பட மூலாதாரம், Getty Images
இந்தியா முழுவதும் கல்வி நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள் , சாலைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெருநாய்க் கடி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தெருநாய்களால் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள்தான் அதிக பிரச்னைகளைச் சந்திப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தத் தீர்ப்பை விமர்சித்து விலங்குநல ஆர்வலரும் பாஜக தலைவருமான மேனகா காந்தி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், “இந்தத் தீர்ப்பு முந்தைய தீர்ப்பைவிட மோசமானது. இதைச் செயல்படுத்த முடியாது. ஒருவேளை சாத்தியமெனில் முன்னரே செய்திருக்க முடியும்” என்றார்.
பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி இந்தத் தீர்ப்புதான் சரியான அணுகுமுறையாக இருக்கும் எனக் கூறி வரவேற்கிறார்.
ஆனால் இந்தத் தீர்ப்பு சிக்கல்களை உருவாக்கலாம் என்கிறார் தமிழ்நாடு விலங்குநல வாரியத்தின் உறுப்பினரான ஷ்ருதி வினோத் ராஜ்.
தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டிய இடங்கள்
- பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள்
- மருத்துவமனைகள்
- ரயில் நிலையங்கள்
- பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள்
- விளையாட்டு மைதானங்கள் மற்றும் வளாகங்கள்
- மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள்
மேலும் தெருநாய்கள் உள்ளே நுழையாதவாறு இந்த இடங்களைச் சுற்றி வேலிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
மக்கள் கருத்து என்ன?
சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியரான ராம் சரண் இந்த தீர்ப்பை வரவேற்கிறார். இந்த முடிவு மக்களுக்கு மட்டுமல்ல நாய்களுக்கும் பலன் அளிக்கும் என்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “10, 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு. தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துவிட்டது. நாய்க்கடி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் பாதுகாப்பிற்கு இது அவசியமானது தான். தெரு நாய்களுக்கும் பாதுகாப்பான சூழலை இது உருவாக்கும்.” என்றார்.
ஆனால் இந்த கருத்திலிருந்து மாறுபடும் விலங்கு ஆர்வலரான சாந்தி இதை நடைமுறையில் சாத்தியப்படுத்த முடியுமா எனக் கேள்வி எழுப்புகிறார்.
“நாய்களை அப்புறப்படுத்துவதால் மட்டும் இந்த பிரச்னை முடிந்து விடுமா? அடைத்து வைக்கப்படும் நாய்களை பாராமரிப்பதற்கு என்ன வழிகள் உள்ளன என அனைத்தையும் பார்க்க வேண்டும். நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினாலே இந்தப் பிரச்னை காலப்போக்கில் குறைந்துவிடும்.” என பிபிசியிடம் தெரிவித்தார்.
‘தெரு நாய்களை அதே இடத்தில் விடக்கூடாது’
உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட இடங்களில் கைப்பற்றப்படும் தெருநாய்களை மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு (ஏபிசி) விதிகளின்படி கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்காகப் பிடிக்கப்படும் நாய்களை பிடித்த இடத்திலே மீண்டும் விடவேண்டும்.
“நாங்கள் காரணமாகத்தான் தெருநாய்களைப் பிடித்த இடத்தில் விடக்கூடாது எனத் தெரிவித்துள்ளோம். ஏனென்றால் அதை அனுமதிப்பது இந்த வளாகங்களில் தெருநாய்களை அகற்ற வேண்டும் என்கிற நோக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையே நீர்த்துப் போகச் செய்துவிடும்” என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்திய விலங்கு நல வாரியம், கல்வி நிலையங்கள் மற்றும் வளாகங்களில் தெருநாய்கள் மேலாண்மை மற்றும் தெருநாய்க் கடி தடுப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நான்கு வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேபோல நாடு முழுவதும் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் என்ன நிலையில் உள்ளன என்பது தொடர்பாகவும் எட்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக ரேபிஸ் தொற்று மரணங்கள் அதிகரித்து வருகின்றன. 2024ஆம் ஆண்டு நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக ரேபிஸ் மரணங்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அடுத்த இடங்களில் கர்நாடகா (42) மற்றும் ஆந்திரா (39) இடம்பெற்றுள்ளன.
தேசிய அளவில் ரேபிஸ் மரணங்கள் (ஆண்டு வாரியாக)
- 2022 – 22
- 2023 – 121
- 2024 – 180 (தமிழ்நாட்டில் மட்டும் – 43)
பட மூலாதாரம், Getty Images
தீர்ப்பை அமல்படுத்த எவ்வளவு காலம் எடுக்கும்?
நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு தெருநாய் பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குச் சாத்தியமான வாய்ப்பு எனக் குறிப்பிடுகிறார் குழந்தைசாமி. “நீதிமன்றம் பல்வேறு கட்டங்களாக இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் விளைவுகளைப் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகிவிடும்” என்றார்.
இந்த வழக்கை நீதிமன்றம் தாமாகவே முன்வந்தது விசாரித்ததையும் அவர் குறிப்பிடுகிறார்.
“இந்தத் தீர்ப்பு எந்த பொதுநல வழக்கிலோ அல்லது எந்த மேல்முறையீட்டு வழக்கிலோ வழங்கப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசால் தெருநாய் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் போனதால்தான் நீதிமன்றம் தலையிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
நீதிமன்றத்தின் தீர்ப்பை தனித்துப் பார்க்காமல் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் குழந்தைசாமி குறிப்பிடுகிறார்.
மேலும் அவர், “நீதிமன்றம் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளது. அதனால் முதலாவதாக பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் சுற்றித் திரியும் நாய்களை அகற்றுமாறு கூறியுள்ளது.
இது ஒவ்வொரு கட்டமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். காப்பகங்களை எளிதில் உருவாக்கிவிடலாம். அதன் பின்னர் நாய்களை அப்புறப்படுத்தி இந்த வளாகங்களைச் சுற்றி வேலி அமைக்கிறபோது நாய்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிடும்” என்றார்.
‘கட்டமைப்பு, மனித வளம் இல்லை’
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாகச் செயல்படுத்தும் சூழ்நிலை இல்லை என்கிறார் தமிழ்நாடு விலங்குநல வாரியத்தின் உறுப்பினரான ஷ்ருதி.
“நம்மிடம் போதிய கால அவகாசம் இல்லை. இந்தத் தீர்ப்பை அமல்படுத்த குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகளாவது ஆகும். அதற்கான கட்டமைப்புகளோ, மனித வளமோ நம்மிடம் இப்போது இல்லை. பல உள்ளாட்சி அமைப்புகளில் நாய்களை அடைத்து வைக்க காப்பகங்கள் இல்லை” என்கிறார் அவர்.
ஆனால் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு (ஏபிசி) விதிகளை மாற்றாமல் நாய்களை அப்புறப்படுத்த முடியுமா என சில வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அதுதான் செயல்பாட்டில் இருக்கும் என்கிறார் குழந்தைசாமி. “நீதிமன்றமே நேரடியாக உத்தரவிட்ட பிறகு ஏபிசி விதிகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. மத்திய அரசு வேண்டுமானால் தீர்ப்புக்கு ஏற்றவாறு விதிகளை மாற்றி அமைக்கல்லாம்” என்றார்.
நாய்களை அப்புறப்படுத்திய பிறகு அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு முழுக்க அரசினுடையதாகிவிடும் என்று குறிப்பிடும் அவர் தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா குழுக்களின் உதவியுடன் அவற்றை மேற்கொள்ளலாம் என்றார்.
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு முழுவதும் புதிதாக 78 விலங்கு காப்பகங்கள் மற்றும் 138 ஏபிசி மையங்கள் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“வளாகங்களில் உள்ள நாய்களை அப்புறப்படுத்தினால் அந்த இடத்தில் புதிய தெருநாய்கள் வந்துவிடும். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கு எல்லாம் வேலிகள் அமைத்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும். நாய்களை ஒரே நேரத்தில் பிடிப்பதற்கான மனித வளமும் நம்மிடம் இல்லை” என்கிறார் ஷ்ருதி.
“நாய்களைப் பிடிப்பதை விடவும் அவற்றை அடைத்து வைப்பதுதான் பெரிய சிக்கலாக உள்ளது என்று குறிப்பிடும் அவர், “உச்ச நீதிமன்றம் முன்னர் ரேபிஸ் பாதிப்பு உள்ள நாய்களை அடைத்து வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. தற்போது அனைத்து நாய்களையும் அடைக்குமாறு கூறியுள்ளது.
இதற்கு மேலும் அதிகப்படியான காப்பகங்களை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்கான நிதி ஆதாரமும் தற்போது இல்லை. குறுகிய காலத்தில் இதைச் செயல்படுத்துவது சாத்தியமற்றது. நீதிமன்றத்திடம் கூடுதல் அவகாசம் கேட்பதற்கான முடிவில் இருக்கிறோம்” என்றார்.
நாய்கள் காப்பகங்களில் என்ன உள்ளன?
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய்ந்து அரசாங்க அளவில் முடிவெடுக்கப்படும் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரி ஒருவர்.
நாய்களுக்காக கட்டப்படும் காப்பகங்கள் பற்றி விவரித்த அவர், “சென்னையில் தற்போது நாய்களுக்கான இரண்டு காப்பகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றிலும் 250 நாய்கள் என மொத்தம் 500 நாய்களை அடைத்து வைக்கலாம். இங்கு ரேபிஸ் பாதிப்பு இருக்கக்கூடிய நாய்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்கள், ஆக்ரோஷமான நாய்களுக்கு என தனித்தனி இடங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனியாகக் கூண்டு அமைக்கப்படும். இது மட்டுமின்றி எந்தப் பாதிப்பும் இல்லாத நாய்களுக்கென தனியாக ஓர் இடமும் அமைக்கப்படும்” என்றார்.
இங்கு உணவளிப்பதில் இருந்து சிகிச்சை அளிப்பது வரை நாய்கள் பராமரிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை (ஏபிசி) செய்யும் மையங்களில் அவற்றை அடைத்து வைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சென்னையில் தற்போது 5 ஏபிசி மையங்கள் உள்ளன. இவற்றில் நாய்களுக்கு தடுப்பூசி, அறுவை சிகிச்சை வழங்க முடியும். நாய்களை இங்கே அடைத்து வைக்க முடியாது. இங்கு மொத்தமாக 750 நாய்களுக்கு சிகிச்சை வழங்க முடியும். இவை போக மேலும் சில ஏபிசி மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
வழக்கின் பின்னணி என்ன?
டெல்லியில் உள்ள தெருநாய் பிரச்னை தொடர்பாக நடத்தப்பட்ட இந்த வழக்கு பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல மாநிலங்கள் தாக்கல் செய்யாத நிலையில் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
“மாநகராட்சிகளும் மாநில அரசுகளும் தீர்த்திருக்க வேண்டிய பிரச்னையை முடிக்க நீதிமன்றம் முயல்கிறது. ஆனால் தலைமைச் செயலாளர்கள் தீர்ப்பை அமல்படுத்தவில்லை, அதற்கு மரியாதையும் கொடுக்கவில்லை” என நீதிபதிகள் தெரிவித்ததாக லைவ் லா இணையதளம் கூறுகிறது.
மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளையும் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு