2024 ஆம் ஆண்டு 29ஆம் தேதி அன்று காலை தென் கொரியாவில் விமானம் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியது. தாய்லாந்தில் இருந்து தென் கொரியா சென்ற ஜேஜூ ஏர் நிறுவனத்தின் விமானமானது, முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விமானம் தரையிறங்கும் போது, ஓடுபாதையின் முடிவில் இருந்த கான்கிரீட் சுவரில் மோதி தீப்பிடித்தது.
விமானத்தில் பயணம் செய்த 181 பேரில் 179 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பின்புறம் இருந்த இரண்டு விமான குழு உறுப்பினர்கள் மட்டுமே உயிர்த் தப்பினர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகில் இதுவரை, பல விமான விபத்துகள் நடைபெற்றிருக்கின்றன. விமானம் விபத்துக்குள்ளானால், அதில் உள்ள அனைவரும் இறந்துவிடுவார்கள் என்று பொருளல்ல. தென் கொரியாவில் நிகழ்ந்தது போன்ற ஒரு கொடூரமான விபத்தில் கூட 2 பேர் தப்பித்துள்ளனர்.
ஆனால் ஒருவரின் உயிருக்குள்ள அச்சுறுத்தலை நீங்கள் விமானத்தில் அமர்ந்திருக்கும் இருக்கைகளை வைத்து தீர்மானிக்க முடியுமா? பின் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் மட்டும்தான் உண்மையில் விமான விபத்தில் உயிர் பிழைக்க முடியுமா? இந்த கேள்விகள், பல ஆண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வருகின்றன.
விமான விபத்தை ஏற்படுத்தி சோதனை
2012ஆம் ஆண்டில், விமானத்தில் எந்த இடத்தில் அமர்ந்தால், ஒருவருக்கு குறைந்தபட்ச ஆபத்து ஏற்படும் என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்ள, பயணிகள் யாரும் இல்லாத விமானம் ஒன்று திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கப்பட்டது.
விஞ்ஞானிகள், பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் விமானிகள் இணைந்து டிஸ்கவரி தொலைக்காட்சியின் கியூரியாசிட்டி என்ற விமான விபத்து திட்டத்தின் கீழ் இந்த சோதனையை நடத்தினர்.
இந்த திட்டத்தின் கீழ், போயிங் 727 ரக விமானம் மெக்சிகோ பாலைவனத்தில் மோதச் செய்யப்பட்டது. விமானத்தில் வெவ்வேறு கோணங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த விமானத்தின் இருக்கைகளில் மனிதர்களின் போலி உருவ பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன. சில உருவ பொம்மைகளுக்கு சீட் பெல்ட்களும் அணிவிக்கப்பட்டிருந்தன.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று, இந்த விமானம் திறந்த பாலைவனத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பு, விமானி திட்டமிட்டபடி பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து குதித்தார்.
இந்த விமானம் 225 கி.மீ வேகத்தில் பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியது.
கண்டுபிடிப்புகள் என்ன?
போயிங் 727 ரக விமானம் விழுந்த பிறகு பல துண்டுகளாக உடைந்தது.
இந்த பரிசோதனை மூலம். விமானத்தின் முதல் வரிசையில் இருந்து ஏழாவது வரிசை வரை அமர்ந்திருக்கும் பயணிகள் பிழைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கண்டறியப்பட்டது. இந்த சோதனையின் போது இருக்கை எண் 7 ஏ ஆனது 150 மீட்டர் தொலைவில் விழுந்தது.
விமான இறக்கைப் பகுதியில், அதாவது நடு வரிசையில் உள்ள பயணிகளுக்கு எலும்பு முறிவு போன்ற காயங்கள் ஏற்படக்கூடும், ஆனால் அவர்களின் உயிருடன் காப்பாற்றப்படலாம் என்றும் கண்டறியப்பட்டது.
பின் வரிசையில் உள்ள இருக்கைகளில் அமர்ந்திருக்கும் பயணிகள், சிறிய காயத்துடனோ அல்லது காயமின்றியோ உயிர் பிழைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் எந்த காயமும் இல்லாமல் எளிதாக தப்பிக்க வாய்ப்புள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
தென் கொரிய விமான விபத்தைப் பொருத்தவரை, விமானத்தின் முன் பகுதிதான் முதலில் தரையில் மோதியது. ஆனால் விமானம் வேறு விதத்தில் விபத்துக்குள்ளானால் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கலாம்.
