தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் செல்வப்பெருந்தகையின் நெருங்கிய உறவினர் அங்கம் வகித்த நிறுவனம் அதிக லாபம் அடைந்ததாக குற்றம்சாட்டி சிபிஐ விசாரணை கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மத்திய அரசின் நமஸ்தே என்ற திட்டம் ஆகியவற்றில் முறைகேடு நடப்பதாக யூடியூபரான சவுக்கு சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் இந்த திட்டங்கள் சட்டவிரோதமாக தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை மற்றும் ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் என்ற தனியார் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்புகளின் முக்கிய நிர்வாகியாக உள்ள வீரமணி, காங்கிரஸ் மாநிலத் தலைவரான செல்வப்பெருந்தகையின் நெருங்கிய உறவினர் என்றும் தெரிவித்திருந்தார். இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தியதால்தான் எனது வீட்டில் சிலர் கழிவுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டதாகவும் எனவே, இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் இந்த திட்டத்தின் கீழ் 213 தகுதியான பட்டியலின வகுப்பைச் சேர்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த ஆதாரங்களும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பின்னர் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களுக்கான இத்திட்டத்தின் பலன் உண்மையான பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஆனால் இத்திட்டத்தின் மூலமாக தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகையின் நெருங்கிய உறவினரான வீரமணி அங்கம் வகித்த தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையும், ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களே அதிகமாக லாபம் அடைந்துள்ளன. அதேநேரம் இத்திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசுக்கும் பாராட்டுக்கள். எனவே இத்திட்டத்தில் ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் இத்திட்டத்தின் பங்குதாரர்களாக சேர்க்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
இதை ஏற்பதாக தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை மற்றும் ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.