பட மூலாதாரம், TVK
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், தாங்கள் ஆட்சிக்கு வரும்போது செய்ய விரும்பும் விஷயங்கள் என்ன என்பதைக் குறிப்பிட்டார். மேலும், தன் ஆதாரவாளர்கள் மீது முன்வைக்கப்படும் விமர்சன ரீதியிலான சொல்லாடலுக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு மக்களை சந்தித்த விஜய், காஞ்சி மக்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசி தன் உரையைத் தொடங்கினார்.
மேலும், “வாலாஜாபத் அருகே அவலூர் ஏரி, பாலாறை விட உயரமாக இருப்பதால் ஆற்றுத் தண்ணீர் ஏரிக்குப் போக முடியவில்லை. அங்கு தடுப்பணை கட்டுவதன் மூலம் விவசாயம் சிறப்பாக நடக்கும். இதற்காக எத்தனை ஆண்டுகள் மக்கள் போராட வேண்டும்?” என்றும் விஜய் கேள்வியெழுப்பினார்.
மேலும், “பரந்தூர் விமான நிலையப் பிரச்னையில் நாங்கள் விவசாயிகளின் பக்கம் மட்டுமே நிற்போம்” என்றும் அவர் கூறினார்.
மேலும், புகழ்பெற்ற காஞ்சிப் பட்டு நெய்பவர்களின் நிலை மோசமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
60 ஆண்டுகளாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதையும் விமர்சித்த அவர், அரசால் அதற்கு ஒரு இடத்தை ஒதுக்க முடியாதா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
பட மூலாதாரம், TVK
தவெக அரசு ஆட்சிக்கு வந்தபின்னர் தான் செய்ய நினைக்கும் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகக் கூறி சில விஷயங்களை அவர் பகிர்ந்தார்.
“எல்லோருக்கும் நிரந்தரமான வீடு. எல்லா வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் உறுதியாக இருக்கும். கார் லட்சியம், அதற்கான வசதி வாய்ப்பை உண்டாக்கும் வகையில் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். ஒவ்வொரு வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வீட்டில் குறைந்தது ஒருவருக்கு நிரந்தர வருமானம். அதற்கான வேலைவாய்ப்பை உருவாக்கவேண்டும்.” என பல்வேறு திட்டங்கள் குறித்து கூறினார் விஜய்.
இந்தத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படும் என்பது தவெகவின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக விளக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆதரவாளர்கள் மீதான விமர்சனத்திற்கு பதில்
தவெக ஆதராவளர்கள் மீது முன்வைக்கப்படும் விமர்சனம் குறித்து பேசிய விஜய், “தற்குறி தற்குறி என்கிறீர்களே, இவர்களெல்லாம் ஒன்றாக சேர்ந்துதான் இத்தனை நாள் ஆட்சி செய்த உங்களின் அரசியலை கேள்விக்குறியாக்கப் போகிறார்கள். இவர்களெல்லாம் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறி. தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி” என்றும் அவர் கூறினார்.