பட மூலாதாரம், Nasir Kachroo/NurPhoto via Getty Images
படக்குறிப்பு, அரசு நிறுவனங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் இருந்து நாய்களை அகற்றி அவற்றுக்குக் கருத்தடை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாநில அரசுகளும் நெடுஞ்சாலைகள், சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் இருந்து தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளை அகற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வ உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை.
நீதிமன்றம் தனது வாய்மொழி உத்தரவில், ‘இது கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும், இல்லையெனில் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க நேரிடும்’ என்றும் கூறியுள்ளது.
மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பொது விளையாட்டு வளாகங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை அடங்கிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை அடையாளம் காண வேண்டும் என்றும், தெரு நாய்கள் உள்ளே நுழையாதவாறு அவற்றைச் சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நீதிமன்றம் இந்த உத்தரவில் அறிவுறுத்தியது.
அதிகாரிகள் தற்போதுள்ள தெரு நாய்களை இத்தகைய வளாகங்களில் இருந்து அகற்றி, அவற்றுக்கு கருத்தடை செய்து, பின்னர் நாய்கள் காப்பகங்களுக்கு அனுப்ப வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
சில வழக்கறிஞர்கள் இந்த உத்தரவு குறித்துக் கவலை தெரிவித்து, அதை மாற்றி அமைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், 3 நீதிபதிகள் அமர்வு இந்தக் கோரிக்கையை நிராகரித்தது.
பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?
வெள்ளிக்கிழமை, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பை வழங்கியது.
‘லைவ் லா’ (Live Law) ஊடகத்தில் இதுகுறித்து வெளியான செய்தியின்படி, தெரு நாய்கள் நுழைவதைத் தடுக்க ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும், மருத்துவமனைக்கும், விளையாட்டு வளாகத்திற்கும், பேருந்து நிலையங்களுக்கும், பணிமனைகளுக்கும், ரயில் நிலையங்களுக்கும் நன்கு வேலி அமைக்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதுபோன்ற இடங்களில் இருந்து தெரு நாய்களை அகற்றி, தடுப்பூசி, கருத்தடை செய்த பின்னர், விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு விதிகளின்படி (Animal Birth Control Rules) நாய்களுக்கான காப்பகங்களில் வைக்க வேண்டியது உள்ளூர் நிர்வாகத்தின் பொறுப்பு என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘லைவ் லா’ செய்தியின்படி, இந்த இடங்களில் இருந்து அகற்றப்பட்ட நாய்களை மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
அவ்வாறு செய்தால், இந்த இடங்களை தெரு நாய்கள் இல்லாத பகுதிகளாக மாற்றும் நோக்கம் நிறைவேறாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், நாய்கள் அங்கே குடியேறாமல் இருக்க இந்த இடங்களை உள்ளாட்சி அமைப்புகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சாலையோரங்களில் திரியும் கால்நடைகளை அகற்றவும் நீதிமன்றம் உத்தரவுகளை வழங்கியது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்குப் பிறகு டெல்லியில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
உச்சநீதிமன்றம் முன்பு கூறியது என்ன?
இந்த ஆண்டு ஜூலை மாதம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு செய்தி அறிக்கையின் அடிப்படையில் தாமாக முன்வந்து தெரு நாய்கள் பிரச்னையைக் கையில் எடுத்தது.
ஆகஸ்ட் 11 அன்று இந்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, டெல்லி-என்சிஆர் பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்குமாறு உத்தரவிட்டது.
நாய்க்கடி சம்பவங்கள் மற்றும் ரேபிஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்ததுடன், இந்தப் பணிகளை எட்டு வாரங்களில் முடிக்க அதிகாரிகளுக்குக் காலக்கெடுவும் விதித்தது.
இருப்பினும், விலங்குநல ஆர்வலர்கள் இந்த உத்தரவை எதிர்த்தனர், மேலும் சில நாய் ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்திலேயே அதற்கு எதிராக மனுத் தாக்கல் செய்தனர்.
விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா இந்தியா (PETA India), நாய்களை அகற்றுவது அறிவியல் ரீதியான வழி அல்ல, அதோடு இந்தப் பிரச்னைக்கு இது நிரந்தரத் தீர்வும் ஆகாது என்று கூறியது. “டெல்லி அரசு முன்னரே ஒரு திறமையான கருத்தடைத் திட்டத்தை அமல்படுத்தியிருந்தால், இன்று தெருக்களில் எந்த நாய்களும் இருந்திருக்காது,” என்றும் அந்த அமைப்பு கூறியது.
தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்கும் உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது உத்தரவு பிறப்பித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பிடிக்கப்பட்ட நாய்கள் மீண்டும் அதே பகுதிகளில் விடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இருப்பினும், ரேபிஸ் உள்ள அல்லது ரேபிஸ் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நாய்கள் விடுவிக்கப்படாது என்றும் இந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த விவகாரத்தில் டெல்லியின் ஜந்தர் மந்தரில் பல நாய் ஆர்வலர்களும் விலங்கு உரிமை ஆர்வலர்களும் கூடினர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சகத்தின்படி, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான தெரு நாய்கள் உத்தர பிரதேசத்தில் உள்ளன.
இந்திய மாநிலங்களில் நிலைமை என்ன?
பெரும்பாலான மாநிலங்களில், தெரு நாய்கள் மற்றும் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு விதிகள் (ஏபிசி) 2023க்கு இணங்கவே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான தெரு நாய்கள் உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ளன. அதே நேரம் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, லட்சத்தீவுகள் மற்றும் மணிப்பூர் ஆகிய இடங்களில் தெருக்களில் தெரு நாய்களே இல்லை.
இருப்பினும், 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019இல் உத்தர பிரதேசத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை 20.59 லட்சமாகக் குறைந்துள்ளது என்று அமைச்சகம் கூறியது.
ஆனால் கேரளாவில், 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019இல் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு சுமார் 2.89 லட்சம் நாய்கள் உள்ளன. தெரு நாய்களின் தாக்குதல்களைச் சமாளிக்க, மாநிலம் ஏபிசி விதிகளை அமல்படுத்தச் சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை உருவாக்கியுள்ளது.
மறுபுறம், நாட்டின் பொருளாதாரத் தலைநகரான மும்பை ஒரு சமச்சீர் அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது. மும்பையில் தெரு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உணவளிப்பது சட்டப்பூர்வமானது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட மற்றும் சுத்தமான இடங்களில் மட்டுமே அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
சுற்றுலாவுக்குப் பிரபலமான கோவா மாநிலத்திலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கோவா, நாட்டின் முதல் ரேபிஸ் கட்டுப்படுத்தப்பட்ட மாநிலமாகும். 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு மனிதர்களுக்கு ரேபிஸ் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை.
இருப்பினும், 2023இல் ஒரு சம்பவம் பதிவானது, அதில் ஒருவர் உயிரிழந்தார்.