“தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது” என ‘மாற்றுப் பார்வை’யில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளது, பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
தனியார்மய எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்கள் போராடிய தூய்மைப் பணியாளர்களை சமீபத்தில் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்தது காவல் துறை. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலான இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
‘சமூக நீதி அரசு என சொல்லிக்கொள்ளும் தமிழக அரசு இப்படித்தான் நடந்துகொள்ளுமா?’ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்கூட இந்த கைது நடவடிக்கையை கடுமையாக கண்டித்தன.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டக்களத்துக்குச் சென்றபோதும், அதன்பின்னரும் அவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் எனப் பேசிக் கொண்டிருந்த விசிக தலைவர் திருமாவளவன், கைது நடவடிக்கைக்குப் பின்னர் மற்றொரு கோணத்தில் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தனது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “குப்பை அள்ளுகிறவர்களை பணி நிரந்தரம் செய்து, அந்தத் தொழிலையே நீங்களே செய்து கொண்டிருங்கள் என்று சொல்லுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. சாக்கடையை சுத்தம் செய்கிறவனே சாக்கடையைச் சுத்தம் செய்யட்டும் என்கிற கருத்துக்கு இது வலுச் சேர்ப்பதாக இருக்கிறது.
இதைப் போய் போராடுகின்ற தூய்மைப் பணியாளர்களிடம் சொன்னால், அவர்களுக்கு எதிராக நாம் பேசுகிறோம் என்று கருதுவார்கள். அதனால் தான் நாமும் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று சொல்ல நேர்ந்தது. அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று சொல்வது தான் சரியான கருத்து. குப்பை அள்ளுபவர்களின் பிள்ளைகள் தான் குப்பையை அள்ள வேண்டுமா?’ எனத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஒவ்வொரு துறையிலும் பணி நிரந்தர கோரிக்கைகள் உள்ளன. பல ஆண்டுகளாக பணிபுரிபவர்களுக்கு முறையான ஊதியம், காப்பீடு, பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் போன்ற பலன்களுக்காகவே அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றனர். தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டால், அவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்கும். இதன் மூலமாக அவர்களின் அடுத்த தலைமுறை கல்வி கற்று நல்ல நிலையை அடையும்.
ஆனால், பணி நிரந்தரம் இல்லையென்றால், தொடர்ந்து அவர்கள் தனியாராலும் சுரண்டப்படுவார்கள். அவர்களின் வாழ்க்கைத் தரம் இன்னமும் மோசமடையும். எனவே, திருமாவளவனின் கருத்து தவறானது என்ற விமர்சனங்கள் வெடித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, “பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் 13 நாள்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது முன் வைக்கப்படாத இந்த யோசனைகள், தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டதால் தமிழ்நாடு அரசின் மீது ஒட்டுமொத்த தமிழகமும் கோபத்தில் இருக்கும் நிலையில் எழுப்பப்படுவது வினோதமாக உள்ளது.
மக்களின் கோபத்திலிருந்து அரசைக் காப்பாற்றுவதற்காக இந்த யோசனைகள் முன்வைக்கப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்துக்கான மாற்று வழிகள் பற்றி எதுவும் பேசாமல், தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கக் கூடாது என்று மட்டும் வலியுறுத்துவது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். சமுக நீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக் கூடாத” எனத் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் கருத்தை கண்டித்துள்ள மத்திய இணைய அமைச்சரும். பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன், “தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு அவர்களுக்கு பணி உயர்வையும் வழங்க வேண்டும். மாற்றி மாற்றி பேசி பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் மிகப் பெரிய துரோகத்தை இழைத்து வருகிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலின மக்களின் பிரச்சினைகளுக்கு திருமாவளவன் குரல் கொடுத்ததில்லை. திமுக கூட்டணியில் ஒட்டிக்கொள்ள வேண்டும். அந்தக் கூட்டணியில் இருந்து எம்.பி, எம்எல்ஏ-க்களாக வேண்டும் என்பதுதான் அவருடையை குறிக்கோள்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகமும் திருமாவளவனின் கருத்தை ஏற்கவில்லை. அவர், “தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது என திருமாவளவன் சொல்லும் கருத்து சரியானது அல்ல.
எனக்கு தெரிந்த ஒரு பெண்ணின் பெற்றோர் இருவரும் தூய்மைப் பணியாளர்கள். நிரந்தர பணியாளர்களாக அவர்கள் இருந்ததால், அதில் கிடைக்கும் வருமானம் மூலம் அப்பெண்ணை நன்றாக படிக்க வைத்தனர். இதனால் அப்பெண் இன்று முனைவர் பட்டம் பெற்று கல்லூரி பேராசிரியராக இருக்கிறார். ஒருவேளை அவர்களுக்கு நிரந்தரப் பணி இல்லையென்றால், பெற்றோர்களுக்குப் பின் அந்தப் பெண்ணும் தூய்மைப் பணிக்கே வந்திருப்பார்.
பணி நிரந்தரம் செய்யப்பாட்டால் அதில் கிடைக்கும் ஊழியம், சலுகைகளால் அடுத்த தலைமுறை முன்னேற்றம் அடையும். நாம் ஒன்றும், பரம்பரையாக ஒரு குடும்பத்துக்கு தூய்மைப் பணியாளர் பணியை வழங்க வேண்டும், இதே வேலையை பரம்பரையாக அவர்களுக்கு நிரந்தரம் செய்யவேண்டும் எனக் கேட்கவில்லை. இப்போது பணியில் உள்ளவர்களை நிரந்தரம் செய்யவே கேட்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர் பணி நிரந்தரம் தொடர்பான திருமாவளவனின் கருத்துக்கு, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அவரின் கூட்டணி கட்சிகளே எதிர்வினையாற்றி ஆரம்பித்துள்ளன. இதற்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் எனப் பார்ப்போம்.