பட மூலாதாரம், Getty Images
வெனிசுவேலா, லத்தீன் அமெரிக்காவிலேயே மிக அதிக அளவில் நகரமயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். இது மிகப்பெரிய அளவிலான கச்சா எண்ணெய் இருப்புகளைக் கொண்டிருப்பதுடன், நிலக்கரி, இரும்புத்தாது, பாக்சைட் மற்றும் தங்கம் ஆகியவற்றையும் பெருமளவில் கொண்டுள்ளது.
வெனிசுவேலா உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த போதிலும், 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்நாடு மிக மோசமான பொருளாதார மேலாண்மையை எதிர்கொண்டது.
2013-இல் மறைந்த முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸ், தனது 14 ஆண்டு கால ஆட்சியில் தன்னை ஏழைகளின் தலைவனாக முன்னிறுத்திக் கொண்டார். வெனிசுவேலாவின் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான எண்ணெய் வளத்தை அவர் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்காக வழங்கினார்.
அவருக்குப் பின் பதவியேற்ற நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கம், கடும் வீழ்ச்சியடைந்த எண்ணெய் விலையாலும், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளாலும் பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. இது வெனிசுவேலாவை ஏறக்குறைய ஒரு நிலைகுலைந்த நிலைக்குத் தள்ளியது.
அந்நாடு பரவலான பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை, வேலையின்மை மற்றும் குற்றச்சம்பவங்கள் போன்ற சிரமங்களுக்கு உள்ளானது. இதன் விளைவாக, எழுபது லட்சம் வெனிசுவேலா மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.
அண்டை நாடான கயானாவுடன், எண்ணெய் வளம் மிக்க எசெக்கிபோ பகுதி தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைத் தகராறில் வெனிசுவேலா ஈடுபட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இந்தப் பகுதியை 1899-ஆம் ஆண்டிலிருந்து கயானாவும், அதற்கு முன்னதாக பிரிட்டிஷ் கயானாவும் (British Guiana) நிர்வாகம் செய்தது.
முக்கியத் தகவல்கள்
- தலைநகரம்: கராகஸ்
- பரப்பளவு: 916,445 சதுர கிலோமீட்டர்
- மக்கள் தொகை: 30.5 மில்லியன் (3.05 கோடி)
- மொழிகள்: ஸ்பானிஷ் மற்றும் பிராந்திய மொழிகள்
- உத்தேச ஆயுட்காலம்: 67 ஆண்டுகள் (ஆண்கள்), 76 ஆண்டுகள் (பெண்கள்)
தலைவர்கள்
அதிபர்: டெல்சி ரோட்ரிக்ஸ்
பட மூலாதாரம், Getty Images
வெனிசுவேலாவின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்ட பிறகு துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ், அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தனது வழிகாட்டியான ஹியூகோ சாவேஸின் மறைவையடுத்து, அதிபர் நிக்கோலஸ் மதுரோ மார்ச் 2013 முதல் ஆட்சி செய்து வந்தார்.
2026 ஜனவரி மாத தொடக்கத்தில் அமெரிக்கா வெனிசுவேலாவில் ராணுவத் தாக்குதலை நடத்தி, அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது.
பட மூலாதாரம், Getty Images
சர்ச்சைக்குரிய வெற்றி
ஜூலை 2024 அதிபர் தேர்தலில், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையமான தேசிய தேர்தல் கவுன்சில், மதுரோ வெற்றி பெற்றதாக அறிவித்தது. இதன் மூலம் அவருக்கு மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக அதிபர் பதவி வகிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
எதிர்க்கட்சியினர் தங்களின் வேட்பாளர் எட்முண்டோ கோன்சாலஸ்தான் உண்மையான வெற்றியாளர் என்று கூறினர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிகாரிகள் அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்ததைத் தொடர்ந்து, கோன்சாலஸ் ஸ்பெயின் நாட்டுக்குத் தப்பிச் சென்று அங்கு தஞ்சமடைந்தார்.
தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்த வெனிசுவேலா விரிவான வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடாதவரை, நிக்கோலஸ் மதுரோவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெரும்பாலான வெளிநாட்டு அரசாங்கங்கள் மறுத்துவிட்டன.
தேர்தல் முடிவுகளை அதிபர் மதுரோவின் நட்பு நாடுகளான ரஷ்யா, சீனா மற்றும் இரான் உள்ளிட்ட நாடுகள் அங்கீகரித்தன.
2018-ல் நடைபெற்ற கடந்த தேர்தல் சுதந்திரமானதாகவோ அல்லது நியாயமானதாகவோ இல்லை எனப் பரவலாக நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா உட்பட பல நாடுகள் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவை இடைக்கால அதிபராக அங்கீகரித்தன; மேலும் வெனிசுவேலா மீது கடும் பொருளாதாரத் தடைகளையும் விதித்தன.
ஆனால் 2024 தேர்தலில், அதிபர் மதுரோவுக்குப் பதிலாக எட்முண்டோ கோன்சாலஸ் வெற்றி பெற்றதற்கான ‘வலுவான ஆதாரங்கள்’ இருப்பதாக அமெரிக்கா கூறியபோதிலும், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அவரை அதிபராக அங்கீகரிப்பதிலிருந்து பின்வாங்கின.
பதிலாக, மேற்கில் பல வெளிநாட்டு அரசுகள், மதுரோவின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் அதிகார மாற்றத்தை உறுதி செய்ய, “பிரேசில் அணுகுமுறை” என்று அழைக்கப்படும் வழிமுறைக்கு முன்னுரிமை அளித்தன.
ஊடகங்கள்
பட மூலாதாரம், Getty Images
வெனிசுவேலாவின் அரசியல் பிளவு, அந்நாட்டு ஊடங்கங்களிலும் பிரதிபலிக்கிறது.
அரசுத் தொலைக்காட்சியின் செய்திகள் எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கின்றன. அரசாங்கத்தை விமர்சிக்கும் மற்றும் வெளிநாட்டில் இருந்து இயங்கும் ஊடகங்கள் இணையவழியில் இயங்கி வருகின்றன.
மிரட்டல்கள் மற்றும் உடல் ரீதியான ஆபத்துகள் காரணமாக பல பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடிவிட்டதாக எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கூறுகிறது.
காலவரிசை
பட மூலாதாரம், Getty Images
வெனிசுவேலா வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்:
1498-99 – வெனிசுவேலாவிற்கு கிறிஸ்டோபர் கொலம்பஸ் மற்றும் அலோன்சோ டி ஓஜெடா வருகை தந்தனர். அப்போது வெனிசுவேலாவில் காரிப், அரவாக் மற்றும் சிப்சா பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர்.
1521 – ஸ்பெயின் காலனி ஆதிக்கம் தொடங்கியது.
1749 – ஸ்பெயின் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான முதல் கிளர்ச்சி நடைபெற்றது.
1810 – ஸ்பெயின் மீதான நெப்போலியனின் படையெடுப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி, வெனிசுவேலா மக்கள் சுதந்திரத்தை அறிவித்தனர்.
1829-30 – வெனிசுவேலா, கிரான் கொலம்பியாவிலிருந்து பிரிந்தது.
1870-88 – ஆட்சியாளர் அந்தோணியோ குஸ்மான் பிளாங்கோ வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, உள்கட்டமைப்பை நவீனப்படுத்தினார் மற்றும் விவசாயம் மற்றும் கல்வியை மேம்படுத்தினார்.
1889 – எசெக்கிபோ ஆற்றிற்கு மேற்கே உள்ள கயானாவின் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பிற்கு வெனிசுவேலா உரிமை கோரியது, ஆனால் 1899-ல் சர்வதேச நடுவர் மன்றத் தீர்ப்பு கயானாவிற்கு ஆதரவாக அமைந்தது.
பட மூலாதாரம், Getty Images
1908-35 – சர்வாதிகாரி ஜுவான் விசென்டே கோமஸின் கீழ், வெனிசுவேலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக மாறியது.
1945 – பல தசாப்த கால ராணுவ ஆட்சிக்குப் பிறகு, ஒரு புரட்சியின் மூலம் மக்களாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டது.
1948 – வெனிசுவேலாவின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவரான அதிபர் ரோமுலோ காலெகோஸ், பதவியேற்ற எட்டு மாதங்களிலேயே மார்கோஸ் பெரெஸ் ஜிமெனெஸ் தலைமையிலான ராணுவப் புரட்சியால் பதவியிறக்கப்பட்டார்.
