சென்னை: தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற அக்கறை செலுத்தவில்லை என்றால் போராடுவதை தவிர வழியில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் மறைந்த சீதாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவுதின சொற்பொழிவு சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதற்கு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை வகித்து பேசியதாவது: மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க நடத்தப்படும் போராட்டம் வெல்ல வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடன்பட்டு நிற்கிறது.
அந்த போராட்டம் வெல்வதற்கான முழு ஆதரவையும் கட்சி வழங்கும். அதேநேரத்தில் தமிழக அரசு, தமிழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உரிய அக்கறை செலுத்தவில்லை என்றால் அதை எதிர்த்து போராடுவதை தவிர, அரசின் தொழிலாளர் விரோத அணுகுமுறையை கண்டிப்பதை தவிர வேறுவழியில்லை.
மாநில அரசின் உரிமைக்கான போராட்டம் வெற்றியடைய வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளும் வெற்றிபெற வேண்டியது முக்கியம். தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 30 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியபோது உயர் நீதிமன்றத்தை பயன்படுத்தி, அப்புறப்படுத்தப்பட்டனர். தாம்பரத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத்தவர்கள் தங்கும் வசதியின்றி தவித்து வருகின்றனர்.
எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கொடுமையான சுரண்டல் ஒப்பந்த முறை தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி மாநில அரசு கவலைப்பட வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். அதைவிடுத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கே அதிக காலம் எடுத்துக்கொண்டால் அது நியாயமான அணுகுமுறையாக இருக்காது. அதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.