பட மூலாதாரம், Getty Images
இன்றைய தினம் (30/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.
காதலிக்க மறுத்ததால் உயிரோடு தீவைத்து கொளுத்தப்பட்ட 17 வயது சிறுமி உயிரிழந்ததாகவும் இதுதொடர்பாக 2 இளைஞர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார், இவரது மனைவி காளியம்மாள். இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய மகள் மதுமிதா (17). இவர் கடந்தாண்டு பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் அடிக்கடி தன்னை காதலிக்குமாறு கூறி தொல்லை கொடுத்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் பரமக்குடி போலீசார் சந்தோஷை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதையடுத்து, மதுமிதாவை தன் தாயாரின் ஊரான எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரத்துக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 23-ம் தேதி மாலையில் தன் நண்பர் முத்தையா என்பவருடன் சந்தோஷ் அங்கே சென்று, தன்னை காதலிக்குமாறு மதுமிதாவை மீண்டும் வற்புறுத்தியுள்ளார். ஆனால் மதுமிதா காதலிக்க மறுக்கவே, மதுமிதா மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சந்தோஷ் மற்றும் முத்தையா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். உடல் கருகிய நிலையில் மதுமிதா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே, அவர் தன்னுடைய வாக்குமூலத்தையும் அளித்தார்.
அதன்பேரில் சந்தோஷ் மற்றும் முத்தையா இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை மதுமிதா உயிரிழந்தார். இதையடுத்து, இருவர் மீதான கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
சத்தீஸ்ரில் என்கவுன்ட்டர் – 16 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
பட மூலாதாரம், ANI
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 16 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், “கேர்லாபால் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினர், ரோந்து பணியில் ஈடுபட்டனர். நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியின் ஒரு பகுதியாக அவர்கள், மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சி.ஆர்.பி.எஃப். படையினருடன் இணைந்து தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து, நடந்த சண்டையில் நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோதலில், பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயமடைந்தனர் என அதிகாரி ஒருவர் கூறினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது – அமித் ஷா
“தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது தொடா்பாக பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன; சரியான நேரம் வரும் போது, அது குறித்து அறிவிக்கப்படும்” என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்ததாக, தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியில் அமித் ஷாவை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தபோது கூட்டணி தொடா்பாக பேசவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில், இரு கட்சிகளுக்கும் கூட்டணிப் பேச்சு நடைபெற்று வருவதை அமித் ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்துப் பேசினார்.
சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அதிமுக-பாஜக கூட்டணி தொடா்பாக பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் தனியார் ஆங்கில ஊடகம் சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்றாா்.
அப்போது, கேள்வி-பதில் உரையாடலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது தொடா்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன; சரியான நேரம் வரும்போது, அது குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் பதிலளித்தார்” என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தருமபுரியில் யானை வேட்டை – 3 பேர் கைது
தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரம் தொடர்புடைய மூன்று பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“தமிழக – கர்நாடக எல்லையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த நெருப்பூர் என்ற இடத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி யானை ஒன்று கொல்லப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக மூன்று சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், யானை வேட்டைய தடுக்க தவறியதாக, நெருப்பூர் பிரிவு வனவர் சக்திவேல், ஏமனூர் பீட் மற்றும் வனக்காப்பாளர் தாமோதரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவிட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வதது. அப்போது, தருமபுரி மாவட்ட வன அதிகாரி ராஜாங்கம், யானைகள் இறந்துவிட்டால் என்ன மாதிரியான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்திய முதல் மாநிலம் தமிழகம்தான் எனவும் அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி தருமபுரி யானை வேட்டையாடப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதை ஏற்று, யானையை வேட்டையாடிய நபரை விரைந்து பிடிக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்கும்படி உத்தரவிட்டு வழக்கு தொடர்பான விவரங்களை அறிக்கையாகத் தாக்க செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
என அச்செய்தி கூறுகிறது.
நாட்டை ஆள்வதற்கான தொலைநோக்குப் பார்வை அரசிடம் இல்லை – சஜித்
வளமான நாட்டை உருவாக்குவோம் என்று கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்த தேசிய மக்கள் சக்திக்கு நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளைக்கூட பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.; நாட்டை ஆள்வதற்கான தொலைநோக்குப் பார்வையோ, வேலைத்திட்டமோ இந்த அரசாங்கத்திடம் இல்லை என இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக, வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“கடந்த காலங்களில் நாட்டின் சுகாதாரத் துறையில் மருந்துப்பொருள் மோசடி, கொள்ளை போன்ற பல பிரச்சினைகள் காணப்பட்டன. தரம் குறைந்த மருந்துகளால் பலரின் உயிர்கள் பறிபேனது.
இன்றும் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு அரசாங்கத்திடம் தீர்வில்லை. இதற்கான ஏற்பாடுகள் கூட காண்பதற்கில்லை.
ஆஸ்துமா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் மருந்து, நுரையீரல் தொற்றுக்கு வழங்கப்படும் மருந்து, நிமோனியா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும் பாக்டீரியா தொற்றுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகின்றன.
ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் மக்கள் ஆணையை வழங்கி, 225 பேரில் 159 பேரோடு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியது இவ்வாறான மருந்துகளுக்கு தட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதற்கல்ல.” என தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
மேலும், “மக்களின் உயிரைக் காப்பாற்றும் மருந்துப் பொருட்களுக்கு இவ்வாறு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் இவ்வேளையில், அரசாங்கமானது இது தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை
வளமான நாட்டை உருவாக்குவோம் என்று கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தனர். ஆனால் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளைக்கூட பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
நாட்டை ஆள்வதற்கான தொலைநோக்குப் பார்வையோ, வேலைத்திட்டமோ, பாதை வரைபடமோ இந்த அரசாங்கத்திடம் இல்லை. நாட்டை நிர்வகிக்க முடியாத, இயலுமையற்ற அரசாங்கமே தற்போது காணப்படுகின்றது” என தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு