• Fri. Aug 22nd, 2025

24×7 Live News

Apdin News

“நகை அணிந்து வந்தால் உரிமைத் தொகை கிடைக்காது!” – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கிண்டல் | Minister Sattur Ramachandran sarcastically respond to women over makkal urimai thogai issue

Byadmin

Aug 22, 2025


சாத்தூர்: மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என புகார் தெரிவித்த பெண்களிடம், ‘கழுத்தில் 4 செயின் அணிந்துவரக் கூடாது. நகைகள் அணிந்து வந்தால் மகளிர் உரிமைத் தொகை கொடுக்க மாட்டார்கள்’ என கிண்டலாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இன்று பதிலளித்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. சாத்தூர் அருகே முள்ளிச்சேவல் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் சாத்தூர் ராச்சந்திரன் திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர் அமைச்சரை சூழ்ந்துகொண்டு தங்கள் பகுதிக்கு முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என குற்றம் சாட்டினர். இது தொடர்பாக அதிகாரிகளை அழைத்து உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய அமைச்சர் அறிவுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து, மளிர் உரிமைத் தொகை ரூ.1000 கிடைக்கவில்லை என்று சில பெண்கள் கூறினர். அப்போது அமைச்சர் பேசுகையில், ‘இதற்காக மனு அளித்து விண்ணப்பிக்க வேண்டும். அந்த ரசீதையும் பெற்றுக்கொள்ள வேண்டும். கழுத்தில் 4 செயின் அணிந்து வந்தால் கொடுக்க மாட்டார்கள். கழுத்தில், காதில் நகைகள் உள்ளதையும் குறித்துக் கொள்வார்கள். விரைவில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்,

அதைத் தொடர்ந்து, ஊமத்தம்பட்டி கிராமத்தில் அங்கவன்வாடி மையத்தை திறப்பதற்கு சென்ற அமைச்சரை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்கள் பகுதிக்கு முறையான சாலை வசதி, மயான வசதி மற்றும் குடிநீர் வசதி இல்லை என்று குற்றம் சாட்டினர். மேலும், மகளிர் உரிமைத் தொகையும் கிடைக்கப் பெறவில்லை என்றும் பலர் முறையிட்டனர். உடனடியாக அனைத்திற்கும் தீர்வு காணப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

இதனிடையே, பாஜக மாநில தலை​வர் நயினார் நாகேந்​திரன் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “திட்டங்களைத் தருகிறோம் என்ற பெயரில் மென்மேலும் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது. விருதுநகர் மாவட்டம் அருகே, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வியெழுப்பிய பெண்களிடம் ‘மூக்கு, காதில் எல்லாம் இப்படி நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்க மாட்டோம்’ என திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியிருப்பது சிறிதும் அரசியல் நாகரிகமற்ற செயல்” எனப் பதிவிட்டுள்ளார்.



By admin