் அருகிலிருக்கும் ராய்ப்பூர் நகரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. இதைத் தொடர்ந்து அடுத்து வரவிருக்கின்ற பெரிய பட்ஜெட் தயாரிப்பான கரூன் பார் என்ற திரைப்படத்தில் கதாசிரியராகவும், துணை இயக்குநராகவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
“ஏதோ ஒரு நாள் பெரிய அளவில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என் நம்பமட்டும்தான் முடியும்,”என்கிறார்
யூடியூபராக இருந்து திரையுலகத்திற்கு சென்ற மற்றொருவர் 38 வயதான மனோஜ் யாதவ். அவர் குழந்தையாக இருந் தபோதுதான் முதல்முறையாக நடித்தார். ஆண்டுதோறும் நடத்தப்படும் ராமாயண நாடகத்தில் அவர் சிறுவயது ராமராக நடித்தார். அப்போது கிடைத்த கைத்தட்டுகள் ஒரு நாள் சத்தீஸ்கரில் திரையரங்குகளில் எதிரொலிக்கும் என அவர் ஒருபோதும் கற்பனை செய்தது இல்லை.
தனது திறமையை பல ஆண்டுகளாக யூடியூபில் காட்சிப்படுத்திய யாதவிற்கு ஒரு பிராந்திய திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் அவரது நடிப்பு பரவலான பாராட்டுகளை பெற்றுத் தந்தது. இன்று யாதவ் தனது திறமை மூலமாக அவருக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
“யூடியூப் இல்லாவிட்டால் இதில் எதுவுமே சாத்தியப்பட்டிருக்காது,” என்கிறார்.”எனது உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.”
பட மூலாதாரம், Suhail Bhat
பெண்களுக்கு அதிகாரமளித்தல்
துல்சியில், இந்த தொழில்நுட்ப புரட்சியில் பெண்கள் மைய இடத்தை அடைவதற்கு யூடியூப் வழிவகுத்துள்ளது.
துல்சி கிராமத்தின் முன்னாள் தலைவர் திரெளபதி வைஷ்ணுவின் கூற்றுப்படி, குடும்ப வன்முறை அதிகமுள்ள இந்தியாவில், பாரபட்சங்களை எதிர்ப்பதிலும், சமூக நெறிமுறைகளை மாற்றுவதிலும் யூடியூப் முக்கிய பங்காற்றமுடியும் என்கிறார்.
” [பெண்வெறுப்பு வழக்கங்களை] காலங்காலமாக தொடர்வது பெண்கள் மத்தியில் வழக்கமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக அவர்களது மருமகள்களை நடத்தும் விதத்தில் இது இருக்கிறது. இந்த காணொளிகள் அந்த போக்கை உடைப்பதற்கு உதவுகின்றன,”என்கிறார் வைஷ்ணு.
அப்படி பிரச்னையை விவரிக்கும் ஒரு வீடியோவில் இந்த 61 வயதான பெண் அண்மையில் நடித்துள்ளார்.
“பஞ்சாயத்து தலைவராக இருந்த போது நான் வலியுறுத்திய பெண்கள் மரியாதையாகவும் சமத்துவத்துடனும் நடத்தப்படவேண்டும் என்ற கொள்கைகளை முன்வைத்ததால் அந்த கதாப்பாத்திரத்தில் நடித்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன்,” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Suhail Bhat
சக கிராம மக்களிடமிருந்து யூடியூப் குறித்து கற்றுக்கொண்ட் 28 வயது திருமண புகைப்பட கலைஞரான ராகுல் வர்மா ( ஜெய் வர்மாவுடன் தொடர்பில்லாதவர்) அந்த தளம் மாற்றத்தை கொண்டு வருவதாக இருந்ததாக சொல்கிறார்.
“முதலில் எங்களது தாய்மார்களும், சகோதரிகளும் இதற்கு உதவிகள் மட்டும் செய்துகொண்டிருந்தனர். தற்போது அவர்கள் சொந்தமாக சேனல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் நாம் முன்னர் கற்பனைகூட செய்திருக்க மாட்டோம்,” என்கிறார் அவர்.
தனது 15 வயது மருமகன் கூட கிராம கலைஞர்களுக்கு உதவுவதாக தெரிவித்தார் வர்மா.
“இது இங்கே முக்கியமான தொழில், அதில் எல்லோரும் பங்கேற்கின்றனர்.”
