• Fri. May 2nd, 2025

24×7 Live News

Apdin News

தேர்தல் ஆதாயத்துக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு: திருமாவளவன் விமர்சனம் | Thirumavalavan criticize caste wise census

Byadmin

May 2, 2025


மதுரை: தேர்தல் ஆதாயம் கருதியே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறினார்.

கேரள மாநிலம் வண்டிப்பெரியாறு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மதுரை திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடக்கும் என்று அறிவிக்கவில்லை. பாஜக அரசு 2029-ல் பதவிக் காலத்தை நிறைவு செய்கிறது. அடுத்த கணக்கெடுப்பு 2031-ல் நடைபெறும். ஏற்கெனவே, 2021-ல் நடத்தவேண்டிய கணக்கெடுப்பு கரோனாவால் 2031-க்கு தள்ளிப்போயுள்ளது. அப்போது பாஜக ஆட்சியில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. எனவே, இந்த அறிவிப்பு கண்துடைப்பாகவே இருக்கலாம்.

பிஹாரில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் இது பேசு பொருளாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பை முன்னிறுத்தி பரப்புரை செய்கிறார். இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு வலியுறுத்துகின்றனர்.

தேர்தல் ஆதாயம் கருதியே இந்த நிலைப்பாட்டை பாஜக அரசு தற்போது அறிவித்திருக்கிறது. எனினும், ஏற்கெனவே இதுகுறித்து எதிர் நிலைப்பாட்டை கொண்டிருந்த நிலையில், தற்போது மாறியுள்ளதை வரவேற்கிறோம்.

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் யார் இருந்தாலும், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அதற்கு போர் தேவையா என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

மதச்சார்பின்மைக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தும் பாஜகவை கண்டித்தும், வக்பு சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மே 31-ம் தேதி விசிக திருச்சியில் பிரம்மாண்ட பேரணி நடைபெறுகிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.



By admin