• Mon. Oct 20th, 2025

24×7 Live News

Apdin News

“தேனி வெள்ளம்… திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனித பேரிடர்” – நயினார் நாகேந்திரன் சாடல் | Nainar Nagendran says floods in theni are human disaster created by dmk govt

Byadmin

Oct 20, 2025


சென்னை: தேனியில் ஏற்பட்ட வெள்ளம் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறு வதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத தொடர்மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இது ஒருவிதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே.

பருவமழை தொடங்கும் முன்பே, கால்வாய்களைத் தூர்வாரி, நீர்நிலைகளை பேணி இருந்தால் இது போன்றதொரு பேரிடர் ஏற்பட்டிருக்குமா? பருவமழையை முன் கூட்டியே கணித்து உரிய முன்னேற்பாடுகளைச் செய்து, மக்களை எச்சரித்து இருந்தால், இதுபோன்ற சேதம்தான் ஏற்பட்டிருக்குமா? முல்லை பெரியாறு அணையில் 4 நாட்களுக்கு முன்பு வரை 1,000 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்ட நிலையில், 18-ம் தேதி இரவு மட்டும் தமிழக நீர்வளத் துறையால் 7,163 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருப்பதுதான் வெள்ளத்துக்கான காரணமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

மொத்தத்தில் திமுக அரசின் அலட்சியத்தால் நள்ளிரவில் தங்கள் வீடுகளை இழந்தும், கால்நடைகளைப் பறிகொடுத்தும், வயல்வெளிகள் சேதமாகியும் வாழ்வாதாரமின்றி மக்கள் தவிக்கும்போது, மீட்புப்பணியைத் துரிதப்படுத்தாமல் மெத்தனமாக இருக்கிறது விளம்பர மாடல் அரசு.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாகத் தேனி விரைந்துச் சென்று போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக மக்களை வைத்திட முகாம்கள் அமைக்க வேண்டும். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



By admin