0
தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் டீல் பேசி ஆட்சி அமைப்போர் தமிழினத் துரோகிகள் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“தமிழர் பிரதேசங்களின் சில இடங்களில் தேசிய மக்கள் சக்தியினரும் கணிசமான ஆசனங்களைப் பெற்றுள்ளார்கள். அவர்களுடன் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டிணைந்து ஆட்சி அமைக்கக்கூடாது.
தேசிய மக்கள் சக்தியினரைப் புறக்கணிக்க வேண்டும் என நாம் உட்பட ஏனைய தமிழ்த் தேசியக் கட்சியினரும் மக்களிடம் கோரி வந்தன. அதனை மக்கள் ஏற்று பல இடங்களில் தேசிய மக்கள் சக்தியைப் புறக்கணித்துள்ளார்கள்.
தற்போது சபைகளில் ஆட்சி அமைக்கும்போது அவர்களாக ஆதரவு வழங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆதரவு தருகின்றோம் என்பவரை ஆதரவு தராதே எனக் கூற முடியாது.
ஆனால் ஆதரவு தாருங்கள், துணை தவிசாளர் மற்றும் துணை மேயர் பதவிகள், இந்தச் சபைக்கு ஆதரவு தாருங்கள், அந்தச் சபைக்கு நாம் ஆதரவு தருகின்றோம் என்பது போலான டீல்கள் செய்து, தேசிய மக்கள் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆட்சி அமைந்தால் அது தமிழ் மக்களுக்குத் செய்யும் துரோகம்.” – என்றார்.