படக்குறிப்பு, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை குறிக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய வரைபடம்
வலுவிழந்த திட்வா புயலில் எஞ்சியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரையில் தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்தது. வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரை மற்றும் அதையொட்டிய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து, காலை 5.30 மணி நிலவரப்படி அதே இடத்தில் நிலை கொண்டிருந்தது.” என்கிறது வானிலை ஆய்வு மைய அறிக்கை.
அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து படிப்படியாக வலு குறைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அடுத்த 24 மணி நேரத்தில் மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வேகமான காற்று வீசக்கூடும்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே மணிக்கு 35-45 கிமீ வேகத்தில் வேகமான காற்று வீசக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, டிசம்பர் இரண்டாம் தேதி இரவு 11.30 மணியளவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகளில் மணிக்கு35-45 கிமீ வேகத்தில் (அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகம்) வீசி வருகிறது. டிசம்பர் 3 காலை இதன் வேகம் மணிக்கு 30-40 கிமீ வேகத்திற்குக் குறையக்கூடும். அவ்வப்போது மணிக்கு 50 கிமீ வேகம் வரை வீசலாம்.
இந்தப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. மீனவர்கள் டிசம்பர் 3-ஆம் தேதி நண்பகல் வரை கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலுக்கு ஏற்கனவே சென்றவர்கள் டிசம்பர் 3-ஆம் தேதி நண்பகல் வரை தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரை ஆகிய பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டது.
புயல் எச்சரிக்கைக் கூண்டு
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.