பட மூலாதாரம், TNDIPR
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
-
இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநிலமான தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் குறித்து விவாதிக்க, மாநில அரசு புதன்கிழமையன்று (மார்ச் 05) அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் எந்தக் கட்சி, என்ன பேசியது? என்ன தீர்மானிக்கப்பட்டது?
இந்தியாவில் மக்களவைத் தொகுதிகளின் அடுத்த மறுசீரமைப்பு 2026க்கு பிறகு நடத்தப்பட வேண்டுமென 2001ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகையின் அடிப்படையில்தான் நடக்கும். ஆகையால், 1970களில் இருந்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அகில இந்திய அளவில் தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கடுமையாகக் குறைக்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார். மொத்தம் 63 கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி ஆகியவை அறிவித்தன. இதுதவிர, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அ.தி.மு.க., இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வெற்றிக் கழகம், அ.ம.மு.க, ம.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் இதில் பங்கேற்றன.
இந்தக் கூட்டம் மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை பத்து மணிக்குத் தொடங்கியது.
முதலமைச்சர் பேசியது என்ன?
பட மூலாதாரம், TNDIPR
இந்தக் கூட்டத்தில் முதலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
“தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்த்தவே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி மறு சீரமைப்பு என்ற கத்தி தமிழ்நாட்டின் மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 39 தொகுதிகள் இருக்கின்றன. இவை குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
அடுத்த ஆண்டில் (2026) மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகையைக் கணக்கிட்டுத்தான் செய்வார்கள். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது இந்தியாவின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது,” என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “இப்போது உள்ள 543 தொகுதிகள் தொடர்ந்தால், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்கிறார்கள். அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டால், நமக்குக் கூடுதலாக 22 இடங்கள் கிடைக்க வேண்டும்.
ஆனால், தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள்தான் கிடைக்கும். 12 தொகுதிகளை இழக்க நேரிடும். இந்த இரு முறைகளிலும் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும்,” என்று குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Handout
ஆகையால், இந்தச் சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்கள் தொகை அடிப்படையில், மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளின் இடங்கள் குறையும் என்று சொல்வது, ‘மக்கள் தொகை கட்டுப்பாடு’ எனும் கொள்கையை, முனைப்பாகச் செயல்படுத்தி, நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென் மாநிலங்களுக்குத் தரப்படும் தண்டனையாகவே அமையும்” என்று குற்றம் சாட்டினார்.
“இந்தத் தொகுதி மறுசீரமைப்பு என்பது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல – ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல். தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது எழுப்பப்படும் குரலையே, மத்திய அரசு ஏற்க மறுக்கும் நிலையில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ, குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும்” என்று கூறியதோடு, முதலமைச்சர் சில தீர்மானங்களை முன்மொழிந்தார்.
முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மனங்கள்
பட மூலாதாரம், TNDIPR
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்கள்:
- இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய – மக்கள் தொகை அடிப்படையிலான ‘நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை’ இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது.
- கடந்த 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் வாஜ்பேய் உறுதி அளித்தார். தற்போதும் இந்த வரையறை 2026இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
- நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் – தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
- தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றக்கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
- இந்தக் கோரிக்கைளையும் அவை சார்ந்த போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல – மக்கள் மத்தியில் இந்தப் பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட – தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ ஒன்றை அமைத்திட வேண்டும்.
மற்ற கட்சிகளின் கருத்து என்ன?
பட மூலாதாரம், HAndout
முதலமைச்சர் பேசி முடித்த பிறகு ஒவ்வொரு கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
அ.தி.மு.க சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் கடுமையாக முயற்சி செய்து, மக்கள் தொகையைக் கடுமையாகக் குறைத்திருக்கின்றன. ஆனால், இதுபோன்ற கடும் முயற்சிகளை வட மாநிலங்கள் செய்யாததால் அந்த மாநிலங்களில் மக்கள் தொகை உயர்ந்துள்ளது,” என்று கூறினார்.
தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்கு அது தண்டனையாக அமையும் என்பதால், முன்பு அந்த முற்சிகளை மத்திய அரசு ஒத்திவைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அதோடு, இப்போது மறுசீரமைப்பு முயற்சிகளை மீண்டும் மத்திய அரசு எடுத்து வருகிறது எனவும், தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும், “ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்கு 7.18 சதவீதத்தில் இருந்து குறையக் கூடாது என்பதையும் பிரதமர் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுத்து மூலமாக உறுதியளிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தைத் திருத்த வேண்டும்” என்றார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பேசிய அன்புமணி ராமதாஸ், “சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது தமிழ்நாட்டிற்கு ஒரு தொகுதியைக்கூட குறைக்க மாட்டோம் என்றார். அதே நேரம் உத்தர பிரதேசம், பிகார் போன்ற வட மாநிலங்களுக்கு எவ்வளவு தொகுதிகளை உயர்த்துவோம் என்பதைச் சொல்லவில்லை.
ஆகவே மத்திய அரசு அவர்களுக்குள் இது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. முதல்வர் அத்தனை தென் மாநில முதல்வர்களையும் நேரில் சந்தித்து, சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், இதேபோல, மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாகவும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
பட மூலாதாரம், handout
வி.சி.க. தலைவர் திருமாவளன் பேசும்போது, “மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன், இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டிய பொறுப்புணர்வோடு இந்தக் கூட்டம் நடக்கிறது. ஐம்பது மாநிலங்களைக் கொண்ட நாடு அமெரிக்கா.
நூறு ஆண்டுகளாக ஒரே எண்ணிக்கையில்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறார்கள். அங்கேயும் இதேபோன்ற பிரதிநிதித்துவ ஜனநாயகம்தான் இருக்கிறது. ஆகவே நம் முதல் நிலைப்பாடு எண்ணிக்கையை மாற்ற வேண்டாம் என்பதாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், எண்ணிக்கை சமநிலை மாறக்கூடாது. அதில் உறுதியாக இருப்போம். முதல்வர் ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைக்கத் தீர்மானித்திருக்கிறார். அது தேவை எனக் கருதுகிறேன்” என்றார்.
பட மூலாதாரம், X/@SPK_TNCC
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை பேசும்போது, “தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் பேசும்போது, தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்ற மாட்டோம் என்கிறார். ஆனால், உத்தர பிரதேசத்திற்கோ, பிகாருக்கோ இடங்களின் எண்ணிக்கையை மாற்ற மாட்டோம் என எந்த இடத்திலும் சொல்லவில்லை. அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். ஆகவே தமிழ்நாட்டின் உரிமைக்காக அனைவரும் ஒத்துழைப்போம்,” என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “மக்கள் தொகை அடிப்படையிலான மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், வட கிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தும். எந்தத் தேவையும் இன்றி நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்பதை யார் பேசுகிறார்கள், எதற்காகப் பேசுகிறார்கள் என்பது கவனத்திற்கு உரியது,” என்று தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசிய அவர், “மாநில உரிமைகளில் தலையிடுவதும், வருடாந்திர பட்ஜெட்டில் தேர்தல் வரவிருக்கும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதும், தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதிப் பகிர்வை மறுப்பதும், பேரிடர்க் காலங்களில் நமது கூக்குரலுக்கு செவி சாய்க்காததும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிப்பதும் என் பேச்சைக் கேட்டால்தான் நிதி தருவேன் என மிரட்டுவதும், ஒரு ஒன்றிய அரசின் செயலாகத் தெரியவில்லை.
எப்போதுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் கொண்டு வராமல் இருப்பதுதான் ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் இந்தியாவின் பன்முகத் தன்மையையும் காக்கும்,” என்றார்.
கூட்டத்தில் பேசிய அனைவருமே முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்தே பேசினர். இதற்குப் பிறகு கூட்டம் முடிவுக்கு வந்தது.
‘இதுவொரு நாடகம்’ – ஜெயக்குமார் விமர்சனம்
அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. தொகுதி மறுவரையறை செய்ய நிதியும் ஒதுக்கப்படவில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தி முடிக்கவே இன்னும் மூன்று வருடங்கள் ஆகும் என்ற நிலையில் எதற்கு எந்த அவசரம்?
நாங்கள் மாநில உரிமையைக் காப்பதற்காக தீர்மானத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தோம். அது வேறு விஷயம். ஆனால், மாநில உரிமையை பற்றிப் பேசுவதற்கு, தி.மு.கவுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் எந்த முகாந்திரமும் இல்லை,” என்று விமர்சித்தார்.
மேலும், “இவர்கள் கச்சத்தீவு, நீட் தேர்வு, காவிரி போன்ற விஷயங்களில் உரிமையைப் பறிகொடுத்தார்கள். பொதுப் பட்டியலுக்குச் சென்ற கல்வியை, 17 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கேற்றபோது மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இப்போது இருக்கும் சூழலைப் பார்க்கும்போது, ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்” என்றும் கடுமையாக விமர்சித்தார் ஜெயக்குமார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழ்நாட்டிற்கு உள்ள 7.18 சதவீத பிரதிநிதித்துவம் நீடிக்க வேண்டும் என்பதும், இது குறித்து பிரதமர் எழுத்து மூலமாக உறுதியளிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை அதற்கேற்றபடி திருத்த வேண்டும்” என்ற விஷயமும் தீர்மானத்தில் இணைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.