• Thu. Apr 3rd, 2025

24×7 Live News

Apdin News

தேர்தல் வழக்குகளில் 2 வித நிலைப்பாடு!

Byadmin

Apr 1, 2025


உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் பல கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவை தொடர்பான வழக்குகள் இன்று கொழும்பில் உயர்நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் அலை மோதின. இன்று உயர்நீதிமன்றம் அத்தகைய 41 மனுக்களைப் பரிசீலனைக்கு எடுத்த அதே நேரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் பத்துக்கு மேற்பட்ட மனுக்கள் ஆராயப்பட்டன.

இரண்டு நீதிமன்றங்களிலும் இத்தகைய தேர்தல் ஆட்சேபனை தொடர்பான ரிட் மனுக்களை விசாரணை செய்வதற்கு நியாயாதிக்கம் எந்த மன்றுக்கு உரியது என்பது தொடர்பான சட்டச் சர்ச்சை கவனத்தில் எடுக்கப்பட்டது.

இரண்டு நீதிமன்றங்களிலும் இந்த நியாயாதிக்கம் தொடர்பான விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் முரண்பாடான நிலைப்பாடு எடுத்திருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டமையை அடுத்து அந்த மன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் ஆட்சேபனை வழக்குகள் தொடர்பாக, அந்தந்தச் சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முன்னெடுப்பதற்கு ஒரு நாள் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் துரைராஜா, மஹிந்த சமயவர்த்தன, சம்பத் விஜயரட்ன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்குகள் எடுக்கப்பட்டன.

அப்போது தேர்தல் ஆணையத்துக்கு எதிரான ரிட் மனுக்கள் மட்டுமே உயர் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்கு உட்படும் என்பதைச்  சுட்டிக்காட்டிய சட்டமா அதிபர் தரப்பு, இந்த வழக்குகளில் தீர்மானங்களை எடுத்தவர்கள் மாவட்ட ரீதியான தெரிவத்தாட்சி அலுவலர்கள் என்பதால் அவர்களுக்கு எதிரான ரிட் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட முடியாது, மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குத்தான் செல்ல வேண்டும் என்ற பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்து வாதிட்டது.

தேர்தல் ஆட்சேபனை வழக்குகளைத் தாக்கல் செய்த தரப்புகள் அந்தக் கருத்தை எதிர் வாதத்தினால் மறுத்தன.

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளாகவே செயற்படுவதால் இது தேர்தல் ஆணையத்துக்கு எதிரான வழக்கு, அத்தகைய ரிட் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது சட்டத்தில் உள்ள ஏற்பாடு என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேற்படி சட்டமா அதிபரின் பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பாக இரண்டு தரப்பினரும் செய்த சட்ட வாதங்கள் தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணத்தை நாளை புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதியரசர்கள் வழக்கை அடுத்த நாள் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

இதே சமயம் இளையோரின் வயதை உறுதிப்படுத்தும் பிறப்புச் சான்றிதழின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி தொடர்பாக தேர்தல் திணைக்களம் எடுத்த தீர்மானம் சரியானது, அதில் மாற்றமோ, விட்டுக்கொடுப்போ, இரு தரப்பு இணக்கமோ ஏற்படவில்லை என்பதை சட்டமா அதிபர் தரப்பு இன்று நீதிமன்றத்தில் கோடி காட்டியது. அதனால், இந்த ரிட் மனுக்கள் தொடர்பாக சட்டமா அதிபர் தரப்பு முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை உயர்நீதிமன்றம் நிராகரித்தாலும், வழக்குகளில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள விடயங்கள் தொடர்பில் இணக்கமான தீர்வு கிட்ட வாய்ப்பில்லை என்றும், சம்பந்தப்பட்ட தரப்புகள் வாதாடி, இறுதியில் மன்றின் முடிவை ஏற்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்பட்டது.

இதேசமயம் இத்தகைய தேர்தல் ஆட்சேபனை வழக்குகள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் அதன் பதில் தலைமை நீதியரசர் லபார் மற்றும் நீதியரசர் கே.பிரியந்த பெர்னானண்டோ ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

அச்சமயம் அங்கு ஆஜரான சட்டமா அதிபர் தரப்பு, தேர்தல் ஆணையத்துக்கு எதிரான ரிட் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் மட்டுமே பரிசீலிக்கப்பட முடியும், இந்த நீதிமன்றத்துக்கு அந்த நியாயாதிக்கம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியது.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர்கள் தரப்பு, இதற்கு எதிரான தலைகீழான வாதத்தை அதே சமயத்தில் உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தரப்பு முன்வைப்பதாகச் சுட்டிக்காட்டினர்.

அதனைப் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த விடயத்தில் எந்த நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் உள்ளது என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் விட உயர்வான உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு விட்டு, அதன் முடிவைப் பெற்றுக்கொள்வதே பொருத்தமானது எனக் கருதி, தன்னுடைய வழக்கு விசாரணையை அதுவரை – நாளை வரை – ஒத்திவைத்தது.

அதுவரையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ரிட் மனுக்கள் தொடர்பான உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நாளை மீண்டும் எடுக்கப்படும் என்றாலும், உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை எதிர்பார்த்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நாளைய விசாரணையை ஓரிரு நாள் தள்ளிப் போடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

By admin