பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோதி, இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை அமெரிக்க தலைநகர் சென்றடைந்தார். டிரம்பை சந்திப்பதற்கு முன், அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை சந்தித்தார் மோதி.
அதிபர் டொனால்ட் டிரம்பின் மிகவும் சர்ச்சைக்குரிய அமைச்சரவைத் தேர்வுகளில் ஒருவரான துளசி கப்பார்ட், செனட்டில் நடந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநராக உறுதி செய்யப்பட்டார்.
செனட்டில் நடந்த வாக்கெடுப்பில் துளசி கப்பார்டுக்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 48 வாக்குகளும் கிடைத்தன.
அதைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையுடன், புதன்கிழமையன்று (12.02.2025) உளவுத்துறை இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டார் துளசி கப்பார்ட்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் செனட் தலைவர் மிட்ச் மெக்கானெல், ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து துளசி கபார்ட்டுக்கு எதிராக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துளசி கபார்ட்டை அவரது “அபார துணிச்சலுக்காக” நியமித்துள்ளதாக ஓர் அறிக்கையில் தெரிவித்தார் டிரம்ப்.
மேலும் உளவுத்துறை இயக்குநராக, சி.ஐ.ஏ, எஃப்.பி.ஐ மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) உள்பட 18 உளவுத்துறை நிறுவனங்களை துளசி கப்பார்ட் மேற்பார்வையிடுவார் என்றும் 70 பில்லியன் டாலர் பட்ஜெட்டை நிர்வகிப்பார் என்றும் அறியப்படுகிறது.
அமெரிக்காவில் இந்துக்களின் பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்து வரும் ஒரு முன்னாள் ஜனநாயகக் கட்சித் தலைவரான துளசி கப்பார்ட்டை ஒரு முக்கியப் பதவிக்கு டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.
மேலும், “ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துளசி கபார்ட் தேசிய உளவுத்துறை இயக்குநராகப் பணியாற்றுவார் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் இரு கட்சிகளிடம் இருந்தும் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளார். இப்போது அவர் ஒரு பெருமைமிக்க குடியரசுக் கட்சிக்காரர்,” என்று துளசி கப்பார்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, டிரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டிரம்புக்கு நன்றி தெரிவித்த துளசி, “அமெரிக்க மக்களின் கருத்து சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்காகப் பாடுபடுவேன்” என்று தெரிவித்துளார்.
பட மூலாதாரம், X/@TulsiGabbard
யார் இந்த துளசி கப்பார்ட்?
துளசி கப்பார்ட் 1981ஆம் ஆண்டு அமெரிக்க சமோவாவில் மைக் கப்பார்ட், கரோல் கப்பார்ட் ஆகியோருக்குப் பிறந்தார். அவர் கப்பார்ட் தம்பதியரின் ஐந்து குழந்தைகளில் ஒருவர். 1983ஆம் ஆண்டு, கப்பார்டுக்கு இரண்டு வயதானபோது, அவரது குடும்பம் அமெரிக்காவின் ஹவாயில் குடியேறியது.
ஹவாய் வந்த பிறகு, அவரது தாயார் கரோல் இந்து மதத்திற்கு மாறினார், அதே நேரத்தில் அவரது தந்தை ஒரு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவராக இருந்தார். இந்து மத செல்வாக்கின் காரணமாக, கரோல் தனது குழந்தைகளுக்கு இந்து பெயர்களைச் சூட்டினார்.
தன்னை ஓர் இந்து எனக் குறிப்பிடும் துளசி கப்பார்ட், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல. முதலில் குடியரசுக் கட்சியுடன் (2004-2007) தொடர்புடைய துளசியின் தந்தை, பின்னர் 2007 முதல் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்தார். 2013ஆம் ஆண்டில், முதல் முறையாக ஹவாய் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட துளசி, 2021ஆம் ஆண்டு வரை இந்தப் பதவியில் இருந்தார்.
அரசியலைத் தவிர, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய ராணுவ காவல் படையிலும் பணியாற்றிய துளசி கபார்ட், இராக், குவைத் போன்ற நாடுகளில் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக பெர்னி சாண்டர்ஸுக்காக பிரசாரம் செய்த துளசி கப்பார்ட், ஜோ பைடனை ஆதரிப்பதற்கு முன்பு 2020இல் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவது குறித்துப் பரிசீலித்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் இந்து உறுப்பினரான கப்பார்ட், தனது பதவிக் காலத்தில் அரசாங்கத்தால் நடத்தப்படும் சுகாதாரப் பாதுகாப்பு, இலவச கல்லூரிக் கல்வி மற்றும் துப்பாக்கிக் கட்டுப்பாடு போன்ற தாராளவாத பிரச்னைகளை ஆதரித்தார்.
கடந்த 2021இல் அவையை விட்டு வெளியேறிய பிறகு, அவர் சில விஷயங்களில் ஜனநாயகக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அவரது நடவடிக்கைகள், அவர் டிரம்பை மறைமுகமாக ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.
முன்னாள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த துளசி கப்பார்ட், கமலா ஹாரிஸுக்கு எதிரான டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தை ஆதரித்தார்.
அக்டோபர் 2022இல், வெளியுறவுக் கொள்கை மற்றும் சமூகப் பிரச்னைகளில் உள்ள வேறுபாடுகளைக் காரணம் காட்டி, ஜனநாயகக் கட்சியை விட்டு வெளியேறிய துளசி கப்பார்ட், வெளிப்படையாக டிரம்பை ஆதரித்தார். பின்னர் 2024இல் குடியரசுக் கட்சியில் இணைந்தார்.
பாஜக உடனான உறவு
பட மூலாதாரம், Getty Images
துளசி கப்பார்ட் ஏப்ரல் 2015இல் அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டபோது, அது குறித்து இந்தியாவிலும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் துளசி கப்பார்ட் தனது சொந்த மாநிலமான ஹவாயில் வேத சடங்குகளைப் பின்பற்றி, ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் வில்லியம்ஸை மணந்தார்.
தி கேரவனில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, அமெரிக்காவுக்கான அப்போதைய இந்திய தூதர் தரஞ்சித் சந்து, ராம் மாதவ் ஆகியோர் துளசி கப்பார்டின் திருமணத்தில் கலந்து கொண்டனர். அப்போது ராம் மாதவ், பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தார்.
இதற்கு முன்பு, ராம் மாதவ் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துளசி கப்பார்ட் திருமண விழாவின்போது, பிரதமர் நரேந்திர மோதியின் தனிப்பட்ட செய்தியை வாசித்து, விநாயகர் சிலையைப் பரிசாக வழங்கினார் ராம் மாதவ். தனது திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு, துளசி இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்தார்.
அந்த மூன்று வார பயணத்தின்போது, அவர் பிரதமர் மோதி, அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் ராணுவத் தளபதியைச் சந்தித்தார். மேலும் இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மோதியை துளசி கப்பார்ட் அதிகமாகப் பாராட்டியிருந்தார்.
“மோதி மிகவும் வலிமையான தலைவர், இந்தியாவை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறார் என்பது பற்றிய தெளிவான பார்வை அவருக்கு உள்ளது. அவர் இந்தியாவுக்கான செயல் திட்டத்தைக் கொண்ட தலைவர்” என்றும் அவர் கூறியிருந்தார்.
இதுமட்டுமின்றி, மோதியின் தூய்மைப் பிரசாரத்துக்கு, பள்ளியில் துப்புரவுப் பணி செய்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார். யோகாவை உலக அரங்கிற்குக் கொண்டு வர பிரதமர் மோதி முயன்றபோது, துளசி கப்பார்ட் அதைத் தீவிரமாக ஆதரித்தார்.
செப்டம்பர் 2014இல், துளசி கப்பார்ட் முதல் முறையாக பிரதமர் மோதியைச் சந்தித்தபோது, அவருக்கு பகவத் கீதையைப் பரிசாக வழங்கினார். துளசி கப்பார்ட் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோதியை ஆதரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோதியின் பங்கு இருப்பதாகக் கூறப்பட்டு, அமெரிக்க அரசு அவருக்கு விசா வழங்க மறுத்தபோது, அரசின் இந்த முடிவை விமர்சித்த சில தலைவர்களில் துளசியும் ஒருவர்.
இந்து அடையாளம்
பட மூலாதாரம், Getty Images
கடந்த 2019இல், துளசி கப்பார்ட் தனது இந்து அடையாளத்தைப் பற்றி ரிலிஜியன் நியூஸ் நிறுவனத்துக்காக ஒரு கட்டுரை எழுதினார். அதில், அவர் இந்துவாக இருப்பதில் பெருமைப்படுவதாகவும், ஆனால் தான் ஒரு ‘இந்து தேசியவாதி’ அல்ல என்றும் எழுதினார். மேலும், தான் ஒரு ‘இந்து தேசியவாதி’ என்றும் குற்றம் சாட்டப்பட்டதாகவும் அவர் எழுதினார்.
“இந்தியாவின் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட தலைவரை அதிபர் பராக் ஒபாமா, அதிபர் டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள சக உறுப்பினர்கள் பலர் சந்தித்து இருந்தாலும், அவருடன் பணியாற்றியிருந்தாலும்கூட, அவருடனான எனது சந்திப்புகள் இந்தக் குற்றச்சாட்டுக்கு ‘சான்றாக’ குறிப்பிடப்பட்டுள்ளன” என்று அந்தக் கட்டுரையில் பகிர்ந்துள்ளார் துளசி கப்பார்ட்.
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், பௌத்தர்கள் எனப் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடம் இருந்து தனக்குக் கிடைக்கும் ஆதரவு, அனைவரையும் உள்ளடக்கிய அவரது அணுகுமுறைக்கு ஒரு சான்று என்றும் அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, “துரதிர்ஷ்டவசமாக, இந்து வெறுப்பு இருப்பது உண்மை. நாடாளுமன்றம் மற்றும் அதிபர் போட்டிக்கான எனது ஒவ்வொரு பிரசாரத்திலும் அதை அதை நேரடியாக அனுபவித்து இருக்கிறேன்.
நம் நாட்டில் இந்துக்கள் ஒவ்வொரு நாளும் எவற்றையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு. துரதிர்ஷ்டவசமாக, நமது அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் அதைச் சகித்துக்கொள்வது மட்டுமின்றி, அதை ஊக்குவிக்கவும் செய்கின்றன” என்று 2020ஆம் ஆண்டு துளசி கப்பார்ட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
பல சந்தர்ப்பங்களில், துளசி மத நூலான பகவத் கீதையைப் பற்றிப் பேசுவதையும், பாடல்களைப் பாடுவதையும் காண முடிந்தது. துளசி முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு வந்தபோது, கீதையின் மீது சத்தியம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பதவியேற்ற பிறகு, “எனது நாட்டுக்காகவும் மற்றவர்களுக்காகவும் என் வாழ்க்கையை அர்ப்பணிக்க, பகவத் கீதை என்னைத் தூண்டுகிறது” என்று துளசி கூறினார். 2020ஆம் ஆண்டின் கொரோனா பேரிடர்க் காலத்தில், உலகம் கடினமான சூழலைக் கடந்த போது, துளசி ஜனநாயகக் கட்சியின் சார்பாக அதிபர் போட்டிக்கான வேட்பாளராக இருந்தார்.
அப்போது கீதை பற்றிய ஒரு காணொளியை வெளியிட்டு, “தற்போதைய சூழல் மத்திய கிழக்கில் பணியமர்த்தப்பட்ட காலத்தை எனக்கு நினைவூட்டுகிறது. அந்த நேரத்திலும், என் உயிருக்கு ஒவ்வொரு கணமும் ஆபத்து இருந்தது. இன்று போலவே, பலர் தங்கள் உயிரை இழந்தனர். அன்றும் இன்றும், பகவத் கீதை எனக்கு ஆதரவளித்துள்ளது,” என்று தெரிவித்தார்.
காஷ்மீர், பாகிஸ்தான், வங்கதேசம் குறித்து அவர் கூறியது என்ன?
