டெல்லியில் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து தெரு நாய்கள் தொடர்பான பிரச்னையை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி நடத்திய கணக்கெடுப்பின்படி 1.8 லட்சம் தெருநாய்கள் உள்ளன. இவற்றில் 27% நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் பல நகரங்களில் நாய்களின் எண்ணிக்கை தொடர்பான தெளிவாக புள்ளிவிவரங்கள் இல்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஒருபக்கம் நாய்களுக்கு தடுப்பூசி வழங்குவது, கருத்தடை செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தெரு நாய்களுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்கிறார் ஓய்வுபெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநரான குழந்தைவேல்.
நாய்கள் வரலாற்று ரீதியாக மனித வாழ்க்கையில் நெருங்கிய விலங்கு என்றும் தெரிவித்தார்.
“வேட்டைச் சமூகமாக இருந்த காலத்தில் இருந்தே நாய்கள் மனிதர்களுக்கு உதவியாக இருந்து வருகின்றன. நாகரிக மாற்றம் மற்றும் நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் பெருநகரங்களில் நாய்கள் தனித்து வளர வேண்டிய நிலை உருவாகிவிட்டது” என்கிறார் குழந்தைசாமி.
அதேபோல் அனைத்து தெரு நாய்களும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதில்லை என்கிறார் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி. தெருநாய்களை மனிதர்கள் எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும் விவரித்தார்.
நாய்களின் நடத்தை பற்றி இருவரும் அளித்த விளக்கங்களை இங்கு எளிமையாக 8 கேள்வி-பதில்களாக தொகுத்து தரப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Kulandhaisamy
படக்குறிப்பு, பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மற்றும் மருத்துவர் குழந்தைசாமி
தெரு நாய்கள் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது ஏன்?
நாய்களுக்கு என சில தேவைகள் உள்ளன. முறையான உணவு, சுதந்திரமான நடமாட்டம் மற்றும் உயிரியல் தேவைகள் இதில் முதன்மையானவை. வளர்ப்பு நாய்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு கிடைத்துவிடும். ஆனால் அதற்கு நடமாடுவதற்கான சுதந்திரமோ அல்லது உயிரியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழிகளோ இருக்காது.
அதனால் தான் சில நேரங்களில் வளர்ப்பு நாய்களும் ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன. அதேசமயம் தெரு நாய்களுக்கு நடமாட்டம் மற்றும் உயிரியல் தேவைகள் பூர்த்தி அடைந்தாலும் ஊட்டத்துக்கு பற்றாக்குறையாகவே இருக்கும். தெரு நாய்கள் பசியால் தான் ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன.
தெரு நாய்கள் மனிதர்களை எந்த அடிப்படையில் குறிவைக்கிறது?
தெருநாய்கள் முதலில் பெரியவர்களைக் குறிவைக்காது. குழந்தைகள்தான் அவற்றுக்கு எளிமையான இலக்கு. தெருநாய் ஒரு வயது வந்தவரை துரத்தும்போது அவர்கள் சற்று குரல் எழுப்பினாலோ அல்லது தாக்குவது போன்ற செயல்கள் செய்தாலோ உடனடியாக பின்வாங்கும். குழந்தைகளால் உடனடியாக திருப்பித் தாக்கவோ எதிர்வினையாற்றவோ முடியாது என்பதால் தெருநாய்கள் அவர்களை முதலில் குறிவைக்கின்றன.
வளர்ப்பு நாய்கள் மீது அதன் உரிமையாளர்கள் அக்கறை செலுத்துவார்கள். ஆனால் தெரு நாய்களுக்கு அது கிடைப்பதில்லை என்பதால் யாரேனும் பரிவுடன் அதனை அணுகினால் தெருநாய்கள் பெரும்பாலும் தாக்குவதில்லை. பசி மட்டுமல்ல, தெருநாய்கள் சில நேரங்கள் ஏக்கத்தினாலும் வழிப்போக்கர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன. அதேபோல் பருவமழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும் தெருநாய்களுக்கு உணவு கிடைப்பது கடினம். அவை அச்சத்தில் இருக்கும். அப்போது மனிதர்களைத் தாக்குவது அல்லது துரத்துவது என்பது அதிகமாக இருக்கும்.
தெருநாய்கள் குழுவாகச் சுற்றும் பழக்கம் ஏன் உண்டாகிறது?
தெருநாய்களிடம் குழு மனப்பான்மை என்பது மிகவும் பொதுவானது. உணவு தேடுவது, உலவுவது என அனைத்தையும் ஒன்றாகவே மேற்கொள்ளும். எனவே தெரு நாய் தனியாக இருப்பதைவிட குழுவாக இருக்கும்போது கூடுதல் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும்.
பட மூலாதாரம், SRIDEVI
படக்குறிப்பு, கோவையைச் சேர்ந்த நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி
அனைத்து தெருநாய்களும் ஆபத்தானவையா?
அப்படி பொதுவாகக் கூறிவிட முடியாது. அனைத்து தெருநாய்களும் ஆக்ரோஷமாக நடந்து கொள்பவை அல்ல. மனிதர்கள் வாழ்க்கை முறை மாறியுள்ளது. தற்போது நாய்கள் மனிதர்களின் தலையீடு இல்லாமலே வாழ்கின்றன.
தெருநாய்கள் தங்களது எல்லைகளைத் தாண்டிச் செல்வதில்லை. உணவு, இடம், ஆதிக்கம் எனப் பல விஷயங்கள் அவற்றின் நடத்தையை தீர்மானிக்கின்றன.
தெரு நாய்கள் தங்கள் எல்லைகளை எப்படி தீர்மானிக்கின்றன?
நாய்கள் அதற்கு உணவு கிடைப்பதைப் பொருத்து தான் அதன் எல்லைகளை தீர்மானிக்கின்றன. ஒரு இடத்தில் தொடர்ச்சியாக, தடையின்றி உணவு கிடைக்கிறது என்றால் அவை அங்கேயே தங்கிக் கொள்ளும். உணவு கிடைப்பது நின்றுவிட்டால் வேறு இடம் நோக்கிச் செல்லும். உணவு வழங்குவதை நிறுத்திவிட்டால் அந்த இடத்தில் நாய்கள் இருக்காது
பட மூலாதாரம், Getty Images
தெருநாய்கள் வாகனங்களைத் துரத்துவது ஏன்?
தெருநாய்களுக்கு நேர்மறையான அனுபவங்கள் இருப்பதில்லை. சிறு வயதில் பெறக்கூடிய மோசமான அனுபவங்கள் அவற்றின் நடத்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாய்கள் வாகனங்களில் அடிபடுவது அல்லது மனிதர்களால் தாக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
உதாரணமாக யாராவது ஒரு நாய் மீது கல்லெறிந்து இருந்தால், அந்த நாய் மனிதர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும். ஒரு நாய் அல்லது குழுவில் இருக்கும் வேறு நாய் மீது வாகனம் மோதியிருந்தால் அந்த நாய்கள் வாகனங்களைக் கண்டால் துரத்தும். அவற்றின் அனுபவங்களைப் பொருத்து இது மாறும். எனவே ஒட்டுமொத்தமாக தெருநாய்களின் நடத்தை இப்படித்தான் இருக்கும் எனக் கூறி விட முடியாது.
தெரு நாய்களின் உடல் மொழியை புரிந்து கொள்ள முடியுமா?
பட மூலாதாரம், Getty Images
விலங்குகள் அவற்றின் உடல்மொழியை வைத்து தான் தொடர்பு கொள்ளும், ஒரு செல்லப் பிராணியை அணுகுவது போல தெரு நாய்களை அணுகக்கூடாது.
தங்களின் இடத்தில் ஒருவர் நுழைய முயற்சிக்கிறார் என உணர்ந்தால் தான் அவை துரத்தவோ, தாக்கவோ முயற்சிக்கும். நாய்களின் உடல்மொழியைப் புரிந்து கொண்டு நாம் நடந்து கொள்ள வேண்டும். ஒரு நாய் கூட்டம் இருந்தால் ஆரோக்கியமான இடைவெளியை கடைபிடிப்பது நல்லது.
தெருநாய்கள் துரத்தினால் என்ன செய்ய வேண்டும்?
இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது நாய் துரத்தினால் சற்று வேகமாகச் செல்ல வேண்டும். அப்போது நாய் நின்றுவிடும். நடந்து செல்லும் போது கைவசம் குச்சியோ அல்லது ஏதேனும் ஒரு பொருளோ இருப்பது உதவியாக இருக்கும். பெரும்பாலான நாய்கள் தாக்காது, அவை அச்சத்தை உண்டாக்கவே பார்க்கின்றன.
நாம் சத்தம் எழுப்பினாலோ அல்லது ஏதாவது பொருளை எதிர்த்து காண்பித்து ஆதிக்கத்தை நிறுவினாலோ நாய்கள் பின்வாங்கி விடும். நாய் குரைப்பது தான் அவை இயல்பாக இல்லை என்பதற்கான முதல் அறிகுறி. நாம் இருக்கின்ற இடத்தில் சூழ்நிலை புரிந்து செயல்பட வேண்டும். குழந்தைகளை தனியாக விடக்கூடாது. பெரும்பாலான நாய்கள் தனியாக இருக்கும் குழந்தைகளைத் தான் தாக்குகின்றன.