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் குறிப்பாக 2020-ல் இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்படும் வரை கிராமப்புற கன்டென்ட் கிரியேட்டர்களின் எண்ணிக்கை அபரிமிதமான வளர்ச்சியடைந்தது. அந்த முதல் கட்ட வளர்ச்சி முக்கியமாக ஆண்களால் முன்னின்று கொண்டுசெல்லப்பட்டது என்கிறார் டெல்லி இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் டிஜிட்டல் மானுடவியல் துணைப் பேராசிரியராக இருக்கும் ஶ்ரீராம் வெங்கட்ராமன். பெருந்தொற்றுக்குப் பிறகு மேலும் ஏராளமான பெண்கள் சமூக ஊடக பக்கங்களை வெற்றிகரமாக நடத்திவருவதாக கூறும் வெங்கட்ராமன், அது புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கியதாகவும் சொல்கிறார்.
ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் ” அது கொண்டு வந்த சர்வதேச தொடர்புகள் மாற்றத்தை உருவாக்கியிருக்கின்றன,” என்கிறார் அவர். “சிலர் அவர்களது சந்தாதாரர்களையும் அவர்கள் தயாரிப்புகளை நுகர்வோரையும் முதல் கட்ட வாடிக்கையாளர்களாக கொண்டு யூடியூபிலிருந்து பிற தொழில்களையும் தொடங்கியுள்ளனர். உதாரணத்திற்கு தலைமுடிக்கான எண்ணெய் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா பொருட்கள்.”
ஆனால் சிலருக்கு இந்த விஷயத்தில் பணம் ஒரு பொருட்டல்ல, “எனது கிராம சேனல்கள் தயாரிக்கும் காணொளிகளில் பங்களிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் அதை நான் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் நான் செய்கிறேன்,” என்கிறார் 56 வயதான ராம்காளி வர்மா(ஜெய் வர்மாவுக்கு இவருக்குமே எந்த தொடர்பும் இல்லை). இல்லத்தரசியான இவர் அன்பான தாய் கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்படும் முதல் நடிகையாக இருப்பதால் கிராமத்தில் அதிகம் தேடப்படும் ஒரு திறமைசாலியாக உருவாகியுள்ளார்.
ராம்காளியின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் பாலின பிரச்னைகளை பேசுபவையாக இருக்கும். தனது மருமகளை கல்வியை தொடர ஊக்கப்படுத்தும் மாமியாராக நடித்தது இவருக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரங்களில் ஒன்று. “என்னால் பெண்களின் கல்வி மற்றும் வெற்றிக்கு குரல் கொடுக்க முடிந்திருக்கிறது. நடிப்பு எனக்கு திருப்தியும் மன அமைதியும் தருகிறது,” என்கிறார் இவர்.
இப்போது தன்னையே சார்ந்துள்ள வெற்றிகரமான நடிகையாக உருவாகியுள்ள சாஹூ பிற இளம் பெண்களை ஊக்கப்படுத்த முடியும் என நம்புகிறார். “என்னால் எனது கனவுகளை எட்ட முடிந்தால், அவர்களாலும் முடிய்ம்,” என தனது தந்தையுடன் சேர்ந்து பெரிய திரையில் தனது நடிப்பை பார்த்த பெருமிதத்தை நினைவுகூர்ந்து அவர் குறிப்பிடுகிறார். துல்சியில் இளம்பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளார் சாஹூ.
“பெண்கள் பெரிய அளவில் கனவு காண்பதையும் அதிக உயரங்களை அடைய முயற்சிப்பதையும் பார்ப்பதுதான் எனது பயணத்தில் மிகவும் ஊக்கமளிக்கும் பகுதி. இப்போது திரைப்பட தயாரிப்பாளர்களாக மாற விரும்பும் பெண்கள் உள்ளனர்,” என்கிறார்.
துல்சியில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திலும், திவாரும் அவரது குழுவினரும் தங்களது ஹிப் ஹாப் இசையை செழுமைப்படுத்த தொடர்ந்து அலுப்பில்லாமல் பயிற்சி செய்கின்றனர். “கன்டென்ட் உருவாக்குவதிலிருந்து ராப் இசைக்கு மாறுவது சுலபமானதாக இருக்கவில்லை,” என்கிறார் திவார். அவரது சேனல் லெத்வா ராஜா அதாவது ஆச்சரியமூட்டும் ராஜா என பெயரிடப்பட்டுள்ளது.
மற்ற பண்பாட்டு மாற்றங்களுக்கு யூடியூப் தனது மக்களுக்கு ஒரு கருவியாக இருக்க முடியும் என திவார் நம்புகிறார்.
“எங்கள் மொழியில் ராப் கலைஞர்கள் அதிகமில்லை. ஆனால் அதை மாற்ற முடியும் என நம்புகிறேன்,” என்கிறார்.
“எங்கள் பகுதிக்கு புதிய இசையை கொண்டுவந்து, துல்சி அதன் காணொளிகளுக்கு எவ்வளவு அறியப்படுகிறோ, அதே போல் அதன் இசைக்காகவும் அறியப்படவேண்டும் என விரும்புகிறேன்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு