பட மூலாதாரம், Facebook
இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள் குறைந்து அவற்றின் பிரதிநிதித்துவம் குறையும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால், அப்படி அபாயம் ஏதும் இல்லை என்கிறது பா.ஜ.க.
தமிழ்நாடு அமைச்சரவையின் கூட்டம் பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.
பொதுவாக, அமைச்சரவைக் கூட்டங்களுக்குப் பிறகு மூத்த அமைச்சர் ஒருவர், அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிப்பார். ஆனால், இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சரே செய்தியாளர்களைச் சந்திப்பார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்படி, அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தென்னிந்தியாவின் மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறிப் பேச ஆரம்பித்தார்.
“தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இது குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு 2026ஆம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப் போகிறது. பொதுவாக இவையெல்லாம், மக்கள் தொகையைக் கணக்கிட்டுத்தான் செய்யப்படும்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மக்கள் தொகை குறைவாக இருக்கும் காரணத்தால், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.
இப்போது நாடு முழுவதும் இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படும் என்று கூறிய அவர், “அதாவது இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள்” என்றார்.
மேலும், “வேறொரு முறையில் கணக்கிட்டால், ஒட்டுமொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்தி, அதற்கேற்ப பிரித்தாலும், நமக்கான (தமிழ்நாட்டிற்கான) பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்,” என்று குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்க, மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசியல் கட்சிகளுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதம்
பட மூலாதாரம், @sansad_tv
இதற்குப் பிறகு, இது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இப்படி தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்னைகளையும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
“தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டின் பல நியாயமான கோரிக்கைகளைப் பெற இயலவில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி குறைக்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு
இதையடுத்து இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளித்த பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தொகுதி மறுசீரமைப்பு குறித்து யாரும் பேசாத நிலையில், முதலமைச்சர் கபட நாடகம் நடத்துவதாகக் குறிப்பிட்டார்.
புதன்கிழமையன்று கோயம்புத்தூரில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசினார்.
“தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவாகக் கூறியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு, விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும் தென்னிந்திய மாநிலங்கள் உள்பட நாட்டில் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என உறுதியளித்துள்ளார். திமுக முதல்வர் ஸ்டாலின் தவறான தகவல்களைத் தெரிவித்து மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறார்” என்று தனது உரையில் குறிப்பிட்டார் அமித் ஷா.
‘தமிழ்நாட்டிற்கு அநீதி’
பட மூலாதாரம், sansad.in
இதற்குப் பதிலளிக்கும் வகையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, எந்த விகிதாச்சாரத்தின் அடிப்படையில் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
“மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதிகள் உயரும். இது தொடர்பாக முதல்வர் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு அமித் ஷா பதிலளிக்கும்போது, விகிதாச்சார அடிப்படையில்தான் மறு சீரமைப்பு அமையும். தமிழ்நாட்டிற்கு ஒரு தொகுதிகூடக் குறையாது எனக் கூறியிருக்கிறார்.
இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும்போது Pro-rata எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விகிதாச்சார உயர்வு இப்போதுள்ள தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டதா அல்லது இப்போதுள்ள மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டதா என்பதற்கு எந்தவித விளக்கமும் கொடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க குழப்பமாக இருக்கிறது. எங்களுக்கு (தமிழ்நாடு) தொகுதிகளைக் குறைக்காமல், வட மாநிலங்களுக்கு அதிகமாகக் கொடுத்தாலும் அது அநீதிதான்” என்றார்.
“எண்ணிக்கையை உயர்த்துவது பிரச்னையல்ல, ஆனால் எதன் அடிப்படையில் என்பதுதான் பிரச்னை. மக்கள் தொகையின் அடிப்படையிலா அல்லது இடங்களின் அடிப்படையிலா?” என்று கேள்வி எழுப்பினார் ஆ.ராசா.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதாக இருந்தால், இப்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து அப்படியே உயர்த்த வேண்டும் என்றார் ராசா.
ஆ.ராசா சுட்டிக்காட்டுவதைப் போல 2026க்குப் பிறகு இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என்பதை மத்திய அரசு பல தருணங்களில் சுட்டிக்காட்டியுள்ளது.
உதாரணமாக, புதிய நாடாளுமன்றக் கட்டடம் பற்றி அறிவிக்கப்பட்டபோதே, எதிர்காலத்தை மனதில் கொண்டு கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்களவை அரங்கில் 888 இருக்கைகளும் மாநிலங்களவை அரங்கில் 384 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தின்போது, மக்களவையில் 1,224 பேர் வரை அமர்ந்து அவை நிகழ்வில் பங்கெடுக்க முடியும்.
இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழா, 2023ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கையை வருங்காலத்தில் அதிகரிப்பதைக் காணவிருக்கிறோம். ஆகவே, புதிய நாடாளுமன்றத்தை நிர்மாணிப்பது காலத்தின் தேவையாக இருந்தது,” என்று குறிப்பிட்டார்.
தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 82 வலியுறுத்துகிறது. இப்படி மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காகப் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை Delimitaion Commission அமைக்கப்பட்டு, தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்.
இதற்கென 1952ஆம் ஆண்டில் Delimitation Commission Act இயற்றப்பட்டது. இதற்குப் பிறகு இந்தியாவில் மூன்று முறை நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது 489 தொகுதிகள்தான் இருந்தன. 1952இல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது, மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 494ஆக உயர்ந்தது. அப்போது மக்கள் தொகை 36.1 கோடியாக இருந்தது.
இதற்குப் பிறகு, இரண்டாவது முறையாக 1963இல் தொகுதிகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு, தொகுதிகளின் எண்ணிக்கை 522ஆக உயர்த்தப்பட்டது. அந்தத் தருணத்தில் மக்கள் தொகை 43.9 கோடியாக உயர்ந்திருந்தது. இதற்குப் பிறகு 1973இல் மூன்றாவது முறையாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உயர்த்தப்பட்டது. அப்போது மக்கள் தொகை எண்ணிக்கை, 54.8 கோடி.
இதேபோல, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாநிலத்திலும் திருத்தப்பட்டது. இந்நிலையில், 1975இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டதால், அந்தத் தருணத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42வது திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதால், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என இந்தத் திருத்தம் கூறியது. ஏனென்றால், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை ஒழுங்காகச் செயல்படுத்திய மாநிலங்கள் இதனால் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
கடந்த 2001இல் இந்த 25 ஆண்டு கால வரையறை முடிவுக்கு வந்தது. இதனால் 2002இல் அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், 84வது திருத்தத்தின் மூலம் இது மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடப்பட்டது.
கடந்த 2000வது ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கொள்கையின்படி, 2026க்குள் இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் மக்கள் தொகை நிலைபெற்றுவிடும் எனக் கருதப்பட்டது. ஆகவேதான், அந்த ஆண்டுக்குப் பிறகு, தொகுதி மறுசீரமைப்புச் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 2026க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கம்போல நடந்திருந்தால், 2026ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2031ஆம் ஆண்டில்தான் நடந்திருக்கும். ஆனால், 2021ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாததால், அந்தக் கணக்கெடுப்பை 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தி, அதன் அடிப்படையில் அடுத்த சில ஆண்டுகளிலேயே தொகுதிகளை மறுவரையறை செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
தொகுதிகளை ஏன் மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்க வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
அரசியலமைப்புச் சட்டத்தின் 81வது பிரிவின் 2வது விதி, ஒரு மாநிலத்தின் மக்கள் தொகைக்கும் அந்த மாநிலத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்கிறது. ஆகவே, கூடுதல் மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்கள் கூடுதலான எம்.பிக்களை பெற்றிருக்கும். குறைவான மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்கள் குறைவான உறுப்பினர்களைப் பெற்றிருக்கும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, எவ்வளவு பேருக்கு ஒரு மக்களவைத் தொகுதி என்பது வரையறுக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 81(1)(b)இன் படி ஒரு மக்களவைத் தொகுதியில் ஐந்து லட்சம் முதல் ஏழரை லட்சம் வரை மக்கள் தொகை இருக்கலாம். ஆனால், இந்தப் பிரிவு விரைவிலேயே திருத்தப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தத்தின்படி, ஏழரை லட்சம் பேருக்கு ஒரு மக்களவைத் தொகுதி என்ற வரையறை நீக்கப்பட்டது. இப்போது பல தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சம் வரைகூட இருக்கிறது. தெலங்கானாவில் உள்ள மல்கஜ்கிரி தொகுதியில் அதிகபட்சமாக 31,50,303 வாக்காளர்கள் இருக்கின்றனர்.
