பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
” நான் விரும்பும் வரை விளையாடுவதைத்தான் சிஎஸ்கே அணி விரும்பும். நான் வீல் சேரில் இருந்தால்கூட, கவலைப்படாதிங்க உங்களால் விளையாட முடியும் என்று என்னை சிஎஸ்கே அணி அழைத்துச் சென்றுவிடுவார்கள். ஏனென்றால், அது என்னுடைய அணி. “
இந்த நெகிழ்ச்சியான வார்த்தைகள் மகேந்திர சிங் தோனி, தனக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையிலான நெருக்கத்தை, உறவை விளக்கிப் பேசியது.
சிஎஸ்கேவும் தோனியும்
பட மூலாதாரம், Getty Images
2008ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அறிமுகமான காலத்தில் இருந்து, 2 ஆண்டுகள் தடைகாலத்துக்குப்பின்பும் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக செயல்பட்டு 5 கோப்பைகளை வென்று கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி.
உடல்நிலை, வயது காரணமாக இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நோக்கில் கேப்டன்ஷிப்பை கடந்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சிஎஸ்கே நிர்வாகம், தோனியும் சேர்ந்து மாற்றினர்.
சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருந்தகாலத்தில் அந்த அணியை 11 முறை அரையிறுதிக்கு தோனி அழைத்துச் சென்றுள்ளார், 5 முறை 2வது இடம் பிடித்துள்ளது. தோனி கேப்டனாக இருந்தவரை சிஎஸ்கே லீக் சுற்றோடு 2 முறைதான் வெளியேறியிருக்கிறது.
சிஎஸ்கே அணியை தோனி அந்த அளவு விரும்பினார், காதலித்தார், அந்த அணியை பார்த்துப் பார்த்து செதுக்கினார், வீரர்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார் என்று சொல்லலாம்.
43 வயது இளைஞராக தோனி
43 வயதிலும் தோனி இன்னும் உத்வேகத்தோடு, புத்துணர்சியுடன் உடற்தகுதியை பராமரித்து விக்கெட் கீப்பிங் செய்வது உண்மையில் பிரமிக்க வைக்கிறது. இந்த வயதிலும் உலகக் கிரிக்கெட்டில் அதிவேகத்தில் விக்கெட் கீப்பிங் யாரும் செய்ய முடியாத அளவுக்கு தோனி களத்தில் ஜொலிக்கிறார். ஆனால் பேட்டிங் என்று வரும்போது மட்டும் 9-வது வீரராகவும், 7-வது வீரராகவும் தோனி களமிறங்கியது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
9வது வீரராக தோனி
இந்த விஷயம்தான் இன்று சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஏனென்றால் இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் விளையாடி 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. ஆனால், ஆர்சிபி அணிக்கு எதிராக சென்னையில் நடந்த ஆட்டத்தில் 9வது வீரராக தோனி களமிறங்கி தோல்விக்கு காரணமாகியது கடும் விமர்சனங்களை கிளப்பியது.
குவஹாட்டியில் நேற்று நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7வது வீரராக தோனி களம் இறங்கினார். முன்புபோல் விளையாட அவரது மனம் விரும்பினாலும், உடல் ஒத்துழைக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சிஎஸ்கே பயிற்சியாளர் விளக்கம்
பட மூலாதாரம், Getty Images
தோனி 9-வது வீரராக களமிறங்கியது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் அளித்த விளக்கத்தில் ” தோனியின் உடலும் முழங்கால்களும் முன்பு போல் இல்லை. அவரால் நன்றாக நகர முடிகிறது. ஆனால், அவரால் தொடர்ந்து 10 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்ய முடியாது. எனவே அவர் நமக்கு என்ன கொடுக்க முடியும் என்பதை அன்றைய தினம் மதிப்பிடுவார். ஆட்டம் சமநிலையில் இருந்தால், அவர் சற்று முன்னதாகவே செல்வார். மற்ற சமயங்களில் அவர் மற்ற வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார்.
அதற்காக, 43 வயதான தோனியை அணியில் தொடர்ந்து தக்க வைப்பதற்கான வழிகளை சிஎஸ்கே நிர்வாகம் கண்டுபிடித்து வருகிறது என்று அர்த்தமல்ல. கடந்த ஆண்டும் நான் சொன்னேன், அவர் எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்க ஒரு வீரர். தலைமைத்துவம் மற்றும் விக்கெட் கீப்பிங் திறன் கொண்ட அவர் சிறப்பானவர். 10 ஓவர்கள் களத்தில் பேட்டிங் செய்வது என்பதை அவர் ஒருபோதும் செய்ததில்லை. சுமார் 13-14 ஓவர்களில் ஆட்டத்தின் நிலைமையைப் பொருத்து அவர் களமிறங்க விரும்புகிறார்” என்று பிளமிங் தெரிவித்தார்.
20 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்யமுடியுமா
ஆனால், 20 ஓவர்கள் களத்தில் விக்கெட் கீப்பிங்கை நின்றுகொண்டே செய்யும் தோனியால், சிஎஸ்கேஅணிக்கு தேவைப்படும் நேரத்தில் “ஆங்கர் ரோல்” எடுத்து பேட் செய்யவோ, அல்லது “பிஞ்ச் ஹிட்டர்” போல் அதிரடியாக ஆடிக்கொடுக்கவோ முடியாதா? 20 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்த தோனியால் 4வது 5வது வீரராக களமிறங்கி அணிக்காக 5 ஓவர்கள் விளையாடமாட்டாரா? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆர்சிபி அணிக்கு எதிராக சென்னையில் 17 ஆண்டுகளுக்குப்பின் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததற்கான காரணங்களைப் பட்டியலிட்டால் நிச்சயமாக தோனியும் ஒரு காரணமாக இருப்பார் என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிஎஸ்கே அணி இக்கட்டான கட்டத்தில் இருந்தபோதுகூட 13 அல்லது 14வது ஓவரிலேயே களமிறங்கியிருக்க வேண்டிய தோனி, தோல்வி என உறுதி செய்தவுடன் 9-வது வீரராக களமிறங்கியதை சிஎஸ்கே ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
பட மூலாதாரம், Getty Images
தோனி குறித்த பிரபலங்கள் விமர்சனம்
சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்ல கிரிக்கெட் பிரபலங்களும் தோனி 9-வது வரிசையில் களமிறங்கியதை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்ஸன் அளித்த பேட்டியில் ” சிஎஸ்கே அணி தோனியை விரைவாக களமிறக்கி இருந்தால், அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். ரசிகர்களும் தோனி விரைவாக களமிறங்கி ஆடியதை பார்த்திருப்பார்கள்” எனத் தெரிவித்தார்
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் எக்ஸ் பதிவில் கூறுகையில் ” 9வது வரிசையில் தோனி களமிறங்குவதை ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன். இது அணிக்கு உகந்தது அல்ல” எனத் தெரிவித்தார்.
சிஎஸ்கே முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறுகையில் ” சேப்பாக்கத்தில் சிஎஸ்கே கோட்டையில் ஆர்சிபி வென்றுள்ளது முக்கியமானது. அந்த அணிக்கு இந்த சீசனில் பெரிய உத்வேமாக இருக்கும். விரைவாக தோனி களத்துக்கு வந்திருந்தால், சிஎஸ்கே நிகர ரன்ரேட்டாவது உயர்ந்திருக்கும்” எனத் தெரிவித்தார்.
தோனியை கேள்வி கேட்க அணியில் யாருக்கும் தில் இல்லை என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி பேசியுள்ளார். அவர் பேசுகையில் ” சிஎஸ்கே பயிற்சியாளர்கள், தோனியை முன்வரிசையில் களமிறங்க வேண்டும் என அறிவுறுத்தி களமிறக்க வைக்க தைரியமும், துணிச்சலும் இல்லை. தோனி முடிவு செய்துவிட்டால் அதுதான் நடக்கும்” எனத் தெரிவித்தார்.
‘தோனிக்கு பதிலாக இளைஞருக்கு வாய்ப்பு தரலாம்’
முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக், ” தோனி வழக்கமாக களமிறங்கும்போது 16 ஓவர்கள் வீசப்பட்டிருக்கும். வழக்கமாக 19 அல்லது 20வது ஓவரில்தான் களமிறங்குவார். இந்த முறை தோனி விரைவாக களமிறங்கிவிட்டாரா அல்லது பேட்டர்கள் வேகமாக விக்கெட்டை இழந்துவிட்டார்களா?. தோனி நன்றாக விளையாடினாலும் தன்னை ப்ளேயிங் லெவனில் இருந்து விடுவித்து இளைஞர் ஒருவருக்கு வாய்ப்பைத் தரலாம்” என்று பேசியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
ரசிகர்கள் ஆதங்கம்
தோனியால் 20 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்யும்போது, ஏன் சில ஓவர்கள் பேட் செய்ய முடியவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்தில் எழுந்துள்ளது.
ஐபிஎல் சீசனில் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் அதிகபட்சமாக 45 வயதுவரை விளையாடியுள்ளார், இந்திய அளவில் பிரவீண் மாம்ரே 41 வயதுவரை ஆடியுள்ளார். ஆனால், இந்திய அளவில் ஐபிஎல் தொடரில் அதிகமான வயதில் ஆடும் வீரராக 43 வயதான தோனி உள்ளார்
சிஎஸ்கே அணியில் பெஞ்சில் கடந்த பல சீசன்களாக இளம் வீரர்கள் பலர் இருந்தும் அதில் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சிலருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Getty Images
அதேசமயம், தோனி அணியில் இருந்தாலே சக வீரர்களுக்கு உற்சாகம், புத்துணர்ச்சி கிடைக்கும். சிஎஸ்கே போட்டி என்றால் அணியின் ஆட்டத்தை பார்ப்ப வரும் ரசிகர்கள் கூட்டத்தைவிட, தோனியின் பேட்டிங்கையும், விக்கெட் கீப்பிங்கை பார்க்க வரும் ரசிகர்கள்தான் அதிகம்.
தோனி இன்னும் சிறந்த பேட்டர்தான். அவரால் எந்தவரிசையிலும் களமிறங்கி ஆடமுடியும். ஆனால், அவரின் மனம் ஒத்துழைக்கும் வகையில் உடல் ஒத்துழைக்க மறுக்கிறதா அல்லது நிர்வாகம் மறுக்கிறதா என்பது புரியாத புதிராக இருக்கிறது.
நீண்டநேரம் களத்தில் பேட் செய்ய முடியாவிட்டாலும், சில ஓவர்கள் வந்து சென்றாலே தோனியால் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
முழங்கால் அறுவை சிகிச்சைக்குப்பின் தோனி பேட் செய்தபோது, அவரால் பெரிய இன்னிங்ஸ் ஆடமுடியாவிட்டாலும், அவரின் ஸ்ட்ரைக் ரேட் 200க்கு மேல்தான் இருந்தது. சிஎஸ்கே அணியின் பிராண்ட், நட்சத்திர வீரர், சிஎஸ்கேயின் முகம் எல்லாமே தோனிதான் என்றாலும், அவரால் இன்னும் எத்தனை காலத்துக்கு ஆடமுடியும் என்பதுதான் ரசிகர்கள் வைக்கும் கேள்வியாக இருக்கிறது.
தோனி இருக்கும்போது அஸ்வினா?
தோனி 9-வது வரிசையில் களமிறங்கியது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய எம்ஆர்எஃப் அணியின் பயிற்சியாளர் எட்வின் கென்னடி, ” ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கு அதிக ரன்கள் தேவைப்பட்டது. இந்த சூழலில் தோனி இருக்கும்போது அஸ்வினை எப்படி களமிறக்கினீர்கள். தோனியால் ஆடுகளத்துக்கு ஏற்றால்போல் ஆடமுடியும். சச்சின், சேவாக்கை எடுத்துக்கொள்ளுங்கள் கடைசிவரை தொடக்க ஆட்டக்காரராகத்தான் களமிறங்கினார்கள், ஐபிஎல் வந்தபின்பும் தொடக்க வீரராகவே விளையாடினார்கள். அப்படி தோனியும் களமிறங்கலாமே, தோனியும் ஒரு கட்டத்தில் முன்வரிசையில் களமிறங்கியவர்தானே?” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
”என்னைப் பொருத்தவரை, தோனிதான் சிஎஸ்கே, சிஎஸ்கேதான் தோனி. தோனி இல்லாத சிஎஸ்கே அணியைப் பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லை. ஒருவேளை ஆர்சிபிக்கு எதிராக தோனி முன்கூட்டியே களமிறங்கி ஆட்டமிழந்திருந்தால் ரசிகர்கள் கூட்டம் கலைந்திருக்கும். தோனி என்பவர் சிஎஸ்கேயின் ஹீரோ. அவர் இல்லாத அணிக்கு மதிப்பில்லை, பிராண்ட் இல்லை என்பது தெரிந்தது. தோனிக்காகத்தான் ரசிகர்கள் பலரும் வருகிறார்கள். தோனியால் முன்வரிசை, நடுவரிசை என எந்த இடத்திலும் பேட் செய்ய முடியும், சிறப்பாக ஆட முடியும்.” என்றார் எட்வின் கென்னடி.
மேலும், ”வேகப்பந்துவீச்சில் தோனிக்கு ஏதாவது காயம் ஏற்பட்டு விளையாடமுடியாவிட்டால் என்ன செய்வது, ரசிகர்கள் போட்டியைப் பார்க்கவருவார்களா என்ற அச்சம்தான் தோனியை கடைசியில் களமிறக்குகிறார்கள்.” என்றார் அவர்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.