• Mon. Oct 27th, 2025

24×7 Live News

Apdin News

தெற்கில் காணாமல்போனோரை நினைவுகூரும் நிகழ்வு நாளை ; ஜனாதிபதி, நீதியமைச்சரிடம் மகஜர்களும் கையளிக்கப்படும்

Byadmin

Oct 27, 2025


1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு நாளை திங்கட்கிழமை (27)  சீதுவ – ரத்தொலுகமவில் நடைபெறவிருப்பதுடன் அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோரிடம் மகஜர்களும் கையளிக்கப்படவுள்ளன.

1989 ஆம் ஆண்டு ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) எழுச்சியின்போது அதன் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இச்சம்பவங்களுக்கு மத்தியில் 1989 ஆம் ஆண்டு சுதந்திர வர்த்தக வலய ஊழியரும், தொழிற்சங்கவாதியுமான எச்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது சட்டத்தரணி ஆகிய இருவர் கொல்லப்பட்டதன் பின்னர், அவர்களது உடல்கள் சீதுவ – ரத்தொலுகம பகுதியில் கண்டறியப்பட்டன.

அதனையடுத்து அவர்களை நினைவுகூரும் வகையில் ரத்தொலுகம சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபி, பின்னாளில் தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரை நினைவுகூருவதற்கான நினைவுத்தூபியாக மாற்றமடைந்தது.

அதன்படி தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் பங்கேற்புடன் வருடாந்தம் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி இத்தூபிக்கு அண்மையில் நினைவுகூரல் நிகழ்வு நடைபெறும்.

அதற்கமைய நாளைய தினம் (27) காலை 10.00 – 11.15 மணி வரை ரத்தொலுகமவில் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நினைவுத்தூபிக்கு முன்பாக நினைவுகூரல் நிகழ்வொன்று ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை இந்நினைவுகூரல் நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்த போதிலும், அக்கடிதத்துக்கு எவ்வித பதிலும் கிடைக்காததன் காரணமாக, தமது கோரிக்கைகளை உள்ளடக்கி நாளைய தினம் ஜனாதிபதியிடம் மகஜரொன்றைக் கையளிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவ்வொன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்படி நாளைய தினம் நண்பகல் 12.00 – 1.30 மணி வரை நீதியமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்புப்போராட்டமொன்றை நடாத்தியதன் பின்னர் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடமும், அதனைத்தொடர்ந்து பி.ப 2.00 – 3.00 மணி வரை ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப்போராட்டத்தை மேற்கொண்டதன் பின்னர் ஜனாதிபதியிடமும் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

By admin