வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு திட்வா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
அதேபோல், பாம்பன், தூத்துக்குடி ஆகிய இரண்டு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (நவ. 27) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அருகிலுள்ள இலங்கை கடற்கரையில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, அதிகாலை 5.30 மணி அளவில் இலங்கையின் ஹம்பாந்தோட்டையிலிருந்து கிழக்கு-வடகிழக்கே 150 கி.மீ தொலைவிலும், இலங்கையின் மட்டக்களப்பிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 190 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன் பிறகு, “அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள கடற்கரை வழியாக வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆங்காங்கே அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் சில பகுதிகளில் அதிகனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வரும் 29ம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
“திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் புதுக்கோட்டை, திருச்சி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 30ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழை பெய்யும் என்றும் சென்னை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.