அமெரிக்க விஞ்ஞானிகள் முதல் முறையாக மனிதர்களின் தோல் செல்களில் இருந்து டிஎன்ஏ எடுத்து, அதை விந்தணுக்களால் செறிவூட்டி, கருவை உருவாக்கியுள்ளனர்.
இந்த முறையால், உடலில் உள்ள எந்த செல்லையும் பயன்படுத்தி ஒரு குழந்தையை உருவாக்க முடியும். முதுமை அல்லது நோயால் குழந்தை பெற முடியாதவர்களுக்கு இது உதவும். மேலும், தன்பாலின தம்பதிகளும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெற வாய்ப்பு உருவாகலாம்.
ஆனால், இந்த முறையை கருத்தரிப்பு மருத்துவமனைகளில் பயன்படுத்த மேம்பாடுகள் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம்.
இதை ஒரு முக்கிய முன்னேற்றம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டாலும், இதுபோன்ற அறிவியல் முயற்சிகள் குறித்து பொதுமக்களுடன் வெளிப்படையான விவாதத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
பொதுவாக குழந்தை பெறுவது எளிதான ஒன்று. ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டையைச் சந்தித்து, கரு உருவாகி, ஒன்பது மாதங்களில் குழந்தை பிறந்துவிடும்.
இப்போது விஞ்ஞானிகள் இந்த விதிகளை மாற்றுகின்றனர். இந்தப் புதிய முயற்சி மனித தோலில் இருந்து தொடங்குகிறது.
ஓரிகன் சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உடலை உருவாக்கத் தேவையான முழு மரபணு (டிஎன்ஏ) இருக்கும் தோல் செல்லின் நியூக்ளியஸை (nucleus) எடுக்கின்றனர்.
பின்னர், அதை மரபணு தகவல்கள் நீக்கப்பட்ட ஒரு கருமுட்டையில் வைக்கின்றனர்.
இந்த கட்டம் வரை, 1996-ல் உலகில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கான டோலி ஆட்டை உருவாக்கிய முறையைப் போன்றது இது.
பட மூலாதாரம், OHSU
படக்குறிப்பு, பெரிய வட்டம், நுண்ணோக்கியில் பார்க்கப்படும் கருமுட்டையைக் குறிக்கிறது. கீழே உள்ள வெள்ளைப் புள்ளி, தோல் செல்லில் இருந்து எடுக்கப்பட்டு கருமுட்டையில் வைக்கப்பட்ட மரபணு பொருளாகும்.
46 குரோமோசோம்கள்
ஆனால், விந்தணுவால் இந்த கருமுட்டையை கருத்தரிக்க முடியவில்லை. ஏனெனில் தானமாக பெறப்பட்ட இந்த கருமுட்டைக்குள் ஏற்கெனவே முழு குரோமோசோம்களும் உள்ளன. ஒரு குழந்தை உருவாக, தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் தலா 23 குரோமோசோம்கள் (மொத்தம் 46) தேவை. ஆனால், இந்த முட்டையில் ஏற்கெனவே 46 குரோமோசோம்கள் இருக்கின்றன.
அதனால், கருமுட்டை தனது குரோமோசோம்களில் பாதியை வெளியேற்ற வேண்டும். அதன் பின் தான் கருமுட்டையால் விந்தணுவுடன் சேர முடியும். இந்தச் செயல்முறையை ஆராய்ச்சியாளர்கள் “மைட்டோமியோசிஸ்” என்று அழைக்கின்றனர். (இது “மைட்டோசிஸ்” மற்றும் “மியோசிஸ்” என்ற செல்கள் பிரியும் இரண்டு முறைகளின் கலவை).
‘எதிர்காலத்தில் முக்கியமானதாக இருக்கும்’
நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வு, 82 செயல்படும் கருமுட்டைகள் உருவாக்கப்பட்டதாக கூறுகிறது. அவை விந்தணுக்களால் கருத்தரிக்கப்பட்டன. சில கருமுட்டைகள் கருவின் ஆரம்ப கட்டத்துக்கு வளர்ந்தன. ஆனால், ஆறு நாட்களுக்கு மேல் எதுவும் வளரவில்லை.
“சாத்தியமற்றது என்று நினைக்கப்பட்ட ஒன்றை நாங்கள் செய்துவிட்டோம்,” என்கிறார் ஓரிகன் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கரு உயிரணு மற்றும் மரபணு சிகிச்சை மைய இயக்குநர் பேராசிரியர் ஷௌக்ரத் மிட்டாலிபோவ்.
