1
பெரு நிறுவனங்களில் கிரிக்கட் வீரர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடனேயே பல்வேறு பிரிவுகளில் வர்த்தக நிவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை வர்த்தக கிரிக்கெட் சங்கம் (MCA) நடத்திவருவதாக சங்கத்தின் தலைவர் மஹேஷ் டி அல்விஸ் தெரிவித்தார்.
CBL மஞ்சி கிண்ணத்துக்கான வர்த்தக கிரிக்கெட் சங்க டி பிரிவு போட்டி தொடர்பாக லெஜெண்ட்ஸ் கேட்போர்கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் ‘வீரகேசரி ஒன்லைன்’ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
‘வர்த்தக கிரிக்கெட் சங்கம் நடத்தும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் சம்பியனாகும் மற்றும் உப சம்பயினாகும் அணிகளுக்கும் சிறந்த வீரர்கள், இறுதி ஆட்ட நாயகன், தொடர்நாயகன் ஆகியோருக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படும். ஆனால், பணப்பரிசுகள் வழங்குவது மட்டும் எமது நோக்கம் அல்ல. பாடசாலை கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்துவோருக்கு தொழில்வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதே எமது பிரதான நோக்கம் ஆகும். மேலும் டி பிரிவு போட்டிகளில் கிரிக்கெட்டின் தரத்தைப் பேணும் வகையில் ஒவ்வொரு அணியிலும் முதல் தர கிரிக்கெட் வீரர்கள் நால்வர் விளையாடுவதற்கு எமது போட்டி விதிகள் அனுமதிக்கிறது’ எனவும் அவர் கூறினார்.
சிபிஎல் மஞ்சி கிண்ண டி பிரிவு கிரிக்கெட் போட்டிக்கு 6ஆவது வருடமாக அனுசரணை வழங்கும் சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட் நிறுவனத்திற்கு மஹேஷ் டி அல்விஸ் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
லீக் மற்றும் நொக் அவுட் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் MCA ‘D’ பிரிவு கிரிக்கெட் போட்டியில் 14 வர்த்தக நிறுவன அணிகள் மூன்று குழுக்களில் போட்டியிடுகின்றன.
2025 அக்டோபர் 18ஆம் திகதி ஆரம்பமான இந்த சுற்றுப்போட்டியில் ஏ குழுவில் செலிங்கோ ஜெனரல் இன்சூரன்ஸ், பீப்ள்ஸ் லீசிங், சென்ட்ரல் ஃபைனான்ஸ், கலம்போ டொக்யார்ட், இங்க்லிஷ் டீ ஷொப் ஆகிய 5 அணிகளும்
பி குழுவில் செலான் வங்கி, டயலொக் ஆசிஆட்டா, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, மெல்வயர் ரோலிங் ஆகிய நான்கு அணிகளும்
சி குழுவில் அபான்ஸ் குழுமம், ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த், ரெவோகெயார் சொலூஷன்ஸ், பவர் ஹேண்ட் பிளான்டேஷன்ஸ், யோக்கோஹாமா TWS ஆகிய ஐந்து அணிகளும் போட்டியிடுகின்றன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் மூன்று அணிகள் நொக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும்.
இந்த ஒன்பது அணிகளும் புள்ளிகள் மற்றும் நிகர ஓட்ட விகிதம் (NRR) அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படும்.
தரவரிசையில் 8ஆவது, 9ஆவது இடங்களைப் பெறும் அணிகள் பிளே ஆவ் போட்டியில் மோதும். அப் போட்டியில் வெற்றிபெறும் அணி மற்றைய 7 அணிகளுடன் கால் இறுதிச் சுற்றில் இணையும்.
லீக் போட்டிகள் யாவும் செயற்கை ஆடுகளங்களில் (Matting) நடத்தப்படுவதுடன் நொக் அவுட் போட்டிகள் புற்தரை (Turf) ஆடுகளங்களில் நடத்தப்படும்.
லீக் சுற்றில் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், தொடர் நாயகன் ஆகிய விருதுகளும் நொக் அவுட் சுற்றில் இறுதி ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்படும்.


புதிய விடயங்கள்
கடந்த வருடம் வரை 40 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்தப் போட்டி இந்த வருடத்திலிருந்து 50 ஓவர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வர்ண ஆடைகளும் வெள்ளை பந்தும் அறிமுகமாகிறது.
இந்தப் பிரிவுக்கான இறுதிப் போட்டி முதல் தடவையாக CCC மைதானத்தில் மின்னொளியில் 2025 டிசம்பர் 14ஆம் திகதி நடைபெறும்.
இந்த சுற்றுப் போட்டிக்கான அனுசரணை உதவுத் தொகைக்குரிய மாதிரி ஆவணத்தை சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட் (சிபிஎல் குழுமம்) சந்தைப்படுத்தல் முகாமையாளர் மஹேஷ் அநுராதவிடம் இருந்து வர்த்தக கிரிக்கெட் சங்கத் தலைவர் மஹேஷ் டி அல்விஸ் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் சிபிஎல் நிறுவனத்தின் வகையின முகாமையாளர் ஜயசன்க பெரேரா, வர்த்தக கிரிக்கெட் சங்க பொதுச் செயலாளர் ரொஹான் சோமவன்ச, உதவிப் பொருளாளர் மற்றும் அனுசரணைக் குழுத் தலைவர் ஹசித்த தசநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.