“தங்கல் (Dangal) படத்தில் வரும் அப்பா தனக்கு நன்கு தெரிந்த மல்யுத்தத்தை, மகள்களுக்கு சொல்லிக் கொடுத்து சாம்பியன் ஆக்குவார். எனது அப்பா, எனக்கும் அக்காவுக்கும் பயிற்சி அளிப்பதற்காகவே பேட்மிண்டன் கற்றுக்கொண்டவர். எனக்கு அறிவிக்கப்பட்ட அர்ஜுனா விருதை அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று கூறுகிறார் துளசிமதி முருகேசன்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 22 வயதான பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன். கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றவர்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் ‘அர்ஜுனா விருதுக்கு’ துளசிமதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கடந்த ஜனவரி 2ஆம் தேதி மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
‘அப்பா தான் முதல் பயிற்சியாளர்’
துளசிமதி முருகேசன், தற்போது நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மூன்றாம் ஆண்டு, கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார். பிறக்கும் போதே தசைநார் சிதைவு காரணமாக இவரது இடதுகை பாதிக்கப்பட்டது.
பிபிசி தமிழிடம் பேசிய துளசிமதி, “மாற்றுத்திறனாளி என்ற காரணத்திற்காக எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதில் எனது தந்தை கவனமாக இருந்தார். 13 வருடங்கள் எனக்கு பேட்மிண்டன் பயிற்சி அளித்ததும் அவர் தான்.” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “அப்பா, தினக்கூலி வேலைக்கு செல்பவர் என்பதால் பல வருடங்களாக பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தோம். குடிசை வீட்டில் வாழ்ந்தோம். எனது முதல் உயர் ரக ‘பேட்மிண்டன் ராக்கெட்’ கூட, மற்றொரு வீராங்கனை வேண்டாம் என தூக்கிப்போட்ட ஒன்று தான்” என்கிறார்.
விளையாட்டு மட்டுமே துளசிமதியின் வாழ்வை மாற்றும் என்பதில் தந்தை முருகேசன் மிகவும் தெளிவாக இருந்துள்ளார், காரணம் அவருக்கும் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். துளசிமதி மட்டுமல்லாது தனது மூத்த மகள் கிருத்திகாவையும் விளையாட அவர் ஊக்குவித்துள்ளார்.
தங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் தமிழ்நாடு அரசின் ‘காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில்’ இலவசமாக அளிக்கப்பட்ட பல்வேறு வகையான விளையாட்டு பயிற்சிகள் சிறுவயதிலிருந்தே மிகவும் உதவிகரமாக இருந்தன என்கிறார் துளசிமதி.
“சிறுவயதில் இருந்தே நானும், அக்காவும் அதிகாலை அப்பாவுடன் மைதானத்திற்கு செல்வது வழக்கம். சிறிது நாட்களுக்கு ஹாக்கி, சில நாட்களுக்கு கூடைப்பந்தாட்டம், பிறகு டேபிள் டென்னிஸ் என பல வகையான விளையாட்டுகளை அப்பா விளையாடச் சொல்வார்.”
“இதையெல்லாம் விளையாடி முடித்த பிறகு, ‘எப்படி இருந்தது?’ என கேட்பார். எளிதாக இருந்தது என்று கூறுவோம். ‘சரி அடுத்த விளையாட்டில் பயிற்சி எடுங்கள்’ என்று சொல்லிவிடுவார். இதேபோல, பல சோதனைகளை நடத்தினார்” என்கிறார் துளசிமதி.
தொடக்கத்தில் பேட்மிண்டன் விளையாட்டை சில நாட்களுக்கு ஆடியபோது, சகோதரிகளுக்கு அது மிகவும் கடினமாக இருந்துள்ளது.
தனது மகள்கள் இருவரும் பேட்மிண்டன் ஆட திணறுவதைப் பார்த்த முருகேசன், இனி பேட்மிண்டன் தான் அவர்களது எதிர்காலம் என முடிவு செய்தார். அவரது இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பதை துளசிமதி விளக்கினார்.
“ஏன் பேட்மிண்டன் விளையாட்டை தேர்ந்தெடுக்கச் சொன்னீர்கள் என அப்பாவிடம் ஒருமுறை கேட்டபோது, ‘எளிதாக வரும் விளையாட்டு என்றால் அதை நீங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் அல்லது ஏதேனும் ஒரு கட்டத்தில் அதை விட்டுவிடுவீர்கள்’.”
“‘அதுவே கடினமான ஒன்று எனும்போது, அதில் எப்படியாவது சிறப்பாக விளையாட வேண்டுமென தனிக் கவனம் செலுத்துவீர்கள். அப்படி கஷ்டப்பட்டு ஒரு விளையாட்டில் திறன்களை வளர்த்துக்கொண்ட பிறகு, உங்களால் அதைவிட முடியாது’ என்றார். இன்று வரை நான் பெற்ற அனைத்து விருதுகளுக்கும் அவரது அந்த முடிவு தான் காரணம்” என்கிறார் துளசிமதி.
சிறுவயதில் எதிர்கொண்ட கேலி, கிண்டல்கள்
மாற்றுத்திறன் காரணமாக சிறுவயதில் இருந்தே பல்வேறு கேலிகளையும், கிண்டல்களையும் சந்தித்ததாக கூறும் துளசிமதி, ஒருமுறை மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டியில் விருது வென்று பள்ளிக்கு திரும்பியபோது, தன்னுடன் பேச சக மாணவிகள் ஆர்வம் காட்டியதை நினைவு கூர்கிறார்.
“அப்போது தான் பேட்மிண்டனில் பெரிதாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தோன்றியது” என்கிறார்.
2022இல் துளசிமதி ஒரு இருசக்கர வாகன விபத்தில் சிக்கினார். அந்த விபத்து, தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது இடது கையை முழுவதுமாக செயலிழக்கச் செய்தது.
“எனது அப்பா, அம்மா நொறுங்கிவிட்டனர். விளையாட்டு பற்றி ஏதும் தெரியாவிட்டாலும் கூட, எனக்கு பக்கபலமாக இருந்த அம்மா மிகவும் கலங்கிவிட்டார்.” என்கிறார்.
இந்த விபத்திலிருந்து மீண்ட துளசிமதி, கடந்த 2 வருடங்களில் 15 நாடுகளில் நடந்த பல்வேறு பேட்மிண்டன் போட்டிகளில் கலந்துகொண்டு, 16 தங்கம், 11 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களைக் குவித்துள்ளார்.
அதில் 2022 ஆசிய பாரா போட்டிகளில் (கொரோனா காரணமாக 2023 அக்டோபரில் சீனாவில் நடைபெற்றது) பெற்ற தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களும் அடங்கும்.
“பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக என்னை பாராட்டி, தமிழ்நாடு அரசு அளித்த ஊக்கத்தொகை தான் எங்கள் குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்டது.” என்கிறார் துளசிமதி.
பாராலிம்பிக் போட்டிகளில் கிடைத்த அனுபவம்
கடந்த வருடம் பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான எஸ்யு5 (SU5) பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் மற்றொரு தமிழக வீராங்கனையான மனிஷா ராமதாஸை வீழ்த்தி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார் துளசிமதி.
பிறகு இறுதிப் போட்டியில், சீன வீராங்கனை யாங் கியூ ஷியாவை எதிர்கொண்டார். இதில் யாங் வெற்றிப் பெற்றார். துளசிமதிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனுபவம் குறித்து பேசிய துளசிமதி, “தங்கப் பதக்கம் வென்றவரின் தேசிய கீதமே அரங்கில் ஒலிக்கப்படும். அது நடக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. பாரா ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதே கனவு என்ற நிலையில் இருந்த எனக்கு, முதல் முறையே வெள்ளி கிடைத்ததை எண்ணி உள்ளுக்குள் ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.” என்கிறார்.
பதக்கம் வென்று இந்தியா திரும்பிய போது கிடைத்த மக்களின் வரவேற்பு தன்னை நெகிழச் செய்ததாகவும், பாரா விளையாட்டுகளுக்கு கிடைத்த அத்தகைய வரவேற்பு நம்பமுடியாததாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
“நான் தோற்கவில்லை, வெள்ளிப் பதக்கமும் மதிப்பிற்குரியது தான் என்பதை அப்போது உணர்ந்தேன்.” என்கிறார் துளசிமதி.
‘விளையாட்டில் கிடைக்கும் வெற்றிகள் எல்லாவற்றையும் மாற்றும்’
சிறுவயதிலிருந்தே துளசிமதிக்கு விளையாட்டில் துணையாக இருப்பவர் அவரது அக்கா கிருத்திகா. இவரும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரு பேட்மிண்டன் வீராங்கனையே.
“சிறுவயதில் பணம் தான் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. ஒரு நல்ல ஷூ, ஜெர்ஸி, பேட்மிண்டன் ராக்கெட் போன்றவற்றை வாங்க பணம் இருக்காது. அப்பா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்.” என்று பிபிசி தமிழிடம் கூறினார் கிருத்திகா.
“உள்ளூர் போட்டிகளில் ஜெயித்தால் கிடைக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து விளையாட்டு உபகரணங்களை வாங்கினோம்.” என்று நினைவுகூர்கிறார் கிருத்திகா.
துளசிமதிக்கு கிடைத்த முதல் உயர் ரக பேட்மிண்டன் ராக்கெட், மற்றொரு வீராங்கனையால் வேண்டாம் என தூக்கிபோடப்பட்ட ஒன்று.
“அரங்கில் விளையாடுபவர்கள் சில ராக்கெட்களை வேண்டாம் என தூக்கிப் போடுவார்கள். அப்படி கிடந்த ஒன்றை, எடுத்து சரிசெய்து பயன்படுத்தினாள் துளசி. அதுதான் அவள் பயன்படுத்திய முதல் உயர் ரக ராக்கெட்.” என்கிறார் கிருத்திகா.
பிபிசி தமிழிடம் பேசிய துளசிமதியின் தந்தை முருகேசன், “துளசியை போட்டிகளுக்கு அல்லது பயிற்சிக்கு அழைத்துச் செல்லும்போது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அடிக்கடி கூறும் ஒன்று, ‘பெண் பிள்ளைக்கு, அதுவும் மாற்றுத் திறன் கொண்ட பிள்ளைக்கு ஏன் இதெல்லாம், முடிந்தால் படிக்க வை இல்லையா திருமணம் செய்துவை’ என்பதே.”
“ஆனால் இப்போது அதே நபர்கள் தான் பூங்கொத்து, சால்வையுடன் வந்து பாராட்டுகிறார்கள்” என்று கூறுகிறார்.
விளையாட்டில் கிடைக்கும் வெற்றிகள் எல்லாவற்றையும் மாற்றும் என்ற தனது நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
“ஒருமுறை புயலால் பாதிக்கப்பட்டு எங்கள் குடிசை சின்னாபின்னமாகிவிட்டது. தங்க வீடில்லாமல் தவித்த அதே இடத்தில், இன்று சொந்தமாக வீடு கட்டி கொடுத்து இருக்கிறாள் என் மகள்.” என்கிறார் முருகேசன்.
துளசிமதி மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் நித்ய ஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் ஆகிய இரு பாரா பேட்மிண்டன் வீராங்கனைகளுக்கும், மத்திய அரசின் ‘அர்ஜுனா விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 17ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இம்மூவருக்கும் அர்ஜுனா விருது வழங்குவார்.
“பள்ளியில் படிக்கும்போது ஒருமுறை, எனது இடதுகையை பார்த்து ‘ஏலியன்’ (Alien) என்று அழைத்தார்கள். இனி அவ்வாறு யாரும் அழைக்க மாட்டார்கள் என நம்புகிறேன். அழைத்தாலும் நான் அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை” என்கிறார் துளசிமதி முருகேசன்.