சென்னை: தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் 100 பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மானியத்துடன் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, அமைப்பு சாரா பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு ஆட்டோக்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தற்போது தொழிலாளர் நலத்துறை சார்பில் 20 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆண்களுக்கு நிகராக பெண்களும் முன்னேற வேண்டும் என ஏராளமான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.மகளிர் விடியல் பயணம் திட்டம், புதுமை பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெண்களின் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களை முதல்வர் உருவாக்கி கொடுத்து கொண்டிருக்கிறார்.
அந்தவகையில், தொழிலாளர் நலத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2023-ம் ஆண்டு 500 ஆட்டோக்களும், 2024-ம் ஆண்டு ஆயிரம் ஆட்டோக்களும் வழங்கப்பட்டன. இந்தாண்டு முதல்கட்டமாக 100 மகளிருக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.
விரைவில் 1000 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கப்படும். இன்று இந்தியாவிலேயே மகளிர், திருநங்கைகளை ஆட்டோ ஓட்டுநர்களாக பயிற்சி கொடுத்து, நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்து அவர்களுக்கு மானியத்துடன் ஆட்டோ வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான்.
அந்தவகையில், தொழிலாளர் நலன் காப்பதில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், “தமிழகம் முழுவதும் இதுவரை 329 இடங்களில் மெகா வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
அதன் மூலம் 2.70 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புபெற்றுள்ளனர். தொழிலாளர் நல வாரியத்தில் 49 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். வாரியத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2,832 கோடியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது,”என்றார். இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலர் கொ.வீரராகவராவ், ஆணையர் ராமன், துணை மேயர் மகேஷ்குமார் உளளிட்டோர் பங்கேற்றனர்.