நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து திமுக எம்.பி.க்கள் குழு வெளி மாநிலங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள எம்.பி.க்கள் மற்றும் கட்சிகளிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் நேற்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நாம் நடத்திய ஒரேயொரு அனைத்துக் கட்சிக் கூட்டம் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மறுசீரமைப்பால் பாதிக்கப்படவுள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கும், அந்த மாநில முதல்வர்களுக்கும் நான் கடிதம் அனுப்பியுள்ளேன். நமது கருத்தை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. கொண்ட குழு நேரில் சென்று விளக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் நாம் முன்னெடுத்திருப்பது ஒரு தொடக்கம்தான். நம் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, நிதிப் பகிர்வு, மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிப்பு என பல்வேறு வழிகளில் பாஜக நம்மை வஞ்சிக்கிறது. இந்தப் பிரச்சினைகளில் தேசிய கவனத்தை ஈர்க்க எம்.பி.க்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்பது நம் மாநில பிரச்சினை மட்டுமல்ல. இது பல்வேறு மாநிலங்களுக்கான பிரச்சினை. எனவே, தொகுதி மறுசீரமைப்பைத் தடுக்க திமுக எம்.பி.க்கள் அனைத்து எம்.பி.க்களையும் ஒருங்கிணைத்து டெல்லியில் குரல் கொடுக்க வேண்டும்.
இந்தி திணிப்பைத்தான் நாம் எதிர்க்கிறோம். இந்தி மொழியையோ, இந்தி பேசும் மக்களையோ எதிர்க்கவில்லை. இந்தி உள்பட எந்த மொழி குறித்தும் வீணான விமர்சனங்கள் செய்யக்கூடாது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையால் ஏற்பட்ட நன்மைகளை எடுத்துக் கூறுங்கள். இந்தி படிக்காவிட்டால் நிதி தரமாட்டோம் என்பது சர்வாதிகாரம் இல்லையா எனும் நமது நியாயத்தை கேள்வியாக வைக்க வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு மாநில உரிமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும். அந்த வகையில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு: சென்னையில் அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநில உரிமையை நிலைநாட்ட, தென்மாநில எம்.பி.க்கள் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதென முடிவெடுக்கப்பட்டது. இதற்காக பிற மாநில கட்சி எம்.பி.க்களை நேரில் அழைப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி எம்.பி., கேரளாவுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு, ஒடிசாவுக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.