மேட்டூர்: தைப்பூசத் திருவிழாவை ஒட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையத்தில் உள்ள முருகன் கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
தைப்பூச திருவிழாவை ஒட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் உள்ள பழனி ஆண்டவர் திருக்கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு செய்தார்.
தைப்பூச திருநாளை ஒட்டி இக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக, சாமிக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேங்கள் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் அரோகரா, அரோகரா என முழக்கமிட்டு வழிபட்டனர். தொடர்ந்து, பொங்கல் வைத்து படையல் இட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தனது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவை ஒட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் பொதுச் செயலாளர் பழனிசாமி மக்களோடு மக்களாக அமர்ந்து அன்னதானம் உண்டு மகிழ்ந்தார்.