தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 27-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளிலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. குறிப்பாக, வேலூர், கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருமவழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (மே 13) தொடங்க வாய்ப்பு உள்ளது. அதேபோல, கேரளாவில் வரும் 27-ம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. கடந்த 2023-ல் ஜூன் 7-ம் தேதியும், கடந்த 2024-ல் மே 30-ம் தேதியும் பருவமழை தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு அதைவிட 4 நாட்கள் முன்னதாக தொடங்க உள்ளது’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலமாக கணக்கிடப்படுகிறது. வானிலை ஆய்வு மையத்தை பொருத்தவரை, கேரளாவில் பருவமழை தொடங்குவதன் அடிப்படையிலேயே, பருவகால மழைப்பொழிவு, புயல் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து வருகிறது.
எனினும், தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவகாலம்தான் அதிக மழை தரும் பருவம். இந்த காலகட்டத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை கிடைக்கும். கடந்த ஆண்டில், ஓரளவு இதற்கு இணையாக தென்மேற்கு பருவமழை காலத்திலேயே தமிழகத்துக்கு மழை கிடைத்தது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவகாலத்தில் வழக்கமாக 32 செ.மீ. மழை கிடைக்கும். கடந்த ஆண்டு 39 செ.மீ. மழை கிடைத்தது. சில ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை பொய்க்கும்போது, தென்மேற்கு பருவமழைதான் தமிழக மக்களுக்கு பேருதவியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.