கடந்த 2021ஆம் ஆண்டு வங்கதேசத்தில் துர்கா பூஜையின்போது வன்முறை வெடித்து, 100க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் தாக்கப்பட்டன. அப்போது, பல இந்து கோவில்கள், வீடுகள் மற்றும் கடைகளைச் சேதப்படுத்திய வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தத் தாக்குதல்களைக் கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார் துளசி. “வங்கதேச கோவில்களில் பக்தர்களுக்கு எதிராக இவ்வளவு வெறுப்பு மற்றும் வன்முறை நடப்பதைக் காணும்போது என் இதயம் உடைகிறது. கோவில்களையும் சிலைகளையும் எரித்து அழிப்பது தங்கள் கடவுளை மகிழ்விக்கிறது என்ற இந்த ஜிஹாதிகளின் நம்பிக்கை, அவர்கள் உண்மையில் கடவுளிடம் இருந்து எவ்வளவு தூரமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
பட மூலாதாரம், Getty Images
இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் உள்பட அந்நாட்டின் மதச் சிறுபான்மையினரை ஜிஹாதி வெறுப்பு சக்திகளிடம் இருந்து, வங்கதேசத்தின் மதச் சார்பற்ற அரசாங்கம் பாதுகாக்க வேண்டிய நேரம் இது,” என்று அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தார்.
முன்னதாக, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் பாதுகாப்பு தொடர்பான ஒரு திட்டத்தை துளசி கப்பாட் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
இந்தத் திட்டத்தை முன்வைக்கும்போது, 1971ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடங்கியதாகவும், இதற்கு பாகிஸ்தான் ராணுவமே காரணம் என்றும் அவர் கூறியிருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று, நரேந்திர மோதி அரசாங்கம் 370வது பிரிவை நீக்கி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
அதையடுத்து, செப்டம்பர் 2019இல், துளசி கப்பார்டிடம் காஷ்மீர் குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, “காஷ்மீர் பிரச்னை சிக்கலானது, கடந்த காலத்தில் அங்கு என்ன நடந்திருந்தாலும், பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது, அவர்களால் இன்னும் திரும்பி வர முடியவில்லை” என்று துளசி தெரிவித்தார்.
மேலும், 370வது பிரிவைக் குறிப்பிடாமல், “முந்தைய அரசின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளின்படி, தன்பால் ஈர்ப்பு இங்கு சட்டவிரோதமானது. இந்தக் கொள்கைகளால் பெண்களின் குரல் ஒடுக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு, காஷ்மீர் பெண்களுக்கு சொத்துரிமை இல்லை என்று என்னிடம் சொன்ன ஒரு பெண்ணை நான் சந்தித்தேன். எந்தவொரு இறையாண்மை கொண்ட நாட்டின் அரசாங்கமும் அனைத்து வகையிலும் செயல்பட வேண்டும்,” என்று கூறினார்.
விவாதப் பொருளாகிய சந்திப்பு
பட மூலாதாரம், Getty Images
துளசி கப்பார்ட் 2017இல் சிரியாவுக்கு பயணம் செய்தார். அப்போது அவர் சிரிய அதிபர் பஷர் அல்-அசாத்தையும் சந்தித்தார். அவர்களின் சந்திப்பு அரசியல் வட்டாரங்களிலும் ஊடகங்களிலும் பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்காக அவர் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தித்துக் கொண்டே இருந்தாலும், பஷர் அல்-அசாத் அரசாங்கம் தனது சொந்த மக்களையே கொடுமைப்படுத்துவதாகவும் சித்திரவதை செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், துளசி கப்பார்டை அவர் சந்தித்தது பலரை ஆச்சரியப்படுத்தியது.
கடந்த 2019ஆம் ஆண்டில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்வந்தபோது, இந்தச் சந்திப்பு தொடர்பான கேள்விகளையும் துளசி கப்பார்ட் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, அந்த நேரத்தில் அசாத் ஒரு ‘எதிரி’யாக இருந்தாரா என்று கேட்டபோது, ”அவர் அமெரிக்காவின் எதிரி அல்ல. ஏனெனில் சிரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நேரடி அச்சுறுத்தல் இல்லை” என்று பதிலளித்தார்.
மேலும் 2019ஆம் ஆண்டில், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவானை வெளிப்படையாக விமர்சித்தார் துளசி கப்பார்ட். “துருக்கி அதிபர் எர்துவான் சிரியாவை தாக்குகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். மேலும் இந்தத் தாக்குதலுக்கு அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கயீதாவின் ‘முன்னாள் பயங்கரவாதிகளிடம் இருந்து’ உதவி பெறுகிறார். இதை நான் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன்” என்று அவர் கூறியிருந்தார்.
அப்போது துளசி, எர்துவானை ஒரு தீவிர இஸ்லாமியர் என்று வர்ணித்து, இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதன் மூலம் அவர் கலீஃபாவாக மாறுவார் என்றும் பேசியிருந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு