• Sat. May 10th, 2025

24×7 Live News

Apdin News

தேவயானி நடித்த ‘நிழற்குடை’ | திரைப்பட விமர்சனம்

Byadmin

May 10, 2025


தயாரிப்பு : தர்ஷன் பிலிம்ஸ்

நடிகர்கள் : தேவயானி, விஜித் கண்மணி, இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, நீலிமா இசை மற்றும் பலர்.

இயக்கம் : சிவா ஆறுமுகம்

மதிப்பீடு : 2 / 5

சின்னத்திரை தொடர்கள் மூலம் இரசிகர்களை வெகுவாக கவர்ந்த தேவயானி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘நிழற்குடை’ எனும் திரைப்படத்திற்கு அவருடைய இரசிகர்கள் மற்றும் இரசிகைகளிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தத் திரைப்படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

கதையின் முதன்மையான வேடத்தில் தோன்றும் நிரஞ்சன் (விஜித்) –  லான்ஸி (கண்மணி) தம்பதிகள்-  தங்களது பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு நிலா (அஹானா அஸ்னி – நிஹாரிகா) என்ற மூன்று வயது பெண் பிள்ளை உண்டு.

நிரஞ்சன் – லான்ஸி தம்பதிகளுக்கு இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவிற்கு சென்று வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது இலட்சியமாக இருக்கிறது. இதற்காக இருவரும் கடுமையாக உழைக்கிறார்கள். இதன் காரணமாக தங்களது பெண் பிள்ளையை பராமரிக்கும் தாதியராக இளம் பெண் ஒருவரை நியமிக்கிறார்கள். அந்த இளம் பெண் நிலாவை பராமரிப்பதில் குறை ஏற்படுவதால்… அவரை பணி நீக்கம் செய்துவிட்டு, வேறு ஒரு பராமரிப்பு பெண்மணியை இந்த தம்பதியினர் தேடுகிறார்கள்.

இந்த தருணத்தில் அக்ஷயா அறக்கட்டளை எனும் தொண்டு நிறுவனம் நடத்தும் முதியோர் இல்லத்தில் பணியாற்றுகிறார் ஜோதி (தேவயானி). இலங்கையிலிருந்து உறவுகளை தொலைத்து விட்டு, அன்பிற்காக ஏங்கும் ஜோதி – முதியோர் இல்லத்தில் உள்ள அனைவரையும் தன்னுடைய பெற்றோராக கருதி அவர்களுக்கு சேவை செய்து வருகிறார்.

ஒரு பிரத்தியேக விருந்து நிகழ்வில் நிரஞ்சன் – லான்ஸி தம்பதியினர் ஜோதியை சந்திக்கிறார்கள். அத்துடன் அவரிடம் நிலாவை பராமரிக்கும் தாதியர் பணியை ஏற்று கொள்ளுங்கள் என கேட்கிறார்கள். நிலாவை சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே ஜோதிக்கு ஒரு உணர்வுபூர்வமான பந்தம் ஏற்படுகிறது. இதனால் ஜோதி, நிலாவை பராமரிக்கும் தாதியராக பணியாற்ற தொடங்குகிறார். அதன் பிறகு ஜோதிக்கும், நிலாவிற்கும் இடையேயான பிணைப்பு புதிய உறவாக நங்கூரமிடுகிறது.

இந்தத் தருணத்தில் நிரஞ்சன் – லான்ஸி தம்பதியினரின் வாழ்க்கை இலட்சியமான அமெரிக்காவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்கள் நிலாவை மட்டும் அழைத்துச் செல்ல திட்டமிடுகிறார்கள். நிலா, ஜோதியும் உடன் வரவேண்டும் என நிபந்தனை விதிக்கிறாள். இதனைத் தொடர்ந்து நிரஞ்சன்-  லான்ஸி தம்பதியினர் என்ன முடிவை மேற்கொள்கிறார்கள்? என்பதுதான் இப்படத்தின் கதை.

உண்டு உறைவிட பாடசாலைகளில் உங்களுடைய பிள்ளைகளை நீங்கள் கல்வி கற்க சேர்த்தால், எதிர்காலத்தில் அப்பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களை முதுமையில் பராமரிக்க முதியோர் இல்லங்களை நாடுவார்கள் என்ற விடயம்- மதம் மாறி திருமணம் செய்து கொள்பவர்களது பெற்றோர்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய பிள்ளைகளை மன்னிக்க தயாராகி விடுவார்கள் என்ற உளவியல் பூர்வமான விடயம்- இன்றைய இளம் தம்பதிகள் தங்களுடைய சுய அடையாளத்திற்காக குடும்பம் என்ற அமைப்பிற்குள் பாசப்பிணைப்புடன் கூடிய பந்தத்துடன் வாழாமல், ‘பெனிபிட் வித் ரிலேஷன்ஸ்’ என்ற அடிப்படையில் வாழ்க்கை நடத்தும் விடயம் என பல விடயங்களை இயக்குநர் கதாபாத்திரங்களின் மூலம் நேரடியாக பார்வையாளர்களுக்கு விவரிக்கிறார்.

இதில் அப்பட்டமான பிரச்சார நெடி இருப்பதால்.. அரதபழசான தொலைக்காட்சி தொடரை பார்ப்பது போல் இருக்கிறது.

சமூகத்தின் இன்றைய யதார்த்தத்தை திரையில் பிரதிபலிக்க வேண்டும் என்ற இயக்குநரின் நோக்கம் சிறந்ததாக இருந்தாலும், அதற்கான திரை மொழியில் சொல்லத் தவறி இருக்கிறார். இதனால் தேவயானியின் நடிப்பு வீணாகிறது.

நிரஞ்சன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் விஜித் இயல்பாக நடித்திருக்கிறார். லான்ஸி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை கண்மணி இளமையாக இருக்கிறார். ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருப்பது அதிர்ச்சி அளித்தாலும், அதில் ஓரளவு நடிக்க முயற்சி செய்திருக்கிறார். ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவயானி தன் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் அதிலும் குழந்தை நிலாவிற்காக கதை சொல்லும் காட்சியில் குழந்தையாகவே மாறி நடித்திருப்பது பாராட்டத்தக்கது.

ஒளிப்பதிவும், பாடல்களும் பின்னணி இசையும், படமாளிகையில் படைப்பை கண்டு இரசிக்கும் பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும் உறுத்தவில்லை.

நிழற்குடை – நிழலற்ற குடை

By admin