• Tue. Feb 25th, 2025

24×7 Live News

Apdin News

தேசிய பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துங்கள்!! – அரசிடம் சஜித் கோரிக்கை

Byadmin

Feb 25, 2025


“கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. தேசிய பாதுகாப்புக்கு இது பெரும் பிரச்சினையாக அமைந்திருந்தாலும், அது ஒரு பிரச்சினையல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே இடம்பெற்று வரும் இந்தக் கொலைக் கலாசாரம் தேசிய பாதுகாப்புக்குப் பிரச்சினையாகக் காணப்படுகின்றது. எனவே, தேசிய பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துங்கள்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“அண்மைய தினத்தில் நீதிமன்றத்தினுள் நடந்த மிலேச்சத்தனமான கொலையுடன் தொடர்புடைய பெண்ணின் வண்ணப் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் புலனாய்வுத் தரப்புக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பிலான புலனாய்வு அறிக்கைகளை ஊடகங்கள் செய்தியாக  வெளியிட்டன.

குறித்த கொலை தொடர்பிலான தகவல்கள் புலனாய்வுப் பிரிவினருக்குக்  கிடைக்கப்பெற்றிருந்தன. இவ்வாறு தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டமை குறித்து தெளிவான விளக்கம் இங்கு வழங்கப்பட வேண்டும்.

கொலையாளிகளின் இந்தச் செயல்கள் பெரும் பிரச்சினையாகக்  காணப்படுகின்றன. புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைக்கப் பெற்ற பிறகு அது குறித்து நடவடிக்கைகளை எடுக்க இதைவிடவும் முறையான திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும்.” – என்றார்.

By admin