சென்னை: சென்னை கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனை போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் தேசிய முதியோர் நல மருத்துவமனை கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. மருத்துவமனையில் இதுவரை 2.69 லட்சம் பேர் புறநோயாளிகளாகவும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர். 210 அறுவை சிகிச்சைள் நடந்துள்ளன.
முதியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி பெற்று கொள்வதற்காக மருத்துவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மருத்துவமனையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் குஜராத், தெலங்கானா, மேற்கு வங்கம் உள்பட 17 மாநிலங்கள் மற்றும் டெல்லி, புதுச்சேரி, கோவா, லடாக் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 41 மருத்துவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று சென்றுள்ளனர். சிறப்பாக செயல்பட்டு, சுகாதாரத்துறைக்கு மகுடம் சூடுவது போல இந்த முதியோர் நல மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையில், நோயாளிகளும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மொத்தம் 50 மருத்துவர் பணியிடங்கள் உள்ள நிலையில் 33 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். அதேபோல், 75 செவிலியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 56 பேர் உள்ளனர். அதிலும், 26 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மற்ற அரசு மருத்துவமனைகளில் இருந்து இங்கு பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
ஏற்கெனவே அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் தரப்படவில்லை. இந்நிலையில் இங்குள்ள மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியப்படிகள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பண பலன்கள் தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஊதியம் எல்லோருக்கும் 30-ம் தேதி கிடைத்துள்ள நிலையில், இந்த மருத்துவமனையில் மட்டும் இதுவரை தரப்படவில்லை.
மற்ற மாநிலங்களில் இருந்து மருத்துவர்கள் பயிற்சிக்காக தமிழகம் வருவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் பெருமையாக தெரிவிக்கிறார். ஆனால், இங்கு அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைவான ஊதியம் தரப்படுகிறது.
எனவே, முன்மாதிரியாக உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தமிழக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும். செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை எம்ஆர்பி மூலம் நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.