பட மூலாதாரம், Getty Images
தெருநாய்கள் தொடர்பான வழக்கில் நவம்பர் 7ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது.
மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
அகற்றப்பட்ட பிறகு, அவற்றுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, காப்பகங்களில் வைக்க வேண்டும்.
மேலும், நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகள், கால்நடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில், தெருநாய்கள் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பல முறை தலையிட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சில உத்தரவுகளில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இப்போது, இந்த புதிய உத்தரவுகளின் அடிப்படையில், மாநில அரசுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
வழக்கின் பின்னணி
பட மூலாதாரம், Getty Images
தெருநாய்கள் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும் பல உயர் நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருந்தன.
இந்த நிலையில், ஜூலை 28 அன்று உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியை தானாக முன்வந்து கவனத்தில் எடுத்தது.
அந்த செய்தியில், டெல்லியைச் சேர்ந்த 6 வயது சிறுமி தெருநாய் கடியால் உயிரிழந்தது குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதிமன்றம் இதை “கவலையளிக்கும் மற்றும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம்” எனக் கூறியதுடன், டெல்லியில் தினமும் ஆயிரக்கணக்கான நாய் கடி சம்பவங்கள் நடக்கின்றன என்றும் குறிப்பிட்டது.
அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 11 அன்று நடந்த விசாரணையில், டெல்லி மற்றும் என்சிஆர் (நொய்டா மற்றும் காஜியாபாத் உட்பட) பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடித்து காப்பகங்களில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அங்கேயே அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படும் என்றும், மீண்டும் தெருக்களில் விடப்படாது என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்த உத்தரவை எந்தவொரு நபரோ அல்லது அமைப்போ தடுத்தால், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேபோல், காப்பகத்தில் வைக்கப்படும் நாய்களுக்கு முறையான பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் எதிர்வினை
இந்த தீர்ப்பு, பரவலான எதிர்ப்பை சந்தித்தது.
நகரத்தில் போதுமான அளவு நாய்களுக்கான காப்பகங்கள் இல்லை என்பது தான் நீதிமன்றத் தீர்ப்பின் மீதான ஒரு முக்கிய விமர்சனமாக இருந்தது.
இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அது நாடு முழுவதும் தெருநாய்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
ஆகஸ்ட் 22 அன்று, அந்த அமர்வு தனது முந்தைய உத்தரவை திருத்தி, கருத்தடை மற்றும் தடுப்பூசி போட்ட பிறகு, நாய்கள் அவை பிடிக்கப்பட்ட பகுதியிலேயே மீண்டும் விடப்படும் என்றும், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் மட்டுமே தங்குமிடங்களில் வைக்கப்படும் என்றும் கூறியது.
கூடுதலாக, ஒவ்வொரு பகுதியிலும் நாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. நாயை தத்தெடுக்க விரும்பும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் நகராட்சி அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம்.
டெல்லிக்கு மட்டும் அல்லாமல், நீதிமன்றம் இந்த உத்தரவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டித்து, அந்தந்த மாநிலங்களில் இதுபோன்ற விலங்குகள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் என்பதை விளக்குமாறு கேட்டது.
கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள உச்ச நீதிமன்றம்
நவம்பர் 7 ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, பள்ளிகள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது நிர்வாக அக்கறையின்மை மற்றும் கண்காணிப்பு தோல்வியை பிரதிபலிக்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
இது பொது பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் இந்தியாவின் சர்வதேச பிம்பத்தை எதிர்மறையாக பாதிக்கிறது என்றும், தெருநாய் கடி தொடர்பான சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
அரசாங்க தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 3 மில்லியன் சம்பவங்களும் 2024 ஆம் ஆண்டில் சுமார் 3.7 மில்லியன் சம்பவங்களும் நடந்துள்ளன எனத் தெரிய வருகிறது.
இதை நிவர்த்தி செய்ய, நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இரண்டு வாரங்களுக்குள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் பட்டியலைத் தொகுக்க வேண்டும்.
தெருநாய்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க இந்த இடங்களில் போதுமான எல்லைச் சுவர்கள், வேலிகள் மற்றும் வாயில்கள் நிறுவப்பட வேண்டும். இது முடிந்தவரை விரைவாக, எட்டு வாரங்களுக்குள் செய்யப்பட வேண்டும்.
இந்த மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அந்த இடத்தை கவனித்துக்கொள்ள ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
உள்ளூர் நகராட்சி அல்லது பஞ்சாயத்து இந்த இடங்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.
நகராட்சி அதிகாரிகள் இந்த வளாகங்களில் உள்ள தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் வைத்து, கருத்தடை செய்து தடுப்பூசி போட்டு, மீண்டும் அதே பகுதிகளுக்குள் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த உத்தரவுகளை அவர்கள் எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பது குறித்து எட்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
கால்நடைகள் மற்றும் விலங்குகள் தொடர்பான உத்தரவு
பட மூலாதாரம், Getty Images
கால்நடைகள் மற்றும் தெரு விலங்குகள் குறித்த பிரச்னை தொடர்பாகவும் நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்தது.
சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி நடக்கும் விபத்துகளுக்கு கால்நடைகளும், தெரு விலங்குகளும் ஒரு காரணமாக இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
எனவே, நகராட்சி, மாநில மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் இருந்து கால்நடைகள் மற்றும் தெரு விலங்குகளை அகற்ற வேண்டும்.
அவற்றைப் பிடித்து, பசுக் கொட்டகைகள் அல்லது தங்குமிடங்களில் வைக்க வேண்டும், அங்கு அவற்றை முறையாகப் பராமரிக்க முடியும்.
மீண்டும் எந்த விலங்கும் சாலைகளில் வராமல் இருக்க, 24 மணி நேரமும் சாலைகளில் கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர்களும் தங்கள் மட்டத்தில் பொறுப்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், உத்தரவுகளைப் பின்பற்றுவதில் ஏதேனும் அலட்சியம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரி தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கிலும், குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அவர்கள் எவ்வாறு பின்பற்றுகிறார்கள் என்பது குறித்து எட்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அடுத்து என்ன?
பட மூலாதாரம், Getty Images
இந்த நீதிமன்றத் தீர்ப்புகளைத் தொடர்ந்து, அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற பொது இடங்களிலிருந்து தெருநாய்களை அகற்றி, காப்பகங்களில் வைக்க வேண்டும்.
நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் இருந்து கால்நடைகள் மற்றும் தெருநாய்களை அகற்றவும் அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
இந்த தீர்ப்பு எந்த அளவிற்கு செயல்படுத்தப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்த தெரு விலங்குகள் மற்றும் நாய்கள் எங்கே வைக்கப்படும் என்பதுதான்.
ஆனால், விலங்குகளை அகற்றுவதற்கு நீதிமன்றம் எந்த கால அவகாசத்தையும் வழங்கவில்லை, மாநிலங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்பது குறித்து எட்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை பல விலங்கு நல அமைப்புகள் விமர்சித்துள்ளன.
விலங்கு உரிமைகள் அமைப்பான பீட்டா இந்தியா ஒரு செய்திக்குறிப்பில், “இந்த உத்தரவு சூழலின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் வெளியிடப்பட்டுள்ளது” என்று கூறியது.
நாடு முழுவதும் 50 மில்லியனுக்கும் அதிகமான தெருநாய்களும் 5 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகளும் இருப்பதாகவும், அவற்றைப் பராமரிக்க போதுமான தங்குமிடங்கள் இல்லை என்றும் பீட்டா தெரிவித்துள்ளது.
முன்னாள் பாஜக எம்பி மேனகா காந்தி, நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு, முந்தைய தீர்ப்பில் ஏற்பட்ட பிரச்னைகளை மீண்டும் சந்திக்க நேரிடும் என்றும், அந்த முந்தைய தீர்ப்பை நீதிமன்றமே பின்னர் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் தெரிவித்தார்.
மேலும் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் அவர் கூறினார்.
“அகற்றப்பட்டால், இந்த விலங்குகள் எங்கே போகும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாய்களை அவற்றின் வாழ்விடத்திலிருந்து அகற்றி சாலைக்கு கொண்டு வருவது பொதுமக்களுக்கு ஆபத்தை மேலும் அதிகரிக்கும் என்பதும் அவரது கூற்றாக உள்ளது.
நீடிக்கும் குழப்பம்
பட மூலாதாரம், Getty Images
24 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளன, அதில் எத்தனை காப்பகங்கள் உள்ளன, எத்தனை தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.
டெல்லியில் 20 விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன.
இந்த மையங்கள் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதங்களில், ஒவ்வொரு மையமும் தினமும் 15 தெருநாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி போடுகின்றன.
மகாராஷ்டிராவில் இதுபோன்ற விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன, மாநிலம் முழுவதும் 236 மையங்கள் உள்ளன.
இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் 17 நகரங்களில் இதுபோன்ற மையங்கள் உள்ளன, பிகாரில் எந்த மையங்களும் இல்லை, ஆனால் நாய்களுக்கான 16 இடங்கள் உள்ளன.
இந்த வழக்கில் தொடர்புடைய விலங்கு உரிமை ஆர்வலர் கௌரி மௌலேகி தனது எக்ஸ் கணக்கில், “(இந்த தீர்ப்பு) விலங்கு பிரியர்களுக்கும் விலங்குகளை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் இடையிலான மோதலை அதிகரிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் தெருநாய்களை வளர்க்கின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதம், பல்கலைக்கழக மானியக் குழு, உயர்கல்வி நிறுவனங்கள் விலங்கு பராமரிப்பு சங்கங்களை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிறுவனங்கள் விலங்கு தீவனத்திற்கான இடங்களையும் உருவாக்க வேண்டும்.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அத்தகைய நிறுவனங்களிலிருந்து நாய்கள் அகற்றப்படுமா அல்லது தங்க அனுமதிக்கப்படுமா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.
நீதிமன்றம் விலங்குகளை அகற்ற உத்தரவிட்டது மட்டுமல்லாமல், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றைச் சுற்றி சுவர்கள் அல்லது வேலிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
விலங்குகளை அகற்றுவதோடு, இது எட்டு வாரங்களுக்குள் மாநிலங்கள் முடிக்க வேண்டிய ஒரு குறிப்பிடத்தக்க பணியாக இருக்கும்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 13 அன்று நடைபெறும், அப்போது இந்த உத்தரவுகள் எந்த அளவிற்குப் பின்பற்றப்பட்டுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு