கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். பத்து பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேனீக்கள் கொட்டினால் ஏன் மரணம் ஏற்படுகிறது? இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுர்கம் அருகே கூத்தக்குடி சிவன் கோவில் பகுதியில் அரச மரம் ஒன்று இருக்கிறது. இந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. இந்த தேன் கூட்டை புதன்கிழமையன்று காலையில் சிலர் கலைத்தனர். அதிலிருந்த தேனீக்கள் அங்கிருந்தவர்களை கொட்டத் தொடங்கின. பத்துக்கும் மேற்பட்டோரை தேனீக்கள் தாக்கியுள்ளன.
இதில் அதே ஊரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வீராசாமி என்பவரும் ஒருவர். அவர்கள் அனைவரும் அதே ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த வீராசாமிக்கு அன்று இரவு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவருடைய உறவினர்கள் மீண்டும் வீராசாமியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.
இதையடுத்து தேனீக்களால் பாதிக்கப்பட்ட 10 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். தேன் கூட்டை கலைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, கூத்தக்குடி கிராம மக்கள் கள்ளக்குறிச்சி வேப்பூர் சாலையில் அரை மணி நேரம் சாலை மறியல் செய்தனர்.
இருப்பினும் சற்று நேரத்தில் வீராசாமி இறந்து போனார். தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 10 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதத்தில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பரவக்கம் கிராமத்தில் இதேபோல தேனீக்கள் கொட்டியதில் செந்தில்குமார் என்பவர் பலியானார். மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தேனீக்கள் கொட்டினால் என்ன நடக்கும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தேனீக்களின் கொடுக்கில் நச்சுப் பொருட்கள் உண்டு என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.
பொதுவாக ஓரிரு தேனீக்கள் கொட்டுவதில் இதுபோன்ற விபரீத சம்பவங்கள் நடப்பதில்லை. தேன் கூட்டை கலைப்பது போன்ற நிகழ்வுகளின் போதுதான் பெரும் எண்ணிக்கையிலான தேனீக்கள் மனிதர்களைக் கொட்டுகின்றன. அதில் ஒரு சிலர் இறக்கவும் நேரிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
“தேனீக்களின் கொடுக்கில் நச்சுப் பொருட்கள் உண்டு. இவற்றில் இரண்டு நச்சுகள்தான் கவனிக்கத்தக்கவை. ஒன்று, மெலிட்டின் (Melittin) என்ற நச்சு. மற்றொன்று, பாஸ்போலைபேஸ் ஏ2 (Phospholipase A2) என்ற நச்சு.” என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.
மேலும் “மெலிட்டினைப் பொறுத்தவரை அது ரத்த அணுக்களின் சுவற்றை உடைத்து, உள்ளிருக்கும் பொருட்களை வெளியில் கொண்டுவந்துவிடும்.” என்கிறார் அவர்
“அதேபோல, தசைச் செல்களையும் உடைத்து, உள்ளே உள்ள பொருட்களை வெளியில் கொண்டுவந்துவிடும். இவை ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தை அடையும்போது சிறுநீரகம் பாதிப்படைந்து, அது வேறு பல உறுப்புகளையும் பாதித்து மரணம் ஏற்படலாம். பாஸ்போலைபேஸ் ஏ2 என்ற நச்சைப் பொறுத்தவரை, அதுவும் இதேபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். கூடுதலாக, நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும்” என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.
தேனீக்கள் கடித்துவிட்டால் நிலைமை மோசமாவதை அறிய சில அறிகுறிகள் இருக்கின்றன என்கிறார் நச்சுயியல் (Toxicology) பிரிவில் ஆய்வுகளை மேற்கொண்டவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் பேராசிரியருமான மருத்துவர் வி. ராஜேந்திரன்.
“தேனீக்கள் கொட்டும்போது அனாபிலாக்ஸிஸ் (anaphylaxis) எனப்படும் அதீத ஒவ்வாமை ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். தொண்டை அடைக்கும். மாரடைப்பு ஏற்படுவதைப் போன்ற உணர்வு ஏற்படும். இந்த நிலையில் உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும். ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேனீக்கள் கொட்டினால், நிச்சயம் மருத்துவமனையில் சேர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர் வி. ராஜேந்திரன்.
எத்தனை தேனீக்கள் கடித்தால் ஆபத்து?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பொதுவாக 100 தேனீக்கள் கொட்டினால், மரணம் ஏற்படும் என மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப் கூறுகிறார்.
“ஒரு தேனீ கடித்து உயிரிழந்த நிகழ்வுகளும் உண்டு.” என விளக்குகிறார் மருத்துவர் அமலோற்பவநாதன்.
“காரணம், தேனீயால் கொட்டப்பட்ட நபருக்கு மேலே சொன்ன நச்சுப் பொருட்கள் ஒவ்வாமை ஏற்படுத்துபவையாக இருந்தால், இதுபோல அரிதாக நிகழும். மற்றபடி, ஒரே ஒரு தேனீ கொட்டினால் பெரிய அளவில் ஆபத்து இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.” என்கிறார் அவர்.
மேலும் “கொடுக்கை எடுத்துவிட்டு வலி அதிகம் இருந்தால் வலி நிவாரணிகளைச் சாப்பிட்டால் சரியாகிவிடும். ஆனால், ஒரே ஒரு தேனீ கொட்டியவுடன் தொண்டை இறுகுவது, நாக்கு தடிப்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும்” என எச்சரிக்கிறார் அவர்.
ஆனால், தேன் கூட்டைக் கலைப்பது போன்ற நிகழ்வுகளில் அருகிலிருப்போரை நூற்றுக்கும் அதிகமான தேனீக்கள் கொட்டிவிடுகின்றன.
இதுகுறித்து பேசுகையில், “தேன்கூட்டைக் கலைக்கும் போது தேனீக்கள் அருகிலிருப்போரை துரத்தித் துரத்திக் கொட்டும். அதிலிருந்து தப்புவதற்காக ஓடும்போது எவ்வளவு தேனீக்கள் கொட்டின என்பது தெரியாது.” எனக் கூறுகிறார்.
“பொதுவாக 100 தேனீக்கள் கொட்டினால், மரணம் ஏற்படும்.” எனக் கூறும் அவர், “ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் 1,000 தேனீக்கள் கொட்டிய நிகழ்வுகளும் உண்டு.” என்றார்.
“ஆகவே, தேன்கூட்டை கலைத்து தேனீக்கள் கொட்டும் நிகழ்வு நடந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும். குறைந்தது ஒரு நாளாவது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்” என்றார் மருத்துவர் அமலோற்பவநாதன்.
தேனீக்கள் கடித்தால் என்ன சிகிச்சை அளிக்கப்படும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நச்சுக்களால் ஏற்படும் ஒவ்வாமைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும்.
தேனீக்கள் கொட்டினால், நச்சுக்களால் ஏற்படும் ஒவ்வாமைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும்.
“தொண்டை கட்டுவது, நாக்கு வீங்குவது போன்றவை நடக்கும்போது ஸ்டீராய்ட்களைச் செலுத்துவார்கள். அதற்குப் பிறகு அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்” என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன்.
கடந்த ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஊசிமலை வியூ பாயிண்டில் கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 26 வயது சபீர் என்பவர் நூற்றுக்கணக்கான தேனீக்களால் கொட்டப்பட்டு, உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.