கொழும்பு, பொரளையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 5 இளைஞர்களில் இருவர் இன்று வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை, சஹஸ்புர சிறிசர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்கு அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
நேற்று இரவு 8:40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் இளைஞர்கள் குழுவை குறிவைத்துத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
ரி – 56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுச் சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த 5 இளைஞர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் களனியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும், கொழும்பைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த 21, 23 வயதுடைய 3 இளைஞர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,
“துப்பாக்கிச்சூடு ‘குடு துமிந்த’ கும்பலால் நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘குடு சத்து’வின் சகோதரர் ஒருவர், நேற்று இரவு சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்.
துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல், டுபாயில் தலைமறைவாக உள்ள இரு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இருக்கலாம் எனப் சந்தேகிக்கின்றோம்.” – என்றனர்.
பொரளை பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு! – இருவர் சாவு; மூவர் படுகாயம் appeared first on Vanakkam London.