பட மூலாதாரம், Giuseppe CACACE / AFP via Getty Images
படக்குறிப்பு, நவம்பர் 20 அன்று துபையில் நடைபெற்ற விமான கண்காட்சிக்கு முன்பு எடுக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம்
வெள்ளிக்கிழமை (2025 நவம்பர் 20) துபையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின்போது, இந்திய போர் விமானம் தேஜஸ் விபத்துக்குள்ளான செய்தியே துபை ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த விபத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில், அதை இயக்கிய விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால் உயிரிழந்தார்.
துபையில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான கல்ஃப் நியூஸ், தேஜஸ் விபத்து தொடர்பான பல செய்திகளை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தேஜஸ் விமானத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்தியா, அது போலிச் செய்தி என்று கூறியதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய அரசின் பி.ஐ.பி-யின் உண்மைச் சரிபார்ப்பு சமூக ஊடகக் கணக்கில் இருந்து வெளியிடப்பட்டுள்ள பதிவு ஒன்றில், “துபை விமானக் கண்காட்சியில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று பகிரப்படுகிறது. அதில் விமானத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூற்றுகள் முற்றிலும் போலியானவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்குப் பிறகு, துபை விமான நிலைய தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல்-மக்தூம், விமானியின் குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்ததாக துபை செய்தி ஊடகமான அமராத் அல்-யூம் தெரிவித்துள்ளது.
நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?
கல்ஃப் நியூஸ் வெளியிட்ட மற்றொரு செய்தியில், “தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளான நேரத்தில் எங்கள் செய்தியாளர்களில் ஒருவர் அங்கு இருந்தார். விமானம் கீழே விழுந்தவுடன், அந்த இடம் முழுவதும் புகைமூட்டம் பரவியது. அவசரக் குழு உடனடியாக விபத்து நடந்த இடத்தை நோக்கி விரைந்தது” எனத் தெரிவித்துள்ளது.
மேலும் “விமானக் கண்காட்சியைக் காண காலையில் இருந்தே கூட்டம் கூடியிருந்தது. மதியம் 1:30 மணியளவில், இந்தியாவின் சூர்ய கிரண் குழுவினர் இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவுகளைக் கொண்டாடும் விதமாக வானில் சாகசம் நிகழ்த்தினர்.
குறிப்பாக இதய வடிவிலான சாகசத்திற்குப் பிறகு மக்கள் சத்தமாகக் கைதட்டினர். நூற்றுக்கணக்கான மக்கள் அதைப் பார்த்து ரசித்துக்கொண்டே தங்கள் மொபைல் போன்களில் சாகசங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.”
“சில நிமிடங்களுக்குப் பிறகு, எஃப்-35 விமானத்தின் ஓசை கூட்டத்தின் கவனத்தை ஈர்த்தது. மதியம் 2:10 மணியளவில், மற்றொரு ஜெட் விமானம் தோன்றியது. அது இந்தியாவின் தேஜஸ் என்று செய்தியாளர்கள் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டனர்” என்று கல்ஃப் நியூஸ் எழுதியிருக்கிறது.
சம்பவ இடத்தில் இருந்த கல்ஃப் நியூஸ் செய்தியாளர், “விமானம் தோன்றிய சுமார் மூன்று நிமிடங்கள் கழித்து வேகமாக உயர்ந்தது. ஆனால் மேலே ஏறும்போது நடுவில் அது திடீரெனத் தனது சக்தியை இழந்து கீழே வந்து மோதியது. ஒரு கணம் நான் அப்படியே உறைந்துபோனேன். என்னைச் சுற்றி குழப்பமும் பீதியும் நிலவிய போதும், என் மொபைல் போன் அங்கு நடந்து கொண்டிருந்தவற்றைப் பதிவு செய்து கொண்டிருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
அருகில் நின்றிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், “அடக் கடவுளே… விமானி நலமாக இருப்பார் என நம்புகிறேன்” என்று கூறியதாக கல்ஃப் நியூஸ் செய்தியாளர் கூறினார்.
கல்ஃப் நியூஸ் செய்தியின்படி, “கூட்டத்தில் பீதி எப்படி இருந்தது என்பதை மற்றவர்கள் விவரித்தனர். வெளிநாடுவாழ் இந்தியர் ஷாஜுதீன் ஜப்பார் தனது மனைவி மற்றும் மகளுடன் விமான சாகச நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தத் துயர சம்பவம் சில நொடிகளில் நடந்துவிட்டதாக அவர் கூறினார்.”
“விமானங்களின் சாகசக் காட்சியை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று விபத்து ஏற்பட்டது. மக்கள் அலறத் தொடங்கினார்கள். பின்னர் ஆம்புலன்ஸ் வந்தது. சிறந்த நிகழ்ச்சியாக நடந்து கொண்டிந்தபோது திடீரென இந்தத் துயர விபத்து நடைபெற்றது. விமானியைக் காப்பாற்ற முடியாதது துரதிர்ஷ்டவசமானது. நம் கண் முன்னே ஒருவர் இறப்பதைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது” என்று விபத்தை நேரில் கண்ட ஷாஹத் அல்-நக்பி கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஒற்றை எஞ்சின் கொண்ட தேஜஸ் போர் விமானம் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட் நிறுவனத்தால் முழுக்கவும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
எட்டு ஆண்டுகளாக துபையில் வசித்து வரும் ஹாபிஸ் ஃபைசல் மதனி, “இதுவொரு துயரமான, எதிர்பாராத சம்பவம். நான் பார்த்த முதல் விமானக் கண்காட்சி இதுதான். என் சகோதரர் முகமது உஸ்மானுடன் வான்வழிக் கண்காட்சிப் பகுதிக்குள் அப்போதுதான் நுழைந்தோம். திடீரென்று ஜெட் விமானம் ஒன்று கீழே விழுவதைக் கண்டோம். அது நமது தேஜஸ் என்பதை அறிந்ததும் வருத்தமாக இருந்தது. விமானியைக் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிய வந்தது” என்று கல்ஃப் நியூஸிடம் கூறினார்.
‘பிரிட்டனை சேர்ந்த வில் கில்மோர் என்பவர் விபத்து நடந்தபோது விமானக் கண்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்’ என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு நாளிதழ் தி நேஷனல் நியூஸ் தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
“யாரும் வெளியேறுவதையோ அல்லது அதுபோன்ற எதையும் நான் பார்க்கவில்லை. எல்லாம் மிக வேகமாக நடந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்துவிட்டதாக நினைக்கிறேன்” என்று வில் கில்மோர் கூறினார்
“நான் ஒரு கூடாரத்தின் பின்னால் இருந்தேன், அதனால் விமானம் தரையில் மோதியது சரியாகத் தெரியவில்லை” என்று கில்மோர் கூறினார்.
“புகைமூட்டத்தைத்தான் நாங்கள் பார்த்தோம். விபத்து நடைபெற்றவுடன் அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். உடனடியாக சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின. சூழல் முற்றிலும் மாறியது. மிகவும் உற்சாகமாக இருந்த சூழல், ஒரே நொடியில் சோகமயமாகிவிட்டது.”
பட மூலாதாரம், @SukhuSukhvinder
படக்குறிப்பு, விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால்
நிபுணர்களின் கருத்து என்ன?
கலீஜ் டைம்ஸ், லண்டனை தளமாகக் கொண்ட ஸ்ட்ராடஜிக் ஏரோ ரிசர்ச் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் சஜ் அகமதுவிடம் இந்த விபத்து குறித்துப் பேசியது.
“தரையில் இருந்து மிகக் குறைந்த உயரத்தில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது. விமானி தனது சுழற்சியை (லூப்) முடித்த நேரத்தில் விமானத்துக்கும் தரைக்கும் இடையில் போதுமான இடைவெளி இல்லை. இதனால் விமானம் விபத்துக்குள்ளாகி விமானி உயிரிழந்தார்” என்று அவர் கூறினார்.
இருப்பினும், “விசாரணை ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. முக்கிய விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவம் பல கேமராக்களில் பதிவாகியுள்ளது” என்று அவர் கூறுகிறார்.
“சூலூர் விமானப்படை தளத்தின் நம்பர் 45 ஸ்குவாட்ரன் ‘ப்ளையிங் டாகர்ஸ்-இன் மிகவும் திறமையான விமானி நமான்ஷ் ஸ்யால். ஏரோ இந்தியா மற்றும் பல தேசிய விமானக் கண்காட்சிகளில் தனது அற்புதமான பறக்கும் திறன்களால் பார்வையாளர்களின் இதயங்களை வென்றவர் எனக் கூறப்படுகிறது” என்று கலீஜ் டைம்ஸ் எழுதிய மற்றொரு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“வெளிநாட்டு இயந்திரம் பொருத்தப்பட்ட இந்தியாவின் உள்நாட்டு இலகுரக போர் விமானமான (LCA) HAL தேஜஸை நமான்ஷ் ஸ்யால் ஓட்டிச் சென்றார். இந்த விபத்து தேஜஸ் சம்பந்தப்பட்ட இரண்டாவது விபத்து” என்று அந்தச் செய்தி கூறுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேஜஸ் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்து நடப்பதற்கு முன்னர் விமானத்தில் இருந்த விமானி பாதுகாப்பாக வெளியேறிவிட்டார்.