தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஸ்டாலின் நடத்திய கூட்டம் – தலைவர்கள் பேசியது என்ன?
நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமையான இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தை கண்டித்து தமிழ்நாடு பாஜக போராட்டம் நடத்தியது. என்ன நடந்தது இந்தக் கூட்டத்தில்? சற்று விரிவாக பார்க்கலாம்.
மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மொத்தம் 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அந்த மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவம் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக முன்னர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இக்கூட்டத்துக்காக சென்னை வந்த தலைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்கள் அடங்கிய பரிசுப்பெட்டி வழங்கப்பட்டது.
.ஒவ்வொரு தலைவர்களின் மேஜையின் மீதும் அவர்களின் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தது சமூக ஊடகங்களில் கவனம் பெற்றது.
கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவின் கூட்டாட்சி தன்மைக்கு சோதனை வந்திருப்பதாகவும், அதைக் காப்பதற்கான முக்கியமான நாள் இது என்று குறிப்பிட்டார். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை ஏற்கக் கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மணிப்பூர் வன்முறையை குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் அரசியல் வலிமை இல்லாததால் நாட்டின் கவனத்தை அந்த மாநிலத்தால் ஈர்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தேசிய நலனை முன்னிறுத்தி தேசிய மக்கள்தொகைக் கொள்கையை நடைமுறைப்படுத்திய மாநிலங்கள், ஏற்கனவே வரி பங்கு குறைவு என்ற பெயரில் தண்டிக்கப்படுவதாகவும், தற்போது நாடாளுமன்ற பிரதிநித்துவம் குறைந்தால் முன்னெப்போதும் இல்லாத சூழலை சந்திக்க நேரிடும் என கூறினார்.
மேலும், பாஜக தலைமையிலான அரசு எந்த ஆலோசனையும் இல்லாமல் இதைச் செய்துவருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசும் போது இந்திரா காந்தி, வாஜ்பேயி அரசு செய்தது போல நரேந்திர மோதி அரசும் மக்களவை இடங்களை அதிகரிக்காமல் மாநிலங்களுக்குள் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு தென்மாநிலங்களை கடுமையாக பாதிக்கும் எனக் குறிப்பிட்ட ரேவந்த் ரெட்டி, உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் நாட்டின் பிற பகுதிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என கடுமையாக பேசினார்.
கர்நாடக துணை முதலமைச்சர் டிகே.சிவக்குமார் பேசும் போது, பாஜக ஆட்சியில் கூட்டாட்சி ஜனநாயகத்தின் தூண்கள் செங்கல் செங்கலாக தகர்க்கப்படுவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசும் போது இந்த விவகாரம் வடக்கு, தெற்கு இடையிலான போர் அல்ல. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்ற அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டமே. ஒன்றுபடுவோம், கோரிக்கை வைப்போம் என்றார்.
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் பேசும் போது, தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலம் மட்டுமல்லாமல் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் தொகுதி மறுசீரமைப்பால் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும் என்றார். மேலும், தங்களுக்கு சாதகமான மாநிலங்களின் பிரதிநித்துவத்தை அதிகரிப்பதுதான் பாஜகவின் திட்டம் என்றும் குற்றம்சாட்டினார்.
இவர்கள் தவிர, மற்ற மாநிலங்களின் பிரதிநிதிகளும் தங்களது கருத்தை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் இந்தப் போராட்டம் நடந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார். போராட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, அண்டை மாநிலங்களிடம் தமிழக மக்கள் உரிமையை திமுக விட்டுக்கொடுத்துள்ளதாகவும், தனது அரசியல் நலனுக்காக இது போன்ற கூட்டத்தை நடத்துவதாக குற்றம்சாட்டினார்.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உள்ளிட்ட எந்த தென்மாநிலத்துக்கும் பிரச்னை வராது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் பங்கேற்கவில்லை. எனினும், நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்ய வலியுறுத்தி பிரதமர் மோதிக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு