0
சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும். ஆனால் இன்றைய இலங்கையில் அந்த சட்டம் சிலருக்கு கவசமாகவும் மற்றவர்களுக்கு அடக்குமுறைக்கான ஆயுதமாகவும் மாறியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான விவகாரம் இதற்கு மிகத் தெளிவான உதாரணம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்று (23) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் அருட்தந்தை மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளதாவது,
எமது மிக அண்மைய உதாரணங்களான டித்வா புயல் மற்றும் சுனாமியை விட நாட்டில் நிறுவனமயப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்தால் பாதுகாக்கப்படும் சிங்கள பௌத்த பேரினவாதம் பயங்கரமானது.
சட்டவிரோத கட்டடமான திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்றுமுன்தினம் (21) நடத்தப்பட்ட போராட்டத்தில் இந்து மத குரு உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டாலும், போராட்டத்தின்போது பொலிஸாரின் நடவடிக்கை, போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்த விதம் சிங்கள பௌத்தத்தின் கோர முகத்தினை மட்டுமல்ல, “இனவாத மதவாதத்தினை இல்லாமல் செய்வோம்” என அடிக்கடி அலங்கார வசனம் பேசும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினதும் அவரது தலைமைத்துவத்திலான தேசிய மக்கள் சக்தியினதும் அகோர முகத்தினை வெளிக்காட்டியது. இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதே.
டித்வா புயல், மழை, வெள்ளம் மண்சரிவை தொடர்ந்து சட்ட விரோத கட்டடங்கள் தொடர்பான விடயம் பேசுபொருளாகியுள்ளது. சிங்கள பௌத்த பேரினத்தின் அடையாளமாகவும் நல்லிணக்கத்திற்கு எதிரானதுமான சட்டவிரோத விகாரையை ஆட்சியாளர்கள் அகற்றாமல், அதனை பாதுகாப்பதற்கு எடுக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கு துணிவில்லாது இருப்பதேன்?
இன்னும் தையிட்டி விகாரை நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. இன அமைதிக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழர்களுக்கு எதிரான இன்னொரு சுற்று இன அழிப்புப் போருமாகும்.
அன்று முப்படைகள் செய்ததை இன்று அவர்களின் துணையோடு பௌத்த மகா சங்கம் நேரடியாக களத்தில் இறங்கி வெளிப்படையாகவே செய்வதாக தோன்றுகின்றது. தேசிய மக்கள் சக்தியும் அவர்களின் காலடியில் விழுந்து அரசியல் செய்வதாக தமிழ் மக்கள் உணர்கின்றனர்.
இந்நிலையில் தற்போதைய சட்டவிரோத விகாரையின் பிக்குவிற்கு அரச ஆதரவோடு பதவி உயர்வு கொடுப்பது என்பதும் எதிர்வரும் புது வருடத்தில் ஜனவரி மாதம் 3ஆம் திகதி அவ்விகாரை அமைந்திருக்கும் மக்களுக்கு சொந்தமான காணியில் புத்தர் சிலை வைக்க மகா சங்கத்தினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அதற்கான பாதுகாப்பை கோரியிருப்பது தமிழர்களை போராட்டத்திற்குள் தள்ளி இன்னுமொரு இன வன்முறைக்கு வித்திடும் கொடூர செயலுமாகும்.
டித்வா பேரிடருக்கு முகங்கொடுத்து அவல நிலையில் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற சூழ்நிலையில் இன்னும் ஓர் அவலத்தை சந்திப்பதற்கு நாடு தயாராக இல்லை. இதனை ஆட்சியாளர்கள் உணர்ந்து, அதனைத் தடுத்து நிறுத்துமாறும் கேட்கின்றோம்.
சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் என்பது பௌத்த மதத்திற்கு எதிரான போராட்டமோ, அம்மதத்தினை பின்பற்றும் சிங்களவர்களுக்கு எதிரான போராட்டமோ அல்ல. அதேபோன்று இந்துக்களின், தையிட்டி பிரதேசத்தில் அவ்விகாரையினால் காணிகளை இழந்த மக்களின் அல்லது அரசியல்வாதிகளின் போராட்டம் மட்டுமல்ல. அது கட்டமைக்கப்பட்ட இனமத ஆக்கிரமிப்புக்களோடு ஒடுக்குதலைத் தொடரும் அதனை பாதுகாக்கும் பேரினவாத அரச கட்டமைப்புக்கு எதிரானதுமான போராட்டமாகும்.
குறிப்பாக கிறிஸ்தவ சமூகம் இயேசுவின் பிறப்பிற்கு விழா எடுக்கும் காலகட்டம் இது. இயேசுவின் இறை கொள்கையோடு மக்கள் விடுதலை செயற்பாட்டோடு பயணிப்பவர்களாக தம்மை அடையாளப்படுத்துவோர் அடக்குமுறைக்கு எதிரானதும் சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதத்தின் ஓர் அடையாளமாகவும் திகழும் சட்டவிரோத கட்டடத்திற்கு எதிரான போராட்டத்தினை வலுப்படுத்த வேண்டும்.
இயேசு அன்று கட்டமைக்கபட்டதும் நிறுவனமயமான அரச மற்றும் சமய அமைப்புகளுக்கு எதிராகவும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பெடுத்தும் நீதிக்கான அறப்போராட்ட வாழ்வையே தமதாக்கினார். அது கடவுளின் போராட்டம். இத்தகைய போராட்டத்தோடு இணைவதன் மூலமும் கூட்டாக எதிர்ப்புக் குரலை உயர்த்துவதன் மூலமுமே விழாவை கருத்துள்ளதாக்கலாம்.
இயேசு அருளிய முழு மனித விடுதலையை மக்களின் மக்கள்மயமாக்குவதே விழாவாக அமையும் என்பதையும் கூற விரும்புகின்றோம்.
தமிழர் தாயகம் எங்கும் புத்தர் சிலை வைப்பதற்கு முழு வீச்சோடு தொல்லியல் திணைக்களம் களத்தில் நிற்பதோடு அரச மரக்கன்று விதைகளை தமிழர் நிலமெங்கும் வீசி விதைப்பதற்கு தம் வசம் வைத்துள்ளது. இதற்கு எதிராக தமிழர் தாயக மக்களை திரட்சியாக்கும் பொறுப்பு அனைத்து சமய அமைப்புகளுக்கும், அதன் தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் உண்டு. இதனை தட்டிக்கழித்துவிட்டு பக்தியில் மக்களை வழிநடத்த முடியாது. அரசியல் ரீதியில் மக்களை கட்டியெழுப்பவும் முடியாது. தமிழர் தாயகம் காக்க நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் எம் தாய்நிலம் பறிபோகும். எம் இனம் அழியும். அதன் பின் யாருக்காக சமயம்? யாருக்காக அரசியல்? தலைவர்கள் யாருக்காக? அவர்களின் கட்சிகள் யாருக்கு? எனும் கேள்விகளை மக்கள் கேட்கும் முன்னர், கூட்டுச் செயற்பாட்டுக்கு உடனடியாக வழிவகுப்போம்.
இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தினை எட்டி நின்று பார்ப்பதும், பாரா முகத்துடன் இருப்பதும், நாட்டின் அமைதிக்கு எதிரான அடிப்படை மனித உரிமைக்கு எதிரானதும், தமிழர் தேசியத்துக்கு எதிரான செயற்பாடு மட்டுமல்ல, மனிதத்துவத்திற்கு எதிரானதும், சமயங்கள் போதிக்கின்ற அற நீதிக்கும் எதிரான செயலாகும் என்பதை வலியுறுத்துகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.