ஒருவர் தனது இருக்கையில் அமர்ந்துகொண்டு தலையை தனது மடியில் சாய்த்து, தலையை கைகளால் பாதுகாத்துக் கொண்டால், தீவிர காயங்களிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் இந்த நிலையில் இருக்கும் போது தலை அல்லது முதுகெலும்புக்கு தீவிர காயம் ஏற்படாது என்றும் இந்த சோதனையின் மூலம் கண்டறியப்பட்டது.
விமானத்தில் எந்த இருக்கை அதிக பாதுகாப்பானது?
அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனின் தரவுகளை வைத்து, டைம்ஸ் இதழ் ஒன்றை கண்டுபிடித்தது.
விமான விபத்துகளில் முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்களுக்கு 38 சதவீதம், நடு வரிசையில் அமர்ந்திருந்தவர்களுக்கு 39 சதவீதம், கடைசி சில வரிசைகளில் அமர்ந்திருந்தவர்களுக்கு 32 சதவீதம் என இறப்பு விகிதம் இருப்பதாக கண்டறியப்பட்டது.
கூடுதலாக, 2008 ஆம் ஆண்டு கிரீன்விச் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில், வெளியேறும் வழிக்கு அருகில் இருக்கும் நபர்கள் உயிருடன் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் நடந்த 20 விமான விபத்துக்களை ஆய்வு செய்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் தனது ஆய்வு முடிவை வெளியிட்டது.
விமானத்தின் கடைசி சில வரிசைகளில் அமர்ந்திருந்த பயணிகள் உயிர் பிழைக்க 69 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்தது. முதல் சில வரிசைகளில் இருப்பவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 49 சதவீதமாகவும், நடு வரிசையில் இருப்பவர்களுக்கு 59 சதவீதமாக இருப்பதாகவும் அதில் தெரியவந்தது.
விமான விபத்தில் ஒருவரின் உயிரை காப்பாற்ற முடியுமா என்பது அந்த விமானம் எந்த வகையில் விபத்துக்கு ள்ளானது என்பதைப் பொறுத்ததுதான் என்று விமான பயணங்களின் நிபுணர் விபுல் சக்சேனா கூறுகிறார்.
“சமீபத்தில் தென் கொரியாவில் நடந்த விபத்தில், விமானம் ஓடுபாதை முடிவில் இருந்த கான்கிரீட் சுவரில் மோதி மிகவும் பயங்கரமான விபத்து ஏற்பட்டது. இதுபோன்ற விபத்தில் உள்ளே இருப்பவர்களை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் விமானம் விபத்துக்குள்ளாகும் போது, முன்னால் இருந்த ஏழு-எட்டு வரிசைகளில் அமர்ந்திருப்பவர்களின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதும், பின் வரிசையில் அமர்ந்திருப்பவர்களின் உயிருக்கு ஆபத்து குறைவாக இருப்பதும் உண்மைதான்”, என்று அவர் கூறினார்.
“விமானம் belly landing முறையில் தரையிறங்கி இருந்தால், முன் வரிசையில் இருந்து பின் வரிசை வரை அமர்ந்திருந்த பயணிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்திருக்கும். அதிகம் பேர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஆனால் விமானம் ஓடுபாதை அருகே சுவரில் மோதினாலோ அல்லது முன்புறம் முதலில் தரையில் மோதினாலோ, முன் வரிசை சீட்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம், எனவே முன்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு அதிக ஆபத்து இருக்கிறது”. என்றார் அவர்.
பயணிகள் உயிருக்கு ஆபத்து இருக்கிறதா என்பது பெரும்பாலும் விமானம் எந்த வகையில் விபத்துக்கு உள்ளானது என்பதைப் பொருத்தது.
விமான விபத்து ஏற்படும் போது, பின் வரிசையில் அமர்ந்திருந்தால் உயிர் பிழைக்கலாம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, ஆனால் பின் வரிசையில் உள்ள பயணிகளுக்கு ஆபத்து குறைவாக உள்ளது என்று விபுல் சக்சேனா கூறுகிறார்.