1958 – அட்மிரல் வொல்ப்காங் லாராசாபால், மார்கோஸ் பெரெஸ் ஜிமெனெஸைப் பதவியிலிருந்து அகற்றினார்; அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக நடவடிக்கை கட்சி சார்பில் போட்டியிட்ட இடதுசாரித் தலைவர் ரோமுலோ பெட்டான்கோர்ட் வெற்றி பெற்றார்.
1964 – ரால் லியோனி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, முதன்முறையாக வெனிசுவேலாவில் ஒரு மக்களாட்சி தலைவரிடமிருந்து மற்றொருவரிடம் அதிபர் அதிகாரம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
1973 – வெனிசுவேலா எண்ணெய் வளப் பெருக்கத்தினால் பயனடைந்தது மற்றும் அதன் நாணயம் அமெரிக்க டாலருக்கு எதிராக உச்சத்தை எட்டியது. எண்ணெய் மற்றும் எஃகுத் தொழில்கள் தேசிய மயமாக்கப்பட்டன.
1989 – பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் கார்லோஸ் ஆண்ட்ரெஸ் பெரெஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடனுடன் சிக்கன நடவடிக்கைத் திட்டத்தைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து கலவரங்கள், ராணுவச் சட்டம் மற்றும் பொது வேலைநிறுத்தம் வெடித்தன. தெருக்களில் நடந்த வன்முறைகளில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1992 – கர்னல் ஹியூகோ சாவேஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரண்டு முறை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளை மேற்கொண்டனர். அந்தப் புரட்சிகளை ஒடுக்கியதில் சுமார் 120 பேர் கொல்லப்பட்டனர்; கர்னல் சாவேஸ் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
1998 – நிலைபெற்ற அரசியல் கட்சிகள் மீதான அதிருப்திக்கு மத்தியில் ஹியூகோ சாவேஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் ‘பொலிவாரியப் புரட்சியை’ தொடங்கினார். உயர்ந்து வந்த எண்ணெய் விலையினால் கிடைக்கும் நிதியைக் கொண்டு, சோசலிச மற்றும் மக்கள் நலப் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளை அவர் செயல்படுத்தினார்; மேலும், அமெரிக்காவிற்கு எதிரான தீவிர வெளியுறவுக் கொள்கையையும் கடைப்பிடித்தார்.
2005 – அதிபர் சாவேஸ், வெனிசுவேலாவின் பெரிய நிலப்பகுதிகளை ஒழித்து கிராமப்புற ஏழைகளுக்கு பயன் அளிக்கும் வகையில் நில சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். இது தனியார் சொத்துக்கள் மீதான தாக்குதல் என்று பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
2006 – அமெரிக்காவின் ஆயுத விநியோகங்களிலிருந்து விலகி, ரஷ்யாவுடன் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தில் வெனிசுவேலா கையெழுத்திட்டது. சாவேஸ் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
2012 – பணவீக்கத்திற்கு எதிரான போரில், அடிப்படைப் பொருட்களின் மீதான விலை கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீட்டித்தது. வெனிசுவேலா பிராந்திய வர்த்தக கூட்டமைப்பான மெர்கோசூரின் முழுநேர உறுப்பினரானது. சாவேஸ் நான்காவது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
2013 – புற்றுநோயுடன் போராடி வந்த சாவேஸ் தனது 58-வது வயதில் காலமானார். சரிந்து வரும் பொருளாதாரம் மற்றும் பிளவுபட்ட தேசத்திற்கு மத்தியில், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிக்கோலஸ் மதுரோ குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2018 – எசெக்கிபோ எல்லை விவகாரத்தில் 1899-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என்ற வெனிசுவேலாவின் நீண்டகால கோரிக்கையை, சர்வதேச நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என்று ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் முடிவு செய்தார்.
2019 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முறைகேடானது எனக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோ தன்னைத்தானே இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார்; மேலும், அதிபர் மதுரோவைப் பதவியிலிருந்து அகற்றும்படி ராணுவத்திடம் கோரிக்கை விடுத்தார். ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள் குவைடோவை அங்கீகரித்தன.
2020 – எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தன, இதனால் அதிபர் மதுரோவின் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முறைப்படி வெற்றி பெற்றன.
2023 – ஏழு மில்லியனுக்கும் மேலான வெனிசுவேலா மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
2024 – சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், எதிர்க்கட்சியினர் தங்கள் வேட்பாளரே உண்மையான வெற்றியாளர் என்று கூறினர்.
2026- அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டும், நியூயார்க் அழைத்துச் செல்லப்பட்டார். டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு