புதுடெல்லி: தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல், வரலாற்று சின்னங்கள், கட்டிடங்களை பாதுகாக்க புதிய ஆணையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றின் பராமரிப்புக்காக, பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கவும் முதல்வர் ஸ்டாலின் அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் இருந்துள்ளது என கடந்த ஜனவரியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியதாகவும் பெருமிதமாக தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தொல்லியல், வரலாறு மற்றும் பாரம்பரியச் சின்னங்களை பாதுகாப்பதற்காக புதிதாக ஒரு ஆணையத்தை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதில், பழங்காலச் சிலைகள், பாரம்பரியக் கட்டிடங்கள், அரசர்கள் கால ஆயுதங்கள் மற்றும் பாண்டங்கள் உள்ளிட்டவற்றின் தகவல்களை பதிவு செய்து ஆவணப்படுத்த உள்ளனர். கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ மற்றும் பவுத்தம் உள்ளிட்ட ஆலயங்கள் பற்றிய தகவலும் இந்த பதிவேடுகளில் இடம்பெற உள்ளன.
இவை அனைத்தையும் தமிழ்நாடு வருவாய் துறையின் கீழ் பதிவு செய்து அதை பாதுகாக்கும் பொறுப்பை புதிதாக அமையும் ஆணையம் செய்யும்படி அமைக்கப்பட உள்ளது. இதற்காக, அடுத்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒரு மசோதாவை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பணியில் இந்தியா முழுவதிலும் உள்ள தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வட மாநிலங்களில் உள்ள தமிழர்களான தொல்லியல் மற்றும் வரலாற்றின் மூத்த பேராசிரியர்கள் வட்டாரம் ’இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் கூறும்போது, “‘இதற்கான சட்ட முன்வடிவுகள், செயல்பாட்டு வரைவுகள் தயாரிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
இதில் பதிவு செய்பவை எங்கு உள்ளதோ அங்கேயே இருக்கும். அவற்றை அரசு கையகப்படுத்தாது. ஆனால், அவற்றின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை ஆணையம் செய்யும். இவற்றுக்கு சேதாரம் அல்லது திருட்டு போன்ற சட்டவிரோதப் பாதிப்பு ஏற்பட்டால், ஆணையம் தலையிட்டு நடவடிக்கைக்கு உத்தரவிடும்” என்றனர்.
இதுபோன்ற மாநில அளவிலான ஆணையம் நாட்டிலேயே மேற்கு வங்கத்தில் மட்டும்தான் உள்ளது. நகர அளவில் மகராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் செயல்படுகிறது. இந்த ஆணையங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ள தொல்லியல், வரலாற்றுச் சின்னங்கள், கட்டிடங்களைய பாதுகாத்து வருகின்றன. ஏனெனில், இந்த இரு இடங்களிலும் ஆங்கிலேயர் காலத்தின் கட்டிடங்கள் அதிகம் உள்ளன.
இதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டிலும் ஒரு புதிய ஆணையம் அமைக்கப்பட உள்ளது. எனினும், மும்பை மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் ஆணையங்களை விட சில கூடுதல் அம்சங்கள் புதிய ஆணையத்தில் இடம்பெற உள்ளன. இதில், அருங்காட்சியகங்களின் சிறிய பொருட்கள் முதல் கோயில்கள், புனிதத் தலங்கள் மற்றும் வக்பு வாரியங்களின் கீழ் உள்ள வரலாற்று சொத்துக்களும் பதிவு செய்யப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசு சார்பில் புதிய ஆணையம் அமைக்கப்பட்ட பின், அதில் பதிவாகுபவற்றை பராமரித்து, பாதுகாக்க நிதி ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் சட்டப்பேரவையில் தாக்கலாகும் பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.