கோவை: தமிழகத்தில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் பணிக்கு வராத டாக்டர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.13 கோடி மதிப்பில் 2-வது எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கோவை அரசு மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியின் கீழ் ரூ.13 கோடியில் 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் 2-வது கருவி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கருவியில் ஒரு ஸ்கேன் பரிசோதனைக்கு 20 நிமிடத்திற்குள்ளாகவே ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து கொள்ளமுடியும். இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் ஸ்கேன் பரிசோதனை செய்ய முடியும் என்பதால் காத்திருப்பு காலம் குறையும்.
நரம்பியல், இதய நோய் மற்றும் புற்றுநோயியல் சோதனைகளில் பாதிப்புகளை கண்டறிய உதவியாக இருக்கும். ஜப்பான் பன்னாட்டு நிதி ஆதாரத்தின் கீழ் ரூ.285.96 கோடியில் புதிய பன்னடுக்கு உயர் சிறப்பு மருத்துவ கட்டிடம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் 6-வது தளத்தில் கட்டப்பட்டு வரும் அறுவை சிகிச்சை அரங்கம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. சென்னை மற்றும் மதுரையில் மட்டும் தான் புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் பெட் சி.டி. கருவி இருந்தது. தற்போது கோவை, சேலம், தஞ்சாவூர், காஞ்சிபுரம், நெல்லை ஆகிய 5 இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை, சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் இப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. சுமார் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் நீராவி சலவை வசதிகள் அமைக்கும் பணியும், ரூ.1.65 கோடியில் பழைய மருத்துவமனைக்கு மற்றும் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையும் இணைக்கும் வகையில் இணைப்பு பகுதி கட்டும் பணியும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். கோவை மாவட்டத்திற்கு 72 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அறிவிக்கப்பட்டன. முதல்கட்டமாக 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 49 இடங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையங்களிலும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு உதவியாளர் என நான்கு பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு, 12 மணிவரையிலும், பிற்பகல் 4 மணி முதல் 8 மணி வரையிலும் செயல்பட வேண்டும். கோவை மாநகர பகுதியில் உள்ள 2 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது மருத்துவர்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.
எனவே காலை, மாலை இரண்டு நேரங்களில் மருத்துவமனைகள் இயங்குகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாலையில் மருத்துவமனை திறக்கப்படாமல் இருந்தாலும், தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருப்பவர்களையும் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் செயல்படும் பார்வை நேரம் குறித்த விளம்பர பெயர் பலகைகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதில்லை. அதுபோல இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
டாக்டர்களுக்கு பணி சுமை ஏதும் இல்லை. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பணம் தராமல் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது புகார் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக், மண்டலக்குழுத் தலைவர் மீனாலோகு, வார்டு உறுப்பினர் சுமா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரவீந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.