• Mon. Aug 11th, 2025

24×7 Live News

Apdin News

தேர்தல் ஆணையம் மீதான குற்றச்சாட்டுகள் : சில கேள்விகள் – பதில்கள்

Byadmin

Aug 11, 2025


தேர்தல் ஆணையம்  ராகுல் காந்தி

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images

இந்தியாவின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, சில நாட்களுக்கு முன்பாக இந்திய தேர்தல் ஆணையம் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சில இடங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதீதமாக அதிகரித்தது, வாக்காளர்கள் நீக்கப்பட்டது ஆகியவை குறித்து இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். வாக்காளர் எண்ணிக்கை இப்படி ஏன் அதிகரிக்கிறது, பல லட்சம் பேர் ஏன் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார்கள்? இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபால்சுவாமியிடம் சில கேள்விகளும் அதற்கான பதில்களும்.

வேட்பாளர் பட்டியல் திருத்தம் என்பது முறைகேடா?

கே. வாக்காளர் பட்டியலைத் திருத்தும்போது ஒரு தொகுதியில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் புதிதாக இடம்பெறுகிறார்கள். லட்சக் கணக்கானவர்கள் நீக்கப்படுகிறார்கள். இவை முறைகேடுகளா?

ப. வாக்காளர் பட்டியலைத் தீவிரமாகச் சரிபார்க்கும்போது இது போல எண்ணிக்கையில் பெரும் வேறுபாடுகள் ஏற்படத்தான் செய்யும். 2007ல் கர்நாடக மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2008ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நாங்கள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதற்காக, 2008ஆம் ஆண்டு துவக்கத்தில் தேர்தல் பட்டியல் தீவிரமாக சரிபார்க்கப்பட்டது. அப்போது இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் என 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. புதிதாக 20 லட்சம் பேர் சேர்க்கப்பட்டார்கள். பத்து லட்சம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்குப் பிறகு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டபோது, 9.52 லட்சம் பேர் புதிதாக பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றும் சில ஆட்சேபனைகளோடும் விண்ணப்பித்தார்கள். இதில் 7.24 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதற்குப் பிறகு அரசியல் கட்சிகளின் கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்தியபோது அவர்கள் இதனைப் பாராட்டினார்கள்.

அதேபோல, 2007 ஆண்டுவாக்கில் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்பாக உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டபோது கிட்டத்தட்ட 21.13 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதற்குப் பிறகு சிறப்பு சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, முடிவில் 61.69 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தனர். 78.01 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. உத்தரப்பிரதேசம் மிகப் பெரிய மாநிலம் என்றாலும்கூட இந்த நீக்கமும் சேர்க்கையும் மிகப் பெரிய எண்ணிக்கைதான்.

By admin