படக்குறிப்பு, முடி உதிர்தல் சிகிச்சைகளுக்கு தேசிய சுகாதார காப்பீடு காப்பீடு அளிக்க வேண்டும் என்று அதிபர் லீ பரிந்துரைத்தார்.கட்டுரை தகவல்
தென்கொரியாவின் நேர்த்தியான சிகையலங்காரம் கொண்ட அதிபர் லீ ஜே-மியுங், அந்நாட்டின் வழுக்கைப் பிரச்னை உள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
முடி உதிர்தல் சிகிச்சைகளுக்கான செலவை தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் ஏற்க வேண்டும் என்று அதிபர் லீ பரிந்துரைக்கிறார்.
முடி உதிர்தலுக்கான மருத்துவ சிகிச்சைகள் முன்பு “அழகு சார்ந்ததாக” (cosmetic) கருதப்பட்டன, ஆனால் தற்போது அவை “வாழ்வாதாரம் சார்ந்த விஷயமாகப்” பார்க்கப்படுகின்றன என்று அதிபர் லீ ஜே-மியுங் இந்த வார ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.
தற்போது தென்கொரியாவின் தேசிய சுகாதாரக் காப்பீடு, சில மருத்துவக் காரணங்களால் ஏற்படும் முடி உதிர்தல் சிகிச்சைகளுக்கு மட்டுமே நிதி வழங்குகிறது. ஆனால், பரம்பரை ரீதியான முடி உதிர்தல் ஒருவரின் உயிருக்கோ அல்லது ஆரோக்கியத்திற்கோ அச்சுறுத்தலாக இல்லாததால், அது இக்காப்பீட்டில் சேர்க்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் ஜியோங் உன்-கியோங் செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் விளக்கினார்.
அதற்குப் பதிலளித்த லீ, “பரம்பரை ரீதியாக வரும் நோயை ஒரு நோயாக வரையறுப்பதா, இல்லையா என்பது மட்டும்தானா இங்கே கேள்வி?” என்று கேட்டார்.
லீ-யின் இந்த முன்மொழிவு சமூக ஊடகப் பயனாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர்களில் ஒருவர் அவரை “வரலாற்றிலேயே சிறந்த அதிபர்” என்று புகழ்ந்துள்ளார்.
இருப்பினும், அனைவரும் இதில் உற்சாகமடையவில்லை.
மானிய விலையில் முடி உதிர்தல் சிகிச்சை பெறத் தகுதியுள்ளவர்கள் கூட இதற்கு ஆதரவாக இல்லை.
இந்த நடவடிக்கை, “வாக்குகளைக் கவரும் கொள்கை போலத் தெரிகிறது” என்று சியோலில் வசிக்கும் 32 வயதான சாங் ஜி-ஹூன் கூறுகிறார். இவர் முடி உதிர்தலுக்காக மருந்துகளை உட்கொண்டு வருகிறார். “பணத்தை மிச்சப்படுத்துவது நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் உண்மையைச் சொன்னால் இதற்கு வருடத்திற்கு 300,000 வோன்களுக்கும் (சுமார் 200 டாலருக்கும்) குறைவாகவே செலவாகிறது, எனவே… இது அவசியம்தானா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, முடி உதிர்தல் சிகிச்சை “தப்பிப் பிழைத்தலுக்கான ஒரு விஷயம்” என்று அதிபர் லீ ஜே மியுங் கூறுகிறார்.
விவாதத்தின் முக்கிய பகுதிகள்
கடுமையான அழகுத் தரநிலைகளுக்குப் பெயர் பெற்ற தென்கொரியாவில், வழுக்கை என்பது இழிவாகக் கருதப்படுகிறது. இது குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
கடந்த ஆண்டு முடி உதிர்தல் பிரச்னைக்காக மருத்துவமனைக்குச் சென்ற 2,40,000 பேரில், 40 சதவீதத்தினர் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
“எனது நெற்றிப் பகுதி முடி தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அதனால் பெர்ம் செய்யவும், வாக்ஸ் பயன்படுத்தவும் முடியவில்லை,” என்று வட சுங்சியோங் மாகாணத்தைச் சேர்ந்த 33 வயதான லீ வோன்-வூ கூறினார்.
“இதனால் என்னால் தலைமுடியை நான் விரும்பியபடி சீரமைக்க முடிவதில்லை. இதனால் நான் அசுத்தமாகவும், கவர்ச்சியற்றவனாகவும் இருப்பதாக உணர்கிறேன். இது எனது தன்னம்பிக்கையை கடுமையாகப் பாதித்துள்ளது,” என்கிறார் லீ வோன்-வூ.
முடி உதிர்தல் மருந்துகளுக்கு மானியம் வழங்கப்பட்டால் தனக்கு “மகிழ்ச்சி தான்” என்றாலும், “தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
“பணத்தை இப்படி அள்ளி வீசக்கூடிய சூழலில் நாம் இல்லை,” என்கிறார் அவர்.
மேலும், வழுக்கை என்பது ஒரு “அழகு சார்ந்த பிரச்சனை” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“இது முதிர்ச்சியின் ஒரு அங்கம் தான், இது ஒன்றும் நோய் கிடையாது. இதனால் ஏற்படும் மனவலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அது யதார்த்தத்தை மாற்றிவிடாது,” என்கிறார் லீ.
தென்கொரியாவின் தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் கடந்த ஆண்டு 11.4 டிரில்லியன் வோன் (7.7 பில்லியன் டாலர்) என்ற அளவிலான பற்றாக்குறையைச் சந்தித்தது.
அந்நாட்டின் முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், இந்தத் திட்டம் மேலும் நிதி நெருக்கடிக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
இந்த நிதிச் சுமையைக் குறைக்க, முடி உதிர்தல் சிகிச்சைகளுக்கு குறிப்பிட்ட வரம்புகளை விதிக்கலாம் என்று அதிபர் லீ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இருப்பினும், சமூகத்தில் மிகவும் நலிவடைந்த நிலையில் இருப்பவர்களுக்கு உதவுவதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
முடி உதிர்தலுக்கு முன்னதாக, மிகவும் தீவிரமான நோய்களுக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று கொரிய மருத்துவ சங்கம் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவின் அதிகப்படியான தற்கொலை விகிதம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு போன்ற பெரிய சமூகப் பிரச்னைகளை சமூக ஊடக பயனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“சானிட்டரி பேட்கள் அல்லது மார்பகப் புற்றுநோய் மருந்துகளுக்குக் காப்பீடு வழங்கக் கோரும்போதே மக்கள் கொதித்தெழும் ஒரு நாட்டில், முடி உதிர்தல் மருந்துகளுக்குக் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிப்பது ஒரு மோசமான நகைச்சுவை போலத் தெரிகிறது,” என்று பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“ஒரு சமூகத்தில் உயிர்வாழ்வதைத் தீர்மானிக்கும் காரணியாக முடி உதிர்தல் மாறுகிறது என்றால், அந்தச் சமூகத்தை மாற்றுவதுதான் அரசியலின் பங்காக இருக்க வேண்டும்,” என்று மற்றொருவர் எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, லீ ஜே மியுங் 2025 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, நாட்டின் இளைஞர்களை ஆதரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார்.
லீ-யின் இந்த தீவிர முயற்சிக்கு பின்னாலுள்ள காரணங்கள்
அதிபருக்கு இது ஒரு வினோதமான முயற்சியாகத் தோன்றலாம், ஆனால் முடி உதிர்தல் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டம் வழங்கும் முன்மொழிவு, 2022-ஆம் ஆண்டு, லீ தோல்வியடைந்த அதிபர் தேர்தலின் போது ஒரு முக்கிய முழக்கமாக இருந்தது.
அப்போது, லீ மற்றும் அவரது குழுவினர் முடி உதிர்தல் பிரச்னையால் அவதிப்படுபவர்களிடமிருந்து கருத்துக்களைச் சேகரித்தனர். மேலும், முடி உதிர்தல் விளம்பரத்தைப் போன்ற ஒரு பகடி வீடியோவிலும் லீ நடித்தார். இது சில வாக்காளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இருப்பினும், அந்தச் சமயத்தில் அதிகரித்த பெண்ணிய எதிர்ப்பு அலைக்கு மத்தியில், தனது எதிர்தரப்பான பழமைவாத சித்தாந்தம் கொண்டவர்களை ஆதரித்த இளம் ஆண் வாக்காளர்களைக் கவர்வதற்காக லீ இதுபோன்ற வித்தைகளைக் கையாளுவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர்.
லீ 2022 தேர்தலில் தோல்வியடைந்தார்.
இந்த ஆண்டு அவர் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார், ஆனால் இம்முறை அவரது தேர்தல் பிரச்சாரத்தில் முடி உதிர்தல் சிகிச்சை குறித்த செய்திகள் நீக்கப்பட்டிருந்தன.
“இந்த முறை அவர் அந்த வாக்குறுதியால் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை,” என்கிறார் கொரியா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் இணைப் பேராசிரியர் டான் எஸ். லீ.
இருப்பினும், 2026-ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிபர், “தனது ஆதரவாளர் தளத்தை விரிவுபடுத்த” முயற்சி செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
அதிபராகப் பதவியேற்றது முதல், லீ நாட்டின் இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அவர்களில் பெரும்பாலோர் கடுமையான போட்டி மற்றும் மந்தமான பொருளாதாரச் சூழலை எதிர்கொள்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை அன்று, உடல் பருமனுக்கான மருந்துகளையும் தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று லீ பரிந்துரைத்தார்.
இத்திட்டத்தின் பலன்கள் இளைஞர்களின் தேவைகளுக்கு ஏற்ப இல்லாததால், அவர்கள் இத்திட்டத்திலிருந்து “தனிமைப்படுத்தப்பட்டதாக” உணர்வதாக அவர் வாதிட்டார்.
சுகாதாரக் காப்பீட்டின் கீழ் முடி உதிர்தல் சிகிச்சையைக் கொண்டு வருவதில் அதிபர் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்பதில் பேராசிரியர் லீ சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்.
“தனிப்பட்ட முறையில், அதிபர் லீ இந்த விஷயத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது,” என்கிறார் அவர்.
“இது இளம் ஆண் வாக்காளர்களைக் குறிவைத்துச் செய்யப்படும் ஒரு உத்தி சார்ந்த நடவடிக்கை தான். ‘நான் உங்கள் மீதும் அக்கறை கொண்டுள்ளேன்’ என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கும் ஒரு சமிக்ஞை இது.” எனக் குறிப்பிடுகிறார் பேராசிரியர் லீ.