ஆனால், இந்த செயல்முறை இன்னும் முழுமையாகவில்லை. கருமுட்டை எந்த குரோமோசோம்களை வெளியேற்றுவது என்பதை தற்செயலாகத் தேர்ந்தெடுக்கிறது. நோய் வராமல் இருக்க, 23 வகைகளில் ஒவ்வொரு வகையிலிருந்தும் ஒரு குரோமோசோம் இருக்க வேண்டும். ஆனால், சில வகைகள் இரண்டாகவும், சில வகைகள் எதுவும் இல்லாமலும் இருக்கின்றன.
மேலும், இந்த முறையின் வெற்றி விகிதம் 9% மட்டுமே. குரோமோசோம்கள் ‘கிராசிங் ஓவர்’ என்ற முக்கியமான டிஎன்ஏ மறுசீரமைப்பு செயல்முறையையும் தவறவிடுகின்றன.
“இந்த முறையை இன்னும் மேம்படுத்த வேண்டும்,” என்கிறார் உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் மிட்டாலிபோவ்.
“எதிர்காலத்தில் இது முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் குழந்தை பெற முடியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.”
பட மூலாதாரம், OHSU/Christine Torres Hicks
படக்குறிப்பு, பேராசிரியர் ஷௌக்ரத் மிட்டாலிபோவ்
இந்தப் புதிய தொழில்நுட்பம், ‘இன் விட்ரோ கேமடோஜெனீசிஸ்’ எனப்படும் ஒரு வளர்ந்து வரும் துறையின் பகுதி. இதில், உடலுக்கு வெளியே விந்தணுவும் கருமுட்டைகளும் உருவாக்கப்படுகின்றன.
இது இன்னும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், போதிய விந்தணு அல்லது கருமுட்டைகள் இல்லாததால் செயற்கை கருத்தரித்தல் (ஐவிஎஃப்) மூலம் குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு உதவுவதே இதன் நோக்கமாக உள்ளது.
வயதான பெண்கள், விந்தணு குறைவாக உற்பத்தி செய்யும் ஆண்கள், அல்லது புற்றுநோய் சிகிச்சையால் மலட்டுத்தன்மை அடைந்தவர்களுக்கு இந்த முறை நம்பிக்கை தரும்.
இந்தத் தொழில்நுட்பம் பெற்றோராவதற்கான பாரம்பரிய விதிகளை மாற்றுகிறது. இதற்கு பெண்ணின் தோல் செல்கள் மட்டுமல்ல, ஆணின் தோல் செல்களையும் பயன்படுத்தலாம்.
இதனால், தன்பாலின தம்பதிகள் இருவரும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெற முடியும். உதாரணமாக, ஆண் தம்பதிகளில் ஒருவரின் தோல் செல்களால் கருமுட்டை உருவாக்கி, மற்றவர் விந்தணுவால் கருத்தரிக்கலாம்.
“போதிய விந்தணு அல்லது கருமுட்டைகள் இல்லாததால் குழந்தை பெற முடியாத கோடிக்கணக்கான மக்களுக்கு இது நம்பிக்கை தருவதோடு, தன்பாலின தம்பதிகளுக்கு இருவருடனும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெறும் வாய்ப்பையும் கொடுக்கும்,” என்கிறார் ஓரிகன் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பவுலா அமடோ.
ஹல் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க மருத்துவப் பேராசிரியர் ரோஜர் ஸ்டர்மி, இந்த அறிவியல் முயற்சி “முக்கியமானது” மற்றும் “சிறப்பானது” என்று தெரிவித்தார்.
“இதுபோன்ற ஆராய்ச்சிகள், இனப்பெருக்கத்தில் ஏற்படும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி மக்களுடன் திறந்த உரையாடல் நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை காட்டுகின்றன,” என்று அவர் கூறினார்.
“மக்களின் நம்பிக்கையை வளர்க்கவும், பொறுப்பை உறுதி செய்யவும் வலுவான நிர்வாகம் தேவை என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.”
எடின்பரோ பல்கலைக்கழகத்தின் எம்ஆர்சி இனப்பெருக்க சுகாதார மையத்தின் துணை இயக்குநர் பேராசிரியர் ரிச்சர்ட் ஆண்டர்சன், புதிய கருமுட்டைகளை உருவாக்கும் இந்தத் திறன் “பெரிய கண்டுபிடிப்பு” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாதுகாப்பு குறித்து சில கவலைகள் இருக்கலாம். ஆனால், இந்த ஆய்வு பல பெண்கள் தங்கள் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தைகளைப் பெற உதவும் ஒரு முக்கிய படியாக இருக்கும்,”என்றார்.