இந்தியாவில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பான 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பிகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மட்டும் சேர்ந்து இந்திய மக்கள் தொகையில் பாதிப் பேரை, அதாவது 48.6 சதவீதம் பேரைக் கொண்டிருக்கின்றன.
ஆகவே, மக்கள் தொகை அடிப்படையில் இடங்களை அதிகரித்தால், இந்த ஐந்து மாநிலங்களிலேயே இந்தியாவின் பாதி மக்களவை இடங்கள் இடம்பெறும்.
இந்த நிலையில்தான் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகரித்தாலோ, குறைத்தாலோ தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்தால் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை குறையும். இது பிரதிநிதித்துவத்தையும் குறைக்கும்.
தொகுதி மறுவரையறைக்குப் பிறகு யாருக்கு இழப்பு, யாருக்கு ஆதாயம்?
பட மூலாதாரம், Getty Images
இந்திய நாடாளுமன்றத்தில் எத்தனை இடங்கள் இருக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றமே வரையறுக்கிறது. இப்போது இந்திய நாடாளுமன்றத்தில் 543 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த எண்ணிக்கையை மாற்றாமல் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென் மாநிலங்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்.
இப்போதைய சூழலில் இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போகிறதா, எவ்வளவு அதிகரிக்கப் போகிறது அல்லது எண்ணிக்கையை மாற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டு மாநிலங்களுக்குள் அவை வேறு விதமாகப் பகிர்ந்தளிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை மத்திய அரசு வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.
ஆகவே, எவ்வளவு தொகுதிகள் அதிகரிக்கும், எந்த மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையில் இடம் கிடைக்கும் என்பவை குறித்து எந்த அதிகாரபூர்வ அறிக்கையும் கிடையாது. ஆனால், சில ஆய்வாளர்கள் இது தொடர்பாகச் சில கணிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2000களின் துவக்கத்தில் பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளரான ஆலிஸ்டர் மெக்மில்லன் இந்த விவகாரம் தொடர்பாக எழுதிய ஒரு கட்டுரையில், மக்களவை இடங்களை அதிகரிக்காமல் 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், தமிழ்நாட்டில் தற்போதுள்ள 39 தொகுதிகளுக்குப் பதிலாக 32 தொகுதிகளே இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
அதேபோல, ஆந்திரா + தெலங்கானாவில் 42க்குப் பதிலாக 39ஆகவும் கேரளாவில் 20க்குப் பதிலாக 17 ஆகவும் கர்நாடகாவில் 28க்குப் பதிலாக 27ஆகவும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்றார் அவர். இதற்கு மாறாக, உத்தர பிரதேசத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 80இல் இருந்து 87 ஆகவும் பிகாரில் 40இல் இருந்து 43 ஆகவும் ராஜஸ்தானில் 25இல் இருந்து 29 ஆகவும் அதிகரிக்கும் என்றார்.
அதேநேரம் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப 647ஆக அதிகரித்தால், உத்தர பிரதேசத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 103 ஆகவும் பிகாரில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 51ஆகவும் ராஜஸ்தானில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 35ஆகவும் உயரும் என்று ஆலிஸ்டர் மெக்மில்லன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திரா – தெலங்கானாவில் தொகுதிகளின் எண்ணிக்கை 47 ஆக உயரும். ஆனால், தமிழ்நாடு, கேரளா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியே நீடிக்கும் என்றார். இப்படி நடந்தாலும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறையும்.
பட மூலாதாரம், Sansad.in
இதற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டில் ஆய்வாளர்கள் மிலன் வைஷ்ணவ், ஜாமி ஹின்ட்ஸோன் ஆகியோர் இணைந்து India’s Emerging Crisis of Representation என்ற கட்டுரையை எழுதினர்.
அதில், மக்களவை இடங்களின் எண்ணிக்கை மாறாமல் இருந்தால், 2026இல் தமிழ்நாட்டில் 31 இடங்கள் இருக்குமென்றும் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் சேர்ந்து 34 இடங்களும் கேரளாவில் 12 இடங்களும் இருக்குமெனவும் குறிப்பிட்டனர். அதேவேளையில், இதற்கு மாறாக உத்தர பிரதேசத்தில் 91 இடங்களும் பிகாரில் 50 இடங்களும் ராஜஸ்தானில் 31 இடங்களும் மத்திய பிரதேசத்தில் 33 இடங்களும் இருக்குமெனக் குறிப்பிட்டனர்.
அதாவது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய தென் மாநிலங்கள் 17 இடங்களை இழக்கும் நிலையில் பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மொத்தமாக 22 இடங்களைக் கூடுதலாகப் பெறும்.
மாறாக, மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்றபடி இடங்கள் அதிகரிக்கப்பட்டால், இதே விகிதத்தில் இடங்களின் எண்ணிக்கை பகிர்ந்தளிக்கப்படும். இவர்களது கருத்துப்படி மக்கள் தொகை அடிப்படையில் 2026இல் மக்களவை இடங்களை அதிகரித்தால், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 848 இடங்களாக உயரும்.
அப்போது உத்தர பிரதேசத்தில் 143 இடங்களும் பிகாரில் 79 இடங்களும் மத்திய பிரதேசத்தில் 52 இடங்களும் மேற்கு வங்கத்தில் 60 இடங்களும் இருக்கும். தமிழ்நாட்டில், ஆந்திரா – தெலங்கானாவில் 54 இடங்களும் கேரளாவில் 20 இடங்களும் இருக்கும்.
‘தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும்’
பட மூலாதாரம், @dmk_raja
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, “இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசியிருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டுக்கான இடங்கள் குறையாது என்கிறார். இது என்ன வாதம்? தமிழ்நாட்டுக்கான இடங்களைக் குறைக்காமல் உத்தர பிரதேசத்திற்கான இடங்களை அதிகரித்தால்கூட எங்கள் பிரதிநிதித்துவம் குறையும்” என்றார்.
மேலும், “மத்திய அரசுதான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தச் சொன்னது. அதனால், ஒரு சமமற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கொள்கையைச் செயல்படுத்தியதால் தமிழ்நாடு பாதிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது. இத்தகைய சூழலில், தமிழ்நாட்டின் நலன்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்குத்தான் உண்டு. ஏனென்றால், மத்திய அரசின் கொள்கையைச் செயல்படுத்தியதால்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்” என்றார்.
இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம் என்று கூறிய அவர், “இந்தியாவில் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டன. அந்த மொழிவாரி மாநிலங்கள் சரியான வகையில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்பட வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு பண்பாட்டுக் கூறுகள் இருக்கின்றன.
ஒரே ஒரு மொழி மட்டும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் நாடாளுமன்றம் உருவானால், இந்தியா பல்வேறு மொழி, கலாசாரங்களை உள்ளடக்கிய ஒரு துணைக் கண்டமாக இருக்காது. இந்தியா உடைய ஆரம்பிக்கும். ஏனென்றால், இந்தியாவின் அடிப்படை, மொழி அடிப்படையிலான மாநிலங்கள்தான்” என்று அவர் கூறினார்.
“சில மாநிலங்களுக்கு மட்டும் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் செய்தால், அது அந்த மொழியை மட்டும் உயர்த்தும். இது பிற மாநிலங்களையும் மொழிகளையும் பாதிக்கும். இது இந்தியாவுக்கு நல்லதல்ல” என்கிறார் ஆ.ராசா.
பாஜக சொல்வது என்ன?
பட மூலாதாரம், @narayanantbjp
ஆனால், தி.மு.க. அரசு தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்க இதுபோன்ற இல்லாத பிரச்னைகளை எழுப்புவதாகச் சொல்கிறார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி.
“முதலில் மொழிப் பிரச்னையை எழுப்பிப் பார்த்தார்கள். அதில் ஏதும் நடக்கவில்லை. அடுத்ததாக இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பகிர்ந்தளித்தால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என பிரதமர் மோதி 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே பேசியிருக்கிறார். அந்தப் பேச்சிலேயே அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திவிட்டார்” என்கிறார் நாராயணன் திருப்பதி.
நாராயணன் திருப்பதி சுட்டிக்காட்டும் பேச்சு, 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிஜாமாபாதில் பிரதமர் மோதியால் பேசப்பட்டது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துவதற்காக Jitni aabadi, utna haq (எவ்வளவு மக்கள் வலுவோ அவ்வளவு உரிமை) என்று குறிப்பிட்டார்.
இதைச் சுட்டிக்காட்டி தெலங்கானாவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “நாடு இப்போது தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் பேசுகிறது. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் தென் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. ஆனால் மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உரிமைகள் என்ற காங்கிரஸின் புதிய யோசனை செயல்படுத்தப்பட்டால் தென் மாநிலங்கள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். தென்னிந்தியா 100 மக்களவை இடங்களை இழக்கும். தென்னிந்தியா இதை ஏற்குமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
“ஆகவே, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள தொகுதிகளை அடிப்படையாக வைத்து, அதே விகிதத்தில்தான் உயர்த்தப்படும். அதைத்தான் உள்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார். ஆனால் தேவையில்லாத அச்சத்தைக் கிளப்புகிறார்கள்” என்கிறார் நாராயணன் திருப்பதி.
இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?
பட மூலாதாரம், Getty Images
இப்போதைக்கு இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வே கிடையாது என்கிறார் North vs South: India’s Great Divide நூலின் ஆசிரியரான ஆர்.எஸ். நீலகண்டன்.
“தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் அப்படியே வைத்திருந்தால், வட மாநிலங்களைப் பார்த்து நீங்கள் செய்த தவறுக்கான பலனை அனுபவியுங்கள் என்று சொல்வதைப் போலத்தான் இருக்கும். தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் அதிகரித்தால், தென் மாநிலங்களின் பிரநிதிதித்துவம் குறையும். ஆகவே, இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வே கிடையாது” என்கிறார் நீலகண்டன்.
மாறாக இந்த விவகாரத்தை வேறு விதமாக அணுகலாம் என்று கூறும் அவர், “மத்திய அரசின் அதிகாரங்களை வெகுவாகக் குறைக்க வேண்டும். பெரும்பாலான முடிவுகள் மாநில மட்டத்திலும் பஞ்சாயத்து மட்டத்திலும் எடுக்கும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கான முக்கியத்துவம் குறையும். இப்போதைய சூழலில் அப்படிச் செய்வதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்” என்கிறார்.
மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநரான கோபால கிருஷ்ணகாந்தி Delimitation fallout needs no political forecasting என்ற தனது கட்டுரையில், ஒரு தீர்வை முன்வைக்கிறார். அதாவது, எல்லா மாநிலங்களிலும் மக்கள் தொகை நிலைபெறும் வரை, தொகுதி எண்ணிக்கையை அதிகரிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்.
அதற்குப் பிறகு அதிகரிக்கும்போது, மக்கள் தொகை மட்டுமல்லாமல், வேறு சில கணக்கீடுகளையும் உள்ளடக்கி தொகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்கிறார் அவர்.
ஆனால், மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதி வரையறை செய்யப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்வதால், இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியிருக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு