சென்னை: மாணவியை தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியை ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, எஸ்.எஸ்.கோட்டை திருமாநகரைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வி. இவரது மகள், எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக சித்ரா என்பவர் பணியாற்றுகிறார்.
இந்நிலையில், பாண்டிசெல்வியின் மகள் வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக்கூறி ஒருநாள் 200 முறையும், மறுநாள் 400 முறையும் தோப்புக்கரணம் போட வைத்துள்ளார் ஆசிரியர் சித்ரா.
இதில் களைப்படைந்து கீழே விழுந்த சிறுமியை, பள்ளி தோழிகள் சைக்கிளில் அழைத்துவந்து வீட்டில் விட்டுச் சென்றனர். தொடர்ந்து சிறுமியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், பலமுறை தோப்புக்கரணம் போட்டதால் உள் உறுப்புகள் சேதம் அடைந்துள்ளன என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆசிரியர் சித்ராவின் மனிதாபிமானற்ற செயலால் தனது மகள் உடல் மற்றும் மனரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் பாண்டிசெல்வி புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், “இந்த புகார் மனு மீது தனது தரப்பு விளக்கத்தை அளிக்க ஆசிரியர் சித்ராவுக்கு பலமுறை வாய்ப்பு அளித்தும், அவர் ஆணையத்தில் ஆஜராகவில்லை. பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை.
ஆணையம் வசம் இருக்கும் ஆவணங்களின்படி, ஆசிரியை சித்ரா மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. எனவே, மனுதாரர் பாண்டிசெல்விக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். அதை ஆசிரியை சித்ராவிடம் இருந்து தமிழக அரசு வசூலித்துக் கொள்ளலாம்” என உத்தரவிட்டார்.