• Thu. Oct 16th, 2025

24×7 Live News

Apdin News

தொடர் மழையால் குறுவை பயிர் பாதிப்பு: நிவாரணம் வழங்க இந்திய கம்யூ. வலியுறுத்தல் | Continuous Rains Kuruvai Crops Damage: India Communist Party urges Provide Relief

Byadmin

Oct 16, 2025


சென்னை: அறுவடை செய்யப்பட்ட நெல் மழையில் நனைந்து, முளைவிட்டு சேதமடைந்து விட்டதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் மேற்கு பருவமழை நிறைவுக்கு முன்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. வழக்கத்துக்கும் கூடுதலான மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக காவிரி டெல்டா பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குறுவை அறுவடை கடுமையாக பாதித்து வருகிறது. வழக்கத்தை விட கூடுதலான பரப்பளவில் செய்யப்பட்ட குருவை சாகுபடி, நல்ல விளைச்சலை தந்திருந்தது. அறுவடை செய்யப்பட்ட நெல் முழுவதும் சாலைகளில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. நேரடி கொள்முதல் மையங்களில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மூட்டைகள் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நெல் மூட்டைகளும் நனைந்து கொண்டிருக்கின்றன. கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ரயில் மூலம் வெளியே எடுத்துச் செல்ல போது மான லாரிகள் கிடைக்காத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும், அரசும் பெரும் இழப்பை சந்திக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது மாவட்டங்களில் இருந்து போதுமான பொருள் போக்குவரத்து வாகனங்களை வரவழைத்து, கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை பாதுகாப் பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும். அறுவடை செய்யப்பட்ட நெல் மழையில் நனைந்து, முளை விட்டு சேதமடைந்து விட்டதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது” என்று வீரபாண்டியன் கூறியுள்ளார